நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது. இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது. புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான். வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம். நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது. தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன. மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
நிமித்தம், நான் பல முறை படித்த புத்தகம் மட்டுமல்ல என்றெல்லாம் யாரையெல்லாம் தனிமை வாட்டுகிறதோ அப்போதெல்லாம் அவர்களெல்லாம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.
தேவராஜ் என்ற காதுகேளாத முதிர் இளைஞனின் திருமண நாளின் முன் இரவில் கதை தொடங்குகிறது. தன் திருமணத்துக்கு தன் நண்பர்களை எதிர்பார்க்கிறான். யாருமே இல்லை. மாப்பிள்ளையின் தோழர்களாக வந்து திருமண நாளைக் கொண்டாட வேண்டிய அவன் வயது ஒத்த சகாக்கள் எல்லாரும் அப்பாக்களாகவும் தாத்தாக்களாகவும் மாறிவிட்ட உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் அவன் தன் நண்பர்களுக்காகக் காத்திருக்கிறான். எல்லோரும் காலையில் வரக்கூடும் என பொய்யாகச் சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.
அவன் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. ஜூரம் வந்து காது கேட்காமல் போனது, பாடத்தைக் கேட்க முடியாமல் ஆசிரியரிடம் அடிவாங்கியது, டமாரம் என்று சுற்றியிருப்பவர்களால் அவமானப்படுவது, ஆறுதல் தேடி அலைவது என கதை நகர்கிறது. காதலும் காமமும் ஏமாற்றங்களின் தழும்புகளாக அவனை வதைக்கின்றன.
நாவல் நெடுக்க தத்துவார்த்தமான வார்த்தைச் சித்திரிப்புகள். தேவராஜுக்கு வரும் கனவு வினோதமானது. வாரத்தின் ஏழு நாட்களைக் கொண்ட சீட்டுக்கட்டு விளையாட்டு ஒன்றை விளையாடுகிறான். நமக்குத் தேவையற்றை கிழமைகளை எடுத்துப் போட்டு விளையாடும் விளையாட்டு அது. மனிதர்கள் கிழமைகளோடு தங்களைச் சம்பந்தப்படுத்தியபடிதான் வாழ்கிறோம். வார இறுதி, வார விடுமுறை, வாரத்தின் முதல் நாள் என தினமும் விடுமுறையைத் துரத்தியபடியே இருக்கும் வாழ்க்கை விளையாட்டு அது.
மனோதத்துவ டாக்டரிடம் சிகிச்சைக்குச் சேர்க்கப்படுகிறான் தேவராஜ். அவர் கேட்கும் கேள்விகளும் தேவராஜ் சொல்லும் பதில்களும் தத்துவச் சுவைக்குச் சான்று. டாக்டர் ஒரு வட்டம் வரையச் சொல்கிறார். தேவராஜ் வட்டம் வரையப் பிடிக்காது என்கிறான்.
ஏன் என்கிறார் டாக்டர். ‘அது எங்கு ஆரம்பிக்கிறதோ அங்கேயே முடிந்துவிடுகிறது. அதனால் அது பிடிப்பதில்லை’ என்கிறான்.
‘எனக்கு மேகம் பிடிக்கும். ஏனென்றால் அவை ஒன்றுபோல இன்னொன்று இருக்காது’ என்கிறான். ராமகிருஷ்ணனின் முந்தைய நாவல்களில் இருந்து வித்தியாசப்படும் எளிமையான மொழியில் சரசரவென ஓடும் நடை.
புலன் இழந்த சோகம் ஒருவனை எப்படி எல்லாம் அலைக்கழிக்கும் என்பது நாவல் முழுக்க காயம் சிந்தும் ரத்தமாக ஓடுகிறது. மதம் மாறினால் தீர்வு கிடைக்குமா என்று யோசிக்கிறான், கடவுளிடம் தஞ்சம் புகுந்தான் மகிழ்ச்சி கிடைக்குமா என தவிக்கிறான், கடவுள் இல்லை என்ற பகுத்தறிவு பலன் தருமா, காதல் தீர்த்து வைக்குமா, காமம் வடிகாலாகுமா என வாழ்வின் எல்லா சந்தர்ப்பங்களையும் பிரயோகித்துப் பார்க்கிறான். துயரங்கள் அவற்றுக்கே உரிய சுயபலத்தோடு எல்லாவற்றையும் வெல்கின்றன.
