சில்லென்று மழை காற்று வீசியது. சிறு தூறலாக ஆரம்பித்த மழை, சடச்சடவென்று பெரும் மழையாக கொட்ட ஆரம்பிக்க, சூடான டீ கப்புடன் பால்கனிக்கு வந்த சுதாகர், அங்கிருந்த மோடாவில் ‘டீ’ கப்பை வைத்து அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு உட்கார்ந்தான். சாரல் மழை லேசாக அவன் மீது விழ, மழையை ரசித்தவாறே டீயை ருசிக்க ஆரம்பித்தான். பாக்கெட்டிலிருந்த செல்ஃபோன், இசையுடன் அழைக்க, திரையில் அம்மா பவித்ரா சிரித்தபடி இருந்தாள். “அம்மா உனக்கு நூறு ஆயுசு. இப்பதான் உன்னை நினைச்சேன். எப்படிம்மா இருக்கே ...” “நான் நல்லா இருக்கேன். அங்கே மழை பெய்யுதாப்பா...” “ஆமாம்மா” “டீ கப்போடு மழையை ரசித்தபடி பால்கனியில் உட்கார்ந்திருப்பே கரெக்டா” சிரிப்புடன் கேட்டாள்.