தமிழக அரசியல் என்றைக்குமே மந்தமாக இருந்ததில்லை, அது முதல் தேர்தலில் இருந்தே சுவாரசியமும் உற்சாகமும் கூடவே பல திருப்புமுனைகளும் கொண்டது. இந்திய அரசியலில் பெரிய அளவு செல்வாக்கை தமிழக அரசியல் தலைவர்கள் செலுத்தியுள்ளார்கள் என்பது இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் புலப்படுகிறது. படிக்கச் படிக்கச் ஆச்சர்யத்தை தூண்டிக் கொண்டே இருக்கிறது அண்ணன் அவர்களின் எழுத்து. அதையும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமர்ந்து படித்தது கூடுதல் மகிழ்ச்சி.
முதல் தேர்தலில் இருந்தே தமிழக அரசியல் பெரியாரை சுற்றியே நடந்தேறியுள்ளது, ஓமரத்தூர் ராமசாமிக்குள் ஒரு பெரியார் ராமசாமி இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்த போதே இது தொடங்கி விட்டது. அதன் பின் பெரியாரின் கமராஜர் ஆதரவு, திமுக விமர்சனம், 1967 வெற்றிக்கு பின் அண்ணா பெரியாரை சந்தித்தது, கலைஞரை முதலைமைச்சராக்க தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது, திமுக பிளவை எதிர்த்தது என பெரியாரின் தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைக்கும் ஏதோ ஒரு வகையில்.
அதே போல் மாற்று மாற்று என கமல் ஹாசன், சீமான் போன்ற அரசியல் கோமாளிகள் தேர்தல் வந்தால் மட்டும் வெளிவருகிறார்கள், வரலாற்றிலும் அப்படி தான். இதை தாண்டி கம்யூனிஸ்டுகளின் இடத்தை திமுக பிடித்தது தேர்தல் அரசியலுக்கு பிறகு தான், கம்யூனிஸ்டுகளும் தங்களை உறுதிப்படுத்த கொள்ள தவறிவிட்டார்கள், தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுமைக்கும் இது தான் நிலை.
சமூக நீதி அரசியல் என்பதும், மக்கள் நல திட்டங்கள் என்பதும் தமிழக அரசியலின் ரத்தத்தில் ஊறியது என்று தான் சொல்ல வேண்டும், யார் ஆட்சியில் இருந்தாலும் அதை கடைபிடித்து தான் வந்துள்ளார்கள். தங்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் தமிழக நலன் சார்ந்த உரிமை சார்ந்த போராட்டங்களில் அவர்கள் ஓரணியில் நின்று தான் எதிர்கொண்டுள்ளார்கள்.(எம் ஜி ஆர் அதிமுகவை தொடங்குவதற்கு முன் வர இது தான் நிலவரம் ).
1972 இல் தனி கட்சியை தொடங்குகிறார் எம்ஜிஆர், அது வரை கொள்கையை பேசி கொண்டிருந்த தொண்டர்கள், இந்த நிகழ்வுக்கு பிறகு தனிமனித துதி பாட தொடங்கி விட்டார்கள். இதன் காரணமாக பல பிளவுகள் நிகழ்ந்தன ஒரு கட்டத்தில் பல முன்னணி தலைவர்கள் அதிமுகவிற்கு சென்று கொண்டிருந்தார்கள்.
அதிமுகவிற்கு என்று தீர்க்கமாக ஒரு கொள்கை இருந்ததே இல்லை,கட்சி ஆரம்பித்து சில மாதங்களுக்கு பிறகு தான் கொள்கையை அறிவித்தார் எம்ஜிஆர், அவர் சொன்னது “அண்ணாயிசம்”. அதற்கு அர்த்தம் இவருக்கே தெரியாது. மாநில சுயாட்சிக்கு அவர் குடுத்த விளக்கம் கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதற்கு நிகரானது. “We want neither independence nor dependence but inter-dependence” என்று கட்சியை அன்றைக்கே இந்திரா காந்தி அம்மையாரிடம் அடகு வைத்தது தனி சிறப்பு. எமர்ஜென்சியை ஆதரித்த ஒரே கட்சி தமிழகத்தில் அதிமுக மட்டும் தான். எமெர்ஜென்சியை காரணம் காட்டி அதிமுக, அஇஅதிமுக ஆனது. இன்னொரு பக்கத்தில் திமுக ஆட்சி கலைக்க பட்டது,காரணம் எமெர்ஜென்சி எதிர்ப்பு.
சுதந்திரம் முதல் எமெர்ஜென்சி வரை தமிழக அரசியலில் நிகழ்ந்த மாற்றங்களை இந்நூல் காலவரிசை அடிப்படையில் விளக்குகிறது. இரண்டாம் பாகம் வாசிப்பில் உள்ளது படித்து விட்டு அறிமுகம் எழுதுகிறேன்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இக்காலகட்டத்தில் , இது போன்ற வரலாறுகளை புரிந்து வைத்துக்கொள்வது அவசியமானது. நமது வேர்களை அறிய வரலாறு படிப்போம்.
புத்தகம்: தமிழக அரசியல் வரலாறு -பாகம் 1
ஆசிரியர்: ஆர் முத்துக்குமார்