நிறைய சம்பவங்கள், நிறைய மனிதர்கள். நாவலின் மிகப்பெரிய பலம் அது. சரித்திர பூர்வமாக பல செய்திகளை நாவலின் வழியே சொல்லிச் செல்கிறார். காந்தி, நேரு, இந்திரா, எமெர்ஜென்ஸி, இலங்கை யுத்தம், அகதிகளாக வந்தவர்கள் என வரலாற்றின் இழை, நாவலைக் கால் ஊன்ற வைக்கிறது.
காந்தி பக்தர் ராஜாமணி கொல்லப்பட்ட கதை. பர்மாவில் இருந்து செட்டியாரால் அழைத்துவரப்பட்ட புவன்ஸ்ரீக்கு விக்கல் நின்ற கதை. வீமன் சொல்லும் ஆவிகள் கள்ளு குடிக்கும் கதை. சுதர்சனம் சார், அங்கையற்கண்ணி டீச்சர் காட்டும் அன்பின் கதை. கிரேசம்மா சொல்லும் அசையாத மரங்களின் கதை. வண்டிப் பேட்டை தம்பையா சொல்லும் ‘ஆண் கிணறு பெண் கிணறு’ கதை என எத்தனைக் கிளைக் கதைகள்?
ஜோஸ்லின் சிந்தியா, சவீதா காதல் பூக்க வைத்த பெண்கள், தேவராஜுக்குக் கை கூடாத சோகம் விரக்தியின் உச்சத்தில் அவனைத் தள்ளுகிறது. கணவனை இழந்த நர்ஸ் ஒருத்தி இறுதியாக வாழ்க்கைத் துணையாகத் தேர்வாகிறாள்.
திருமண மேடையில் வந்து அமர்கிறான் தேவராஜ். கடந்த காலத்தைவிட எதிர்காலம்தான் பயமுறுத்துவதாக இருக்கிறது. அந்தப் புள்ளியில் கதை முடிகிறது. உண்மையில் கதை தொடங்கும் புள்ளியோ என்ற அச்சம் நம்மையும் தாக்குகிறது.
எல்லாம் கடந்து போகும் வாழ்க்கையின் சுவாரஸ்யமும் குரூரமும் கலந்த வாழ்வின் நிமித்தம்.
Strictly for S. Ramakrishnan's fans. The story is all about Devaraj, a hearing impaired person from lower strata of society and how his life traverses. The plot just walks us through the various phases of his life, till his wedding day, in his 47th year. Actually the story open in this event and traces his life in flash back - his relationship with his father, grandfather, his school days. The story lacks pep and momentum is extremely slow paced and like any of his works sets a tone of melancholy and dullness in readers.
சோகத்தின் உச்சகட்டம். புறக்கனிப்பின் ஒவ்வொரு வலியும், வேதனையும் நம்மை கரைய வைக்கிறது. ஒரு வெறுமையான முகத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை திரையிட்டு காட்டுகிறது. படிப்பதற்கு நன்றாக இருந்தாலும் கதையில் வரும் தேவராஜ் எனும் கதாப்பாத்திரம் போல நானும் சோகச்சாயத்தை பூசியபடியே இருந்தேன். நல்லவேளையாக முடித்துவிட்டேன்.
எஸ்.ரா அவர்கள் கிரேக்க துயரவியல் (Greek tragedy) நாடகங்களை (Oedipus by Sophocles) பற்றி சிலாகித்து பேசும் காணொளிகளை கேட்டிருக்கிறேன்.
இது நம் ஊரில் நடக்கும் ஒரு melancholy drama. எல்லா மனிதர்களாளும் ஒரு முழமையடைந்த வாழ்வை சுவைக்கமுடியாது. அப்படியான சமூகத்தாலும் குடும்பத்தாலும் புறக்கணிக்கப்பட்ட காதுகேளாத தேவராஜ் என்பவனின் கதை. தனது 47வது வயதில் நடைபெறும் திருமணத்தின் முதல் நாள் இரவு, தான் சிறுவயது முதல் கடந்து வந்த பாதையை அசைபோடுகிறான்.
நம்மில் பலரைப்போல், தன்னை முழுமையாக யாரிடமாவது ஒப்படைத்துக்கொண்டு வளர்ப்பு நாயை போல வாழ்ந்துவிட யத்தனிக்கும் ஒருவனைப்பற்றிய கதை.
கதையின் இடையில் வரும் செவிவழி நாட்டுப்புறக்கதைகள் (folklore) அருமை.