ஆளுயரக் கண்ணாடியின் எதிரே இருந்தாள் ஸ்டெல்லா. அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்தாள். உள்பாவாடை, ரவிக்கை மட்டும் அணிந்து மேலே ஒரு டவலும் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். தன்னை முழுமையாக ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுக்கே மிதமிஞ்சிய கர்வம் உண்டானது. தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். அம்மா உள்ளே நுழைந்தாள். “ஸ்டெல்லா!” “ம்!” “உனக்கு இன்னமும் சம்பளம் வரலியா?” “வந்தாச்சு!” “நீ இன்னமும் எங்கிட்டத் தரலை!” ஸ்டெல்லா பதில் பேசாமல், ட்வீஸர் கொண்டு தன் புருவங்களை சீராக்கத் தொடங்கினாள். “நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலை!” “ஏன் பணம்... பணம்னு இப்படி பறக்கறே?” எரிச்சலுடன் எழுந்து வந்தாள்.