2013ல் வெளிவந்த சிறார் இலக்கியக் குறுங்கதை நூலிது. கடிகாரத்தைப் பற்றிய கதையில் அதைத் தாண்டிப் பலவற்றைச் சிறார்களுக்கு மட்டுமன்று பெரியவர்களுக்கும் கூறுகிறார் ஆசிரியர் விழியன்
ஆம் சிறார் இலக்கிய நூல்கள் சிறார்களுக்கு மட்டுமானவையல்ல. சிறார்களை நம்பிக்கை கொள்ள வைப்பது பெற்றோர் பொறுப்பு. இக்கதையில் வரும் சிறுவன் தீமனின் தந்தை அத்தகையவர். எங்கு நெருங்க வேண்டும் எங்கு விலக வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறார்
குழந்தைமையை நெருங்குவது பெற்றோரினும் முதியோர்க்கு எளிதாக வாய்க்கிறது. சிறுவர்களுக்குத் தாத்தா பாட்டி அதிகநெருக்கம் அதிகச்செல்லம் என்று அறிவோமல்லவா. சிறார்களை எளிதில் உடன்பட வைக்க முதியோரால் முடிகிறது. இக்கதையில் வரும் சிறுவனுக்கும் அப்படி 2 தாத்தாக்கள் கிடைக்கின்றனர்
ஏட்டுக்கல்வி மட்டுமே வாழ்க்கைக்குதவாது கலைகள் மனதை இலகுவாக்கி மகிழ்விக்கின்றன முன்னோர் சொன்னதால் மூச்சடக்கிக் கேட்டாக வேண்டும் என்றில்லை. ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளின் வழியாகவே உலகம் மேம்படுகிறது
போன்ற கருத்துக்களைப் பெற்றோர்க்கும் சிறார்க்கும் கூறுகிறது இந்நூல்
ஊசல் கடிகாரம் கடிகாரத்தின் இயங்குமுறை நேரத்தைக் கணக்கிடுதல் அடிக் கணக்கை எப்படி எளிதாக விளங்கிக் கொள்வது நீர்மூழ்கிக்கலம் ஞாயிறு எழுவதையும் விழுவதையும் ஒரே இடத்தில் நின்று பார்த்தல்
பற்றியவை இக்கற்பனைக் கதைக்கிடையே சிறார்களின் அறிவைத் தூண்டிச் சிந்திக்கச் செய்யும் பகுதிகள்
Origami கலையை அறிமுகப்படுத்திக் கல்விபயில்தல் மட்டும் போதாது கலைபழகலும் தேவை என்றும் அவ்விரண்டையும் தாண்டி வாழ்விற்கு உலக அறிவும் தேவை என்றும் கதைவழி கூறுகிறது நூல். இவ்வனைத்தையும் இங்கு நான் கூறியதுபோல் பாடம் நடத்துவது போல் அல்லாமல் சிறார்களை ஈர்க்கும் வண்ணம் கூறுகிறது
நூலிறுதியில் சேர்க்கப்பட்டுள்ள தரவுகள் சிறார் நூல் என்பதால் கற்பனையில் தோன்றியதை மட்டும் கட்டிக் கதை எழுதாமல் அதனூடே எத்தனை உலகளாவிய நிலவியல் & வரலாற்று உண்மைகளைப் பொதிந்து வைத்துள்ளார் ஆசிரியர் என்பதைக் காட்டுகிறது. அவற்றுள் பெரியோர் அறியாச் செய்திகளும் பல உள
அதெல்லாம் சரி. மாகடிகாரத்தைப் பற்றி எதுவுமே கூறவில்லையே என்கிறீர்களா? மாகடிகாரத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாதென்று தொடக்கத்திலும் முடிவிலும் கூறுகிறது கதை. ஆகையால் நீங்கள் படித்துத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். படித்தபின் நீங்களும் யார் கேட்டாலும் சொல்லக்கூடாது. சரியா?