ரேஷ்மாவுக்குப் பின்னால் எப்போதுமே ஒரு கூட்டம் இருக்கும். அது சூழ்நிலையைப் பொறுத்து பெண்களா ஆண்களா என்பது தீர்மானிக்கப்படும்! ஸ்நேகிதிகள் என்ற பேரில் பெண்கள் இருப்பார்கள். ஜொள்ளர்கள் கூட்டம் ஒன்று சர்வ நிச்சயமாக இருக்கும்! கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாவது வருடம் படிக்கும் பெண் ரேஷ்மா. துணிச்சல் என்றால் உன் துணிச்சல் என் துணிச்சல் இல்லை! யாருக்கும் பயப்படாத பிறவி! சங்கீதம் போன்ற மென்மையான சங்கதிகளும் சரி கராத்தே போன்ற வன்மையான விஷயங்களும் சரி ரேஷ்மாதான் முதலில்! கல்லூரியில் மாணவ, மாணவிகளின் தலைவி! அது ஆண், பெண் இணைந்து படிக்கும் நேஷனல் கல்லூரி! ரேஷ்மா பி.எஸ்ஸி. முதலாண்டு சேர்ந்தபோது மாணவர் தலைவர் தேர்தல் நடந்தது.