ஆலம் - ஜெயமோகன்
எனக்குத் தெரிந்து தமிழில் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு நாவல்கள் எழுதப்படுவது மிக அரிது. நான் வாசித்த வரையில் கல்கி, சாண்டில்யன், சுஜாதா, இந்திரா சௌந்தர்ராஜன் போன்ற மிகச்சிலரே ஓரளவு நல்ல பொழுதுபோக்குக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் குழந்தைகள் அல்லது பதின் பருவத்தினர் வாசிக்கக் கூடிய அளவில்தான் இருக்கின்றன. அவற்றைக் கடந்தால் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் போன்ற உலகத்தரம் வாய்ந்த இலக்கிய ஜாம்பவான்களின் நூல்களே இங்கு கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை வாசித்து, சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் நாம் பல சாகசக் கதைகள், துப்பறியும் கதைகள், திகில் கதைகள், அறிவியல் புனைவுகள் போன்றவற்றை வாசித்து, ஓரளவு திறந்த மனமும், பரந்த பார்வையும் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தமிழில் அதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. பொன்னியின் செல்வனுக்குப் பிறகு பலர் வாசிப்புப் பழக்கத்தை கைவிட இதுவே ஒரு முக்கியக் காரணம்.
அந்தக் குறையைத் தீர்ப்பதற்கான ஒரு ஆரம்பப் புள்ளியாக, இந்த 'ஆலம்' நாவல் இருக்கலாம். இலக்கியத்துக்கான சிறப்பம்சங்கள் எதுவுமே இல்லாத, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே எழுதப்பட்ட ஒரு நாவல். அதனை ஜெயமோகன் போன்ற ஒரு இலக்கிய ஆளுமை எழுதியிருப்பது பெரிய ஆச்சரியமே.
கதை, திருநெல்வேலியில் நடக்கிறது. பல ஆண்டுகளாக நெல்லையில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் வன்முறையே கருப்பொருள். தலைமுறை தலைமுறையாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே பழிக்குப் பழியாக பல உயிர்கள் கொல்லப்படுகின்றன. அவற்றை பெருமை எனக் கருதி அந்த இரண்டு குடும்பங்களும் போட்டி போட்டு கொலைகளை அரங்கேற்றுகின்றன. இந்த இரத்த வெறியாட்டத்தில் எதிர்பாராத வகையில் ஒரு அப்பாவியின் உயிர் தவறுதலாக பறிபோகிறது. அதை ஒரு பொருட்டாகவே கருதாமல் அடுத்தடுத்த கொலைகளுக்கு நகர்கின்றன அக்குடும்பங்கள். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் இரத்தவெறி பிடித்த அந்தக் கூட்டமே பயந்து அலறும் வகையில், அந்த அப்பாவியின் சாவுக்குக் காரணமான அத்தனை பேரும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு, ஒரு வம்சமே அழிக்கப்படுகறது. இதைச் செய்பவர் உண்மையில் வாழும் ஒரு மனிதனா, அல்லது பிசாசா, அல்லது கடவுளா எனத் தெரியாமல், மிச்சமிருக்கும் ஒரு உயிரைக் காப்பாற்ற மன்றாடுகிறது அந்தக் கொலைகாரக் குடும்பம்.
இதிகாசக் கதை போன்ற தொனியைக் கொண்டிருந்தாலும், இன்றைய சூழலோடு இயல்பாகப் பொருந்துகிறது இந்தக் கதை. ஒரு பக்கம் இரத்தம் தெறிக்கும் வன்முறை, இன்னொரு புறம் விறுவிறுப்பான துப்பறியும் படலம், பரபரப்பான கதையோட்டம் என கடைசிப் பக்கம் வரை பறந்து செல்கிறது கதை. இடையிடையே வரும் பூஞ்சைகள் பற்றிய ஒப்பீடுகள் அட்டகாசம். பகைக்கு நடுவில் வாழும் ஒரு கதாபாத்திரத்தின் பார்வையில் இல்லாமல், அதைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் வழக்கறிஞரின் பார்வையில் கதையைச் சொல்லியிருப்பது கூடுதல் சுவாரசியம். கதைக்குத் தேவையில்லாத, தொடர்பற்ற ஒரு வாக்கியம் கூட இல்லாமல் இருப்பது தனிச்சிறப்பு. ஒரு பொழுதுபோக்கு நாவலில் இதெல்லாம் அடிப்படைத் தேவைதான் என்றாலும், தமிழில் இவ்வாறு எழுதப்படுவது மிக அரிது.
இப்படிப்பட்ட கதைகளுக்கு சரியான முடிவை எழுதுவது மிக முக்கியம். கொஞ்சம் தவறினாலும் மொத்தக் கதையையும் அது கெடுத்துவிடும். ஆனால் இந்தக் கதையின் முடிவு மிகவும் கச்சிதமாக, எதிர்பாராத வகையில் இருந்தது.
பெரிதாக ஒத்துப்போகாத திருநெல்வேலி வட்டார வழக்கு, கதை நிகழும் காலகட்டம் பற்றிய சிறிய குழப்பம் போன்ற சிறு குறைகளும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்ற, அல்லது இதைவிடச் சிறப்பான பல பொழுதுபோக்கு நாவல்களைப் படித்திருந்தாலும், தமிழில் இப்படி ஒன்றை வாசிப்பது அலாதியான அனுபவமாக இருந்தது.
இந்த நாவல், வெற்றிமாறன் - மிஷ்கின் - கவுதம் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கவிருந்த ஒரு இணையத் தொடருக்காக எழுதப்பட்டது என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் என்னைக் கேட்டால் இதனை இயக்க இவர்கள் மூவருமே சரியான ஆட்கள் இல்லை. சசிக்குமார் அல்லது கிடாரி படத்தை இயக்கிய பிரசாத் முருகேசன் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கலாம். சரியான திரைக்கதை வசனங்களோடு இந்தக் கதையை உருமாற்றம் செய்தால், 8 - 10 எபிசோடுகளைக் கொண்ட ஒரு உலகத்தரமான தொடர் நமக்குக் கிடைக்கும்.
டாரண்டினோ படத்தை தமிழில் வாசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்நாவலை நான் பரிந்துரைக்கிறே��்.