இந்த நூல் சாதாரணமாக சொல்லப்படாத சத்தியங்களைப் பதிவு செய்கிறது. சமூகத்துக்குள் அடங்கியிருக்கும் கோரமான உண்மைகளையும் தவிர்க்க முடியாத மனித வாழ்வின் சிக்கல்களையும் நேர்மையாக கையாண்டுள்ளாரவர்.
விடுதலை சிகப்பியின் கவிதைகள் ஒருபக்கம் மனித மனத்தைக் கிழிக்கவும், மறுபக்கம் எதிர்ப்பை எரியூட்டவும் செயல்படுகின்றன. இவர் எழுத்துக்கள் வெறும் வரிகளாக இல்லாமல் ஒரு போராட்டத்தின் குரலாக உருமாறுகின்றன.
கடந்து செல்ல முடியாத யதார்த்தங்களையும் மண்ணின் வாசனையையும் உணர்ந்து கொள்வதற்கான ஒரு முக்கியமான படைப்பு!
முற்றாக தமிழ் கவிதைகளின் மரபார்ந்த அழகியலை நீக்கம் செய்து கொண்டு வெளிப்படுகிற எழுத்துமுறை. அவ்வகையில் இத்தொகுதியை எதிர் கவிதைகளின் தொகுப்பாகக் கொள்ளலாம். நிறைய கவிதைகள் சீண்டுகிற நடையில், கருப்பொருளில் இருப்பதாய்த் தோன்றலாம். ஆம். இது கலகம் செய்கிற எழுத்தே. ஆனால் ஈராயிரமாண்டு குரல்வளை நசுக்கப்பட்டிருந்த மனிதர்களின் நா எழுந்து பேச்சு வெளிப்படுவதை மனதில் கொள்கையில் இத்தொகுப்பை, அதன் நோக்கத்தை (இறுதி கவிதையின் கடைசி வரிகளே வெளிப்படையாக அதையும் சொல்லி விடுகின்றன.) விளங்கிக் கொள்ள முடியும்.