தமிழ்மகன் எழுதிய இந்தப் புத்தகத்தை அறிமுகப்படுத்தி, நான் கடந்து வந்த முகப்புத்தகப் பதிவை எழுதியவர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. நல்ல புத்தகங்களை பரிந்துரை செய்பவர்களுக்கு நன்றிகள் கூறத்தான் வேண்டும். எனவே அந்த நினைவில் இல்லா நண்பர்களுக்கு நன்றிகள்.
திராவிட இயக்கங்களின் வரலாற்றால் இரண்டு குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்று இந்த நூலிற்கான சுருக்கத்தை பார்த்ததும் ஆர்வம் வந்து விட்டது. என்னதான் ஊரிலே அங்காளி பங்காளிகளெல்லாம் திமுக. அதிமுக என்று பிரிந்து கட்சிகளுக்காக திரிந்தாலும் இவர்களுக்கு கிடைக்காத ஒரு அங்கீகாரம் தி.க தொண்டர்களுக்கு உண்டு. தி.க என்பது கிட்டத்தட்ட எல்லோரது இனிஷியல் ஆகவே மக்களிடையே பேச்சுவழக்கில் மாறிப்போவதுண்டு. கொஞ்சம் வரலாற்றை தோண்டிப் பார்த்தால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கட்சிக்கு முதலில் ஒருவர் ஈர்க்கப்பட்டு அவரின் தாக்கத்தால் ஊரில் அந்த கட்சிக்கு செல்வாக்கு வளர்ந்திருக்கக் கூடும். அது போல ஊரில் முதல் தொண்டர்கள் வருகிறார்கள் இந்த புத்தகத்தில்.
வரலாற்று நிகழ்வுகளையும். கற்பனையையும் பயணம் செய்ய வைத்து, உண்மையான வரலாற்று நிகழ்வுகளால் இந்த கதாபத்திரங்களின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள், நடந்த நிகழ்வுகளுக்கு இவர்களின் பங்களிப்பு, இது போன்று அமைந்தது Kane and Abel எனும் ஆங்கில நாவல். வெட்டுப்புலியிலும் அப்படி கதாப்பதிரங்கள் இருந்தாலும், நிஜ வரலாற்று நிகழ்வுகளே இவர்கள் வாழ்வில் திருப்பங்கள் ஏற்படுத்துவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கதையின் ஆரம்பம் ஒரு தீபெட்டியின் அட்டையிலுள்ள புகைப்படம், அந்த வெட்டுப்புலி ஓவியத்தில் இருப்பவரின் கதையை அறிந்துகொள்ள ஆரம்பிக்கும் தேடல், இரு குடும்பங்களின் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு வரலாற்றை திருப்பி பார்க்கிறது.
பத்து பத்து வருடங்களாக நகரும் கதை, ஒவ்வொரு மாற்றத்தையும் போகிற போக்கில் கடந்து விட்டு போகிறது. தொலைந்து போன நெடுஞ்சாலை, கிராமங்களை அழித்து நகரத்தாரின் குடிநீர் தேவைக்காக உருவாக்கப்படும் ஏரி, ட்ராம் வண்டி, ஊமைப்படம், பேசும் படம், மின்சார வசதி, அக்கால கிராமவாசிகள் நகரவாசிகளின் வேறுபாடுகள், எல்ல��� சாமானும் போடக்கூடிய நெகிழிக் காகிதங்கள்அறிமுகம், ஆற்றுமணல் அள்ளுதல், இப்படி நமக்கு வரலாறு ஆகிப்போன பல விஷயங்களை அந்த காலத்தின் பார்வையில் கால இயந்திர பயணம் போல காட்டுகிறார்.
\ கதையின் ஊடே அந்தந்த காலகட்டத்து கட்சிகளும் அதனதன் கொள்கைகளும் வந்து போகின்றன. சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், புலிகள் ஆதரவு என தொடர்கிறது. இந்த கதையின் நடுவே தமிழ்நாட்டின் அரசியல் வரலாறும் ஒளிந்திருக்கிறது.