நூறு சிறந்த சிறுகதைகள் – எஸ். ராமகிருஷ்ணன்
தமிழ் இலக்கியத்தில், பரிந்துரைகள், ரசனை சார்ந்த பட்டியல்கள் மற்றும் விமர்சனங்கள் வழியாக சிறந்த இலக்கியங்களை அடையாளம் காண்பது ஒரு நீண்டகால மரபு. க.நா.சு. இதுபோன்ற பல பட்டியல்களை உருவாக்கி, ரசனையும் விமர்சனப் பார்வையும் கலந்த வகையில், பல இலக்கிய அறிமுகங்களை தொகுத்து வாசகர்களுக்குத் தந்துள்ளார். இதுபோலவே, பல எழுத்தாளர்கள் தங்கள் வாசிப்பு அனுபவமும், ரசனையும் வழியாக வழிகாட்டி, சிறந்த இலக்கியங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் பல பட்டியல்களைத் தொகுத்து வழங்கியுள்ளனர்.
அந்த வரிசையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், இளம் வாசகர்களுக்காகத் தமிழின் சிறந்த நூறு சிறுகதைகளை அடையாளம் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டதே - நூறு சிறந்த சிறுகதைகள் தொகுப்பு.
இந்த 100 சிறுகதைகள் மூலம், புதுமைப்பித்தனில் தொடங்கி தமிழ் இலக்கியத்தின் தற்கால சிறுகதைகள் வரையிலான ஒரு பயணத்தை — “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்றபடி தமிழ் சிறுகதைகளின் பரிணாம வளர்ச்சியைக் காட்டும் வகையில் தொகுக்கப் பட்டதே இந்த தொகுப்பு.
முழுத் தொகுப்பையும் வாசித்து முடித்தபின், தமிழ் சிறுகதை வெளியில் ஏற்பட்ட மாற்றங்களும், அதில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களும், வகைமைகளும் சிறுகதை என்கிற இலக்கிய வடிவத்தின் மீதான என்னுடைய ஆர்வமும், தேடலும் என இந்த பட்டியல் இரண்டு மூன்று மாதங்கள் என் தினசரி வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறி ஒரு வாசகனாக இத்தொகுப்பு எனக்கு கொடுத்த தாக்கமும், அனுபவமும் ஏராளம்.
இத்தொகுப்பின் வழியாக, தமிழ் சிறுகதையின் பன்முகத்தன்மையை ஒரு வாசகனால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். புதுமைப்பித்தனில் தொடங்கி, தமிழ் சிறுகதைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், தனித்துவமான கதை சொல்லல் முறைகள், எழுத்து நடை, கதை கருக்கள், பாடுபொருள்கள், வர்ணனைகள், நுட்பங்கள், கால மாற்றங்களால் ஏற்பட்ட வடிவ மாற்றங்கள், மொழியில் நிகழ்ந்த சிறு சிறு நுட்ப மாற்றங்கள் மற்றும் இதுவரை பரிச்சயமில்லாத பல எழுத்தாளர்களின் கதைகள் அதை முதல் முறை வாசித்து விட்டு ஏற்பட்ட பிரமிப்பு என இத்தொகுப்பின் மூலம் தமிழ் இலக்கியத்தின் மீதான என்னுடைய தேடலையும் விரிவு பண்ணவும் முடிந்தது.
