இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 1987க்கும் 1992 ஜனவரிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆங்கில மொழியில் எழுதப்பட்டவை. முன்னாள் சோவியத் யூனியனில் ஆரம்பித்து பின்னர் மத்திய ஐரோப்பாவுக்கும் கிழக்கு ஐரோப்பாவுக்கும் பரவிய அரசியல் மாற்றங்கள் அந்த அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி முழு உட்லகுக்குமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இக்கட்டுரைகள் எழுதப்பட்டன. இந்த மாற்றங்களை மிகுந்த கரிசனையோடும் விசாரணை உணர்வுடனும் நோக்கி அவற்றின் அடிப்படைகளை அவ்வப்போது விளக்க முயன்றேன். அதன் பெறுபேறுகளை இந்த நூலில் காணலாம்.
இப்போது இக்கட்டுரைகள் சிங்களத்திலும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. இலங்கை வாழ் சிங்கள, தமிழ் வாசகர்கள் பெரஸ்ரோய்க்காவைத் தொடர்ந்து ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றப் போக்குகளைப் பற்றிய அறிவையும் தகவல்களையும் பெற்றுக் கொள்ள உதவுவதே இதன் நோக்கமாகும். சிங்கள, தமிழ்ப் பத்திரிகைகளில் இந்த அபிவிருத்திகள் தொடர்பாக வெளியிடப்படும் செய்திகள் இவை பற்றி வாசகர்களுக்கு ஒரு விசயஞானமுள்ள விளக்கத்தை தரக்கூடிய அளவு விரிவானவையல்ல. தவிரவும் சிங்களத்திலும் தமிழிலும் இதுபற்றி எழுதிய அல்லது விவாதித்த அரசியல் விமர்சகர்கள், முன்னாள் சோவியத் முகாமில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் இப்போது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படவேண்டியுள்ள பழைய கோட்பாடுகள், சூத்திரங்கள் ஆகியவற்றின் மீது கொண்ட விசுவாசத்துடனேயே அவற்றைப் பெரிதும் அணுகியுள்ளனர்.
இந்தக் கட்டுரைகளில் அத்தகைய ஒரு மறு சிந்தனையின் அவசியத்தை நான் வலியுறுத்தியுள்ளேன். அதேவேளை நானே எனது சிந்தனைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தியும் உள்ளேன். இந்த நூலைப்படிக்கும் போது வாசகர்கள் ஆரம்பத்தில் எழுதப்பட்ட சில கட்டுரைகளுக்கும் அண்மைக்காலத்தில் எழுதப்பட்டவற்றுக்கும் இடையே நோக்குநிலையில் சில மாற்றங்களைக் காணமுடியும். இந்த மாற்றங்கள், முடிவுறா நிகழ்வுகளை அவதானித்து ஆராய்ந்ததன்மூலம் எனது சொந்தக் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட பரிணாமத்தைப் பெற்றதன் விளைவாகும். இந்தக் கட்டுரைகளை நூலுருவாக்குகையில் எனது தற்போதைய நிலைகளுக்கேற்ப ஆரம்பத்தில் எழுதப்பட்டவற்றில் மாற்றங்கள் எதையும் செய்ய நான் முயலவில்லை. நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கை புறநிலையாக, விருப்பு வெறுப்பின்றி விளங்கிக் கொள்ள ஒர் அரசியல் அவதானி மேற்கொண்ட முயற்சியைக் காண்பதில் வாசகர்கள் ஆர்வம் காட்டக்கூடும் என்ற நம்பிக்கையுடனேயே இந்தக் கட்டுரைகளை அவற்றின் மூலவடிவத்தில் அப்படியே தருகிறேன்.
சோவியத் யூனியனில் 1938ல் தேசத்துரோகக் குற்றச்சாட்டின்பேரில் மரணதண்டனை விதிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தேகாந்த நிலையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிக்கோலாய் புக்காரினது அவலம் பற்றி 1988ல் நான் எழுதிய சிறு நாடகம் ஒன்றும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்ய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு கடிதங்களும் இடம் பெறுகின்றன. ஒரு கடிதம் புக்காரினின் மனைவிக்கு (இந்த நாடகத்தில் அவரும் ஒரு பாத்திரம்) இந்த நாடகப் பிரதி ஒன்றை அனுப்பியபோது நான் எழுதியது; மற்றது அவரது பதில். இந்த நாடகத்தின் ஆங்கில மூலவடிவம் 1988 செப்டெம்பரில் கொழும்பில் ஒரு நாடகப்படுத்தப்பட்ட வாசிப்பாக மேடையேற்றப்பட்டது. காலம் சென்ற திரு. றிச்சாட் டி சொய்சா அதனைத் தயாரித்தளித்தார். அதில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்தவரும் அவரே.
— றெஜிசிறிவர்த்தன.