"காந்தியோடு பேசுவேன்" - எஸ்.ராமகிருஷ்ணன்
பல்வேறு பத்திரிக்கைகளில் இந்த 13 சிறுகதைகள் வெளிவந்தபின்.,சிறுகதைத்தொகுப்பாக 2013ல் முதற்பதிப்பு கண்டுள்ளது இந்நூல்.
வாழ்க்கை குறித்து விநோதமான, எவரும் யோசிக்காத கோணத்தில், ஆழமான ஊடுருவல் பார்வையில் கேள்விளாக முன்வைத்து, வாசிப்பவரையும் தன்னை போலவே சிந்திக்க வைப்பவர்களில் திரு எஸ். ராமகருஷ்ணன் அவர்களும் ஒருவர்.
அப்படி இந்த தொகுப்பிலும் இடம்பெற்றுள்ள சிறுகதைகளும் வாழ்வியல் தொடர்பான ஆழமான தத்துவார்த்தங்களையும் கேள்விகளையும் கொண்டதாக படைக்கப்பட்டுள்ளது.
கதைகளும் நமது புரிதலும்:
1. “காந்தியோடு பேசுவேன்” - லட்சுமணன்-ரக்கேல் எனும் தம்பதிகள், அவரின் தாயார் பற்றி உரையாடடுவதுதான் இக்கதை. தனது தாய் ஏன் காந்தி மீது இவ்வளவு பற்று கொண்டு வார்தா வரை சென்றாள்? அடக்குமுறைக்கும் சொல்லொணா துயரத்துக்கும் ஆளான அவள், தன்னை ஏன் காந்தியை போல உணர்ந்தாள்? ஏன் அவள் புத்தகப்பிரியை? என அந்த தாயின் சோகங்களையும், அவளின் அமைதிப் போராட்டங்களையும் சொல்கிறது, காந்தியையும் ஒரு கதைமாந்தராக கொண்ட இக்கதை.
2. "கடக்க முடியாத பாலம்" - சாதி., சாதிவெறி எனும் தீப்பொறியாக மாறி, எப்படி தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் நமக்கு எதிரிகளாகவும், அவர்கள் நம்மை குரூரமாகத் தாக்கவும், முடிந்தால் முதல் கொலையாகவும் செய்ய முடிகிறது எனச் சாதாரணனின் பார்வையில் யதார்த்தமாய் சொல்கிறது.
3. "பாதியில் முடிந்த படம்" - டெல்லியில் உலகத் திரைப்பட விழாவில், பத்திரிக்கையாளர் ஒருவரும், தான்தோன்றி பெண் ஒருவரும் நட்பாகி, பாதியில் பிரிந்துவிடுகிறார்கள். இரசனையான கதைபோக்கு கொண்ட கதை.(அவர்கள் பார்த்ததாக சொல்லப்பட்ட திரைப்பட பெயர்கள் (Moolaade, Mother and Son, The Cranes are Flying, Tango)
4. "அஸ்தபோவில் இருவர்" - எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் தனது மனைவி சோபியா மற்றும் வளர்ந்த பிள்ளைகளை விட்டு வெளியேறித் தனியே செல்கிறார். அவரை அஸ்தபோவில் ஒருவர் சந்திக்கிறார். இருவரும் மானுட வாழ்க்கை மற்றும் காதல் தொடர்பாக விவாதிக்கின்றனர். இறுதியில் தனது நோய் படுக்கையில் மனைவியை சந்திக்காது உயிர் துறப்பதாக முடிகிறது கதை.
5. "அருவிக்குத் தெரியும்" - குற்றாலத்திற்கு செல்லும் நண்பர்கள் குழுவில் ஒருவர்., அங்கு அருவியில் குளிக்கும்போது ஒரு பெண்ணை சந்திக்கிறான் ஒருவன். அது முதல் சில நாட்களுக்கு அவர்களுக்குள் ஏற்பட்டது காதலா? சிநேகமா? எனும் கேள்விக் கொக்கிளுடன் அலைக்கிழிப்புகளாலான கதை.
6. "பிடாரனின் மகள்" - பாம்பு பிடாரனின்(பாம்பாட்டியின்) மகளுடன் ஏற்பட்ட சிறுவயது நட்பானவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதை., அவள் வளர்ந்த பின், மீண்டும் இருவர் சந்தித்தபோது அவளும் அவனும் சிறுபிரயாத்தில் விளையாடியது அவனுக்கு நிழலாடுகிறது.
வயதானபின் பாம்புபிடாரனுக்கும் அவளது மகளுக்கும் ஏற்படும் துயர் நிலைக்கு வருந்துவதாக கதை செல்கிறது.
