பகடி, எளிமை இரண்டும் இசை கவிதைகளின் பொதுவான அடையாளங்களாகச் சொல்லப்படுபவை. பகடி அவரது பல கவிதைகளில் வாசகர்களுடன் தொடர்புறுத்தச் செயல்படும் ஓர் உத்தி மட்டுமே. எளிமையும் சமயத்தில் ஒரு தோற்ற மயக்கம்தான். சட்டெனத் திறக்க ஓரடி தொலைவில் வாட்டமாகத் தோன்றும் ஒரு சிறிய கதவு. திறந்தாலோ, கண்ணுக்கு அகப்படும் காட்சி, அது சற்றுக் கோணலாகி இன்னொரு காட்சி, சில சமயம் புலப்படாது புலப்படும் பின்னொரு காட்சி என விரிந்து செல்கின்றன. இசையின் கவிதைகளில் பொதுவாகவே தருணங்கள் அபார சக்தி படைத்தவையாக இருக்கின்றன. கவிதைக்குள் அப்போது நிகழ்பவையாகவும் ஆழ்ந்து அனுபவிக்கப்படுபவையாகவும் கொண்டாடப்படுபவையாகவும் நீண்டு வளர்பவையாகவும் இருக்கின்றன. பொருந்தாதவற்றைப் பொருத்திவைக்கின்றன. மட்டுமின்றி, ஒருவர் இன்னொருவராக மாறிவிடும் ஆசியையும் சாத்தியப்படுத்திவிடுகின்றன. சில கவிதைகள் மொத்த வாழ்க்கையையுமே ஒரு நுண்தருணத்தின் ஊசிமுனையில் சீராக நிறுத்துகின்றன.
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.