“அம்மா! நான் ஆபீஸ் போயிட்டு வர்றேன்!” வந்தனா புறப்பட்டாள். பெரியவள் கீர்த்தனா உட்கார்ந்து எங்கோ பராக்கு பார்த்தபடி இட்லியை உருட்டிக் கொண்டிருந்தாள். “வந்தனா! கொஞ்சம் உள்ள வா!” “என்னம்மா?” “அருண் நாலஞ்சு நாளா சரியா சாப்பிடறதில்லை! காலை சீக்கிரமே புறப்பட்டு போயிர்றான். நேரம் கழிச்சே வீடு திரும்பறான். முகத்துல சிரிப்பே இல்லை! ஏண்டீ?” “எங்கிட்ட கேட்டா? உள் பிள்ளைதானே? நீயே கேளேன்!” “தோளுக்கு உசந்த பிள்ளை! சுள்ளுனு ஒரு வார்த்தை வந்து விழுந்துட்டா, என்னால் தாங்கிக்க முடியுமா?” “அப்பப் பேசாம. இரு. அண்ணனே சொல்லும்போது கேட்டுக்கோ!” புறப்பட்டுவிட்டாள். அவள் போய் அரைமணி நேரத்தில் அருண் ஆபீசிலிருந்து ஒருவன் வந்தான்.