7. "ஷெர்லி அப்படித்தான்" - ஷெர்லி பிராங்க் எனும் கணவனை இழந்த ஆங்கிலோ இந்தியப் பெண்மணிக்கு, தனது தந்தை, அவளது வாழ்வாதராத்திற்கு உதவுகிறார். இதை அவர் மகனின் பார்வையிலிருந்து, அவளது நன்றியுணர்ச்சியை காட்டும் விதத்தை கதையாக சொல்கிறது.
8. "இடைப்பட்ட நாட்கள்" - திருமணமான நான்கு மாதத்தில் கணவனுக்கு ஏற்பட்ட காய்ச்சலால்.,மனைவிக்கு ஏற்படுகிற மனப்போராட்டத்தையும், காய்ச்சல் குணமான பின் அவளுக்கு ஏற்பட்ட ஆசுவாசத்தையும் சொல்லும் கதை.
9. "நிகழ்காலத்தின் சுவர்கள்" - குமாஸ்தா வேலையிலிருக்கும் பெரியவர்., தான் லஞ்சம் வாங்கிய காண்டிராக்டரின் வேலையை முடிக்காமல் விட்டதால், அவனிடம் அடிபட்டு அவமானப்படுகிறார். வீட்டில் உள்ள மூன்று மகள்களுக்கான கடமையை நிறைவேற்ற, மேலும் லஞ்சம் பெற்று மேலதிகாரிகளிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கி தன் இயலாமையை நினைத்து புழுங்குவதாக கதை செல்கிறது.
10. "வெயில் போய் வரும்" - மூன்று பெண்களின் தந்தை சங்கரம்பிள்ளையும், அவருக்கு மாப்பிள்ளையாக வரவிருக்கும் சாமிநாதனும் தெருவில் பாத்திரங்கள் விற்பவர்கள். இவர்களுக்குள் நடக்கும் தொழிற்போட்டியே இக்கதை.
11. "அம்மாவின் புத்தகம்" - பழைய புத்தக கடையில் தனது தாய் படித்த புத்தகங்களில் அவளது பெயரைக் கண்டு, வீட்டிற்கு வாங்கி வருகிறான். தொடர்ந்து அவளைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிய மகனின் கதை.
12. "பசித்தவன்" - வீரனூரில் நில அளவை செய்ய வந்த அரசு ஊழியனுக்கு, அக்கிராமத்தினர் திடியன் எனும் சிறுதெய்வத்தை வழிபடுவதை பார்த்து கேள்விகள் எழுகிறது.
அந்த திடியனின் உழைப்பு, அவனது மனைவி கூந்தலை அவனின் எஜமானான சித்திரெட்டியின் மனைவி நாச்சியார் பொறாமை கொண்டு அறுத்தது, திடியன் கூலி கேட்டு போராடியது, அதன் பிறகான பஞ்சம், பழிவாங்கல், கொலை என திடியன் சிறுதெய்வமான கதையை சொல்கிறது.
13. "ஒற்றை முள்" - பாடல் ரெகார்டை பேத்தி ஷைலு உடைத்ததும் கோபம் கொள்கிறார் வீட்டின் பெரியவர். மகனும் மருமகளும் அதன் பொருட்டு அவருடன் வாதிக்கின்றனர். மனைவியை இழந்த முரட்டு குணம் கொண்ட பெரியவர், பாடல்களே பிடிக்காதவர், ஏன் அந்த பாடல் ரெகார்ட் மீது அத்தனை பிடிப்பு? யார் பொருட்டு அந்த கோபம்? ரெகார்டு மீது உராயும் ஒற்றை முள்ளாய் அவரது வாழ்வு ஏன் அமைந்தது என நெகழ்ச்சியாய் சொல்லும் கதை.
புத்தகத்திலிருந்து...
\
தேவைகளை உருவாக்கி கொள்வது எளிது, விட்டுவிடுவது கடினம்…
/
\
ராகேல் சொல்வது உண்மை. இந்திய பெண்கள் காந்தியை சமூக சேவகர் என்ற தளத்தில் புரிந்து கொள்ளவில்லை. பெரும்பான்மை மக்கள் சகல விதமான அடிப்படை அறங்களையும் கைவிட்டு தீமையும் பொய்மையும் தனதாக்கிக்கொண்ட சூழலில் அறத்தின் பொருட்டு தன்னை ஒப்படைத்துக் கொண்டு சுயபரிசோதனை கொண்ட வாழ்வை மேற்கொண்ட எளிய மனிதர் என்று புரிந்தே கொண்டிருக்கிறார்கள்
/
\
ராகேலுக்கு வன்முறையின் கொடூரம் தெரியும