புதுமைப்பித்தனின் நுட்பமான கதைச் சொல்லல், வறுமையின் ஆழமான சித்தரிப்பு, மௌனியின் மனித அக உணர்வுகளையும், தத்துவார்த்த பார்வையையும் வார்த்தைகளாய் செதுக்கும் மொழி நுட்பம், கு.ப.ராவின் ஆண்-பெண் உறவுகளை பிரதிபலிக்கும் கதைச் சொல்லல், தி.ஜாவின் மனித மனத்தின் நுட்பங்களை வெளிக்கொணரும் கதைகள், கு.அழகிரிசாமியின் முடிவில் உச்சம் பெறும் கதைச் சொல்லல் முறையும், குழந்தைகளின் மனநிலையையும் அவர்களின் உலகையும் பிரதிபலிக்கும் எழுத்து, கி. ராஜநாராயணனின் கரிசல் எழுத்து - அறுபதுகளில் கோமதி மாதிரி ஒரு கதையை எழுதும் துணிவு அதன் மூலம் காட்டும் புதுமையான பார்வை, சுந்தர ராமசாமியின் சொற்சிக்கனம், பகடி, லா.ச.ராவின் கவித்துவம் கொண்ட மணிப்பிரவாள மொழிநடை, உணர்ச்சிக் கொந்தளிப்பு, நுண்ணிய விவரணைகள், அசோகமித்திரனின் எளிமை, ஜெயகாந்தனின் முற்போக்கு எழுத்து, ஆதவனின் மனித மனங்களின் முகமூடிகளற்ற அப்பட்டமான சித்தரிப்பு, வண்ணநிலவன் சித்தரிக்கும் வறுமை, அம்பை காட்டும் பெண்களின் அக மற்றும் புற உலகம், பிரபஞ்சனின் கதைகளில் வெளிப்படும் மனித உறவுகள், வண்ணதாசனின் அழகு கலந்த நுட்ப சித்தரிப்பு – என தமிழ் சிறுகதையின் பல பரிமாணங்களை காட்டுகிற கதைகளும்.
உயிரோட்டமான சித்தரிப்பு கொண்ட எம்.வி.யின் பைத்தியக்கார பிள்ளை, பதின்ம வயதிலிருக்கும் ஒரு பையன் யாழ்ப்பாண பள்ளியில் சேர்வதற்காக தனக்கு தெரிந்தவர் வீட்டில் தங்கி வாழும் போது சந்தித்த பெண்ணின் நினைவுகளை சொல்லும் அ. முத்துலிங்கத்தின் மகாராஜாவின் ரயில் வண்டி, பத்து வயதில் விதவையாகி, வாழ்நாள் முழுவதும் நீரை தன் ஆறுதலாக்கிக் கொண்ட பெண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கும் ந. முத்துசாமியின் நீர்மை, ஆண்-பெண் சார்ந்த பாலியல் நுட்பங்களை பதிவு செய்யும் ராஜேந்திர சோழனின் புற்றிலுறையும் பாம்புகள், சமூகத்தின் உதிரிமனிதர்களின் உலகை அவர்களின் ஏக்கங்களை பிரதிபலிக்கும் ஜி. நாகராஜனின் டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர், ஒடிய கால்கள், தமிழில் எழுதப்பட்ட மெட்டாமார்பிசக் கதையான கிருஷ்ணன் நம்பியின் தங்க ஒரு, விடுதலைக்கான போராட்டம் முடிந்த பின்னரும் மறைந்து திரியும் கிழவனை சித்தரிக்கும் சுரேஷ்குமார் இந்திரஜித்தின் மறைந்து திரியும் கிழவன், குஜராத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்து வந்து வாழும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் திலீப்குமாரின் கதைகள், குடும்பத்தின் கடைக்குட்டி மேபெல்லுக்கும் அவளது தந்தைக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை விவரிக்கும் தஞ்சை பிரகாஷின் மேபல், ஒரே வீட்டில் வளர்ந்த இரு சகோதரிகளின் பார்வை மற்றும் உணர்வுகளில் உள்ள வேறுபாடுகளை நுட்பமாக பேசும��� சூடாமணியின் அந்நியர்கள் என மனித உணர்வுகளின் ஆழத்தை பிரதிபலிக்கின்ற கதைகளும்.
