“அத்தே! எனக்கு டயமாச்சு! டிபன் எடுத்து வை!” அருணா பரபரப்புடன் உடைகளை மாற்றிக் கொண்டு உணவு மேஜைக்கு வந்தாள். “வந்துட்டேன் அருணா” அத்தை சூடு பறக்கும் இட்லிகளை எடுத்துக் கொண்டு வந்தாள். “ரெண்டு வை அத்தே!” “சூடா இருக்கு. உனக்குப் புடிச்ச தக்காளிச் சட்னி அரைச்சிருக்கேன். இன்னும் ரெண்டு சாப்பிடு!” “இல்லை அத்தே! நீ பாட்டுக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டுர்ற சதை போடத் தொடங்கியாச்சு எனக்கு. கொஞ்சம் காலைல ஜாகிங் போகணும்.” “பொம்மனாட்டி கொஞ்சம் பூசினமாதிரி இருந்தாத்தான் அழகு! எலும்பும், தோலுமா இருந்தா என்ன வசிகரம்?” அருணா மொபெட் சாவியை எடுத்துக் கொண்டாள். “ஆபிஸ்ல நிறைய வேலை! சாயங்காலம் ஏ.ஜி.யெம் கூட மீட்டிங். வர ராத்திரி ஒன்பதாகும்.