சூழலியல் பார்வையுடன் எழுதப்பட்ட சோ. தர்மனின் சோகவனம், மனிதனின் பாலியல் இச்சையை முள்ளாக உணர்த்தும் சாரு நிவேதிதாவின் முள், மரங்களை பிள்ளைகளாய் வளர்த்து, அவற்றுக்காக துடிக்கும் அழகிய பெரியவனின் வனம்மாள், மனிதர்களின் கும்பல் மனநிலையை (herd mentality) பேசும் சார்வாகனின் கனவுக்கதை, தொலைந்து போன ஊரின் நினைவுகளை இழைபோல பதிக்கும் கோணங்கியின் மதினிமார்கள் கதை, போரில் தன் மகனை இழந்த சுபத்திரையின் வலியை, இழப்பை கூறும் ஜெயமோகனின் பத்ம வியூகம், கனவுகளின் உலகம், தத்துவம், கதைக்குள் கதை என வாசிப்பை பிரமிக்க வைக்கும் பா. வெங்கடேசனின் ராஜன் மகள், தாவரங்களின் உரையாடலை தேடும் எஸ். ராமகிருஷ்ணனின் தாவரங்களின் உரையாடல், முதுமையின் தனிமையை சித்தரிக்கும் பாவண்ணனின் காலத்தின் விளிம்பில் எனப் பல உணர்ச்சி நிலைகளில் பயணிக்க வைத்த கதைகளும்.
படித்து முடித்த பின் அவற்றின் கதை கரு மற்றும் சொல்லப்பட்ட தொனி காரணமாக வியப்பை ஏற்படுத்தி மனதில் ஆழமாக பதிந்த கதைகளாக - எல்லோர் மனதிலும் ஒழிந்து கிடைக்கும் காசியின் உலகை காட்டிய பாதசாரியின் காசி, வினோதமும், யதார்த்தமற்ற போக்கும், நிச்சயமற்ற புனைவுமான பிரேம்-ரமேஷின் மூன்று பெர்னார்கள், பெண் குழந்தை வளர்ந்து வரும் போது சந்திக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த அழுத்தமும், பாலியல் அத்துமீறல்களும், அதன் மூலமாக அவர்களின் குழந்தமை பிய்த்து திண்ணப்படும் அவலத்தை பேசும் உமா மகேஸ்வரியின் மரப்பாச்சி, மனித மனிதன் இயலாமையின் மறுபக்கத்தை சித்தரிக்கும் யூமா வாசுகியின் வேட்டை, ஆண் மீதான ஆணின் காதலை அதனால் சமூகத்தில் சந்திக்கும் அழுத்தத்தை பேசும் திசேராவின் கண்ணியத்தின் காவலர்கள், குழந்தையின் சிக்கலான உளவியலை சொல்லும் கௌதம சித்தார்த்தனின் தம்பி, பெண்ணுடல் மீதான ஆணின் பார்வையை, எடுத்துக்கொள்ளும் அதிகாரத்தை சொல்லும் ஜே.பி. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை, வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் கதையை சொல்லும் சந்திராவின் பூனைகள் இல்லாத வீடு, கிறித்தவ தேவாலயங்களில் நடக்கும் ஊழல், அதிகார அத்துமீறல், வர்க்க ஏற்றத் தாழ்வை பிரதிபலிக்கும் எக்பர்ட் சச்சிதானந்தத்தின் நுகம் – என பலதரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களையும், மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் பிரதிபலிக்கின்றன இந்த கதைகள்.
மொத்தத்தில் நிறைவான வாசிப்பணுவமும், எனக்கு அறிமுகமில்லாத பல புதிய எழுத்தாளர்களின் அறிமுகமும், அவர்கள் மற்றும் அவர்களின் வேறு படைப்புகள் குறித்தான தேடலையும், என்னுடைய வாசிப்பை விரிவுபடுத்திய ஒரு தொகுப்பு - எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த சிறுகதைகள் தொகுப்பு.
இந்தத் தொகுப்பைப் பற்றி எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தன் வலைதளத்தில் குறிப்பிடும்போது கூறுகிறார்:
என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து இந்தப் பட்டியலை உருவாக்கியிருக்கிறேன். விடுபாடுகளும் மறதியும் இயல்பாகவே இருக்கக் கூடும். இந்தப் பட்டியலுக்கு வெளியிலும் வாசிக்க வேண்டிய பல முக்கிய சிறுகதைகள் இருக்கின்றன. இது ஒரு புதிய வாசிப்புக்கான அடையாளம் காட்டும் முயற்சியே. அக்கறையுடன் வாசிக்கும் வாசகர், இந்தப் பட்டியலில் இருந்து தனது வாசிப்பு தளங்களை விரித்துக்கொண்டு செல்ல முடியும்.
அப்படி சிறுகதை வாசிப்பின் தளங்களை விரிவுப்படுத்தி கொள்வதற்கான ஒரு சிறு வித்து இத்தொகுப்பு.
இத்தொகுப்பின் மூலம் எனக்கு பெரிதும் பரிச்சயம் இல்லாத அல்லது இதற்கு முன் அவர்களின் படைப்புகள் ஏதும் வாசித்திராத, இருந்தும் வாசித்து முடித்ததும் என்னுடைய தேடலை விரிவுபடுத்திய எழுத்தாளர்கள் சிலர்:
1. அ. முத்துலிங்கம் – இலங்கையை விட்டு புலம்பெயர்ந்த முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.
2. எஸ். சம்பத் – மரணத்தைப் பற்றிய நாவலான இடைவெளியின் ஆசிரியர்.
3. கிருஷ்ணன் நம்பி – இவரும் சுந்தர ராமசாமியும் “இலக்கிய இரட்டையர்” என்று அறியப்பட்டவர்கள். சுந்தர ராமசாமியின் நெருங்கிய நண்பர்.
4. திலீப் குமார் – குஜராத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து தலைமுறைகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிற்கு வியாபார நிமித்தமாக புலம்பெயர்ந்த மத்திய தர குஜராத்திகள், மராத்தியர் வாழ்க்கையை கதையாக எழுதியவர்.
5. சுரேஷ்குமார் இந்திரஜித் – 90-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நான்கு நாவல்கள், இரு குறுநாவல்கள் மற்றும் நூறுக்கும் மேற்பட்ட குறுங்கதைகள் எழுதியுள்ளார். வரலாற்றுக் குறிப்புகளும் புனைவும் இணைந்த தனித்துவமான கதையோட்டம் இவருடைய சிறப்பம்சம்.
6. உமா வரதராஜன் – ஈழத்து எழுத்தாளர். உமா வரதராஜனின் ஒரேயொரு நாவலும் சிறுகதைத்தொகுப்பும் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக அவரை அடையாளப்படுத்துகின்றன.
7. எக்பர்ட் சச்சிதானந்தம் – பிரதானமாக கிறிஸ்துவ குடும்பங்களை, தேவாலயத்தின் கட்டுப்பாடுகளை, அதனுள் நடைபெறும் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகம், வரம்பு மீறல்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு கதைகளை எழுதியவர்.
8. சுப்ரபாரதி மணியன் – திருப்பூரை களமாகக் கொண்டு அரைநூற்றாண்டில் சுற்றுச்சூழலும் மானுட உறவுகளிலும் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்பவர்.
9. எஸ். பொன்னுத்துரை – புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளர். ஈழத்தின் மண்வாசனையுடன் படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டவர்.
10. ஐ. சாந்தன் – ஈழ எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.
11. உமா மகேஸ்வரி – பெண்களின் அகவுலகைச் சித்தரிக்கும் கதைகளை எழுதியவர்.
12. திசேரா – திசேராவின் கதையோட்டம் மிக நிதானமானது. உணர்வெழுச்சியால் பீடிக்கப்பட்டு பீறிட்டெழும் மொழிதல் அனேகமாக எந்தக் கதைகளிலும் இல்லை – கவிஞர் இசை.
13. கௌதம சித்தார்த்தன் – கொங்கு மண்ணின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவர்.
14. ஜெ.பி. சாணக்யா – தமிழ் சிறுகதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதையாசிரியர். தமிழில் பாலியல் நுட்பங்களை உருவக அழகியலோடு எழுதியவர்.
15. சந்திரா தங்கராஜ் – கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குநர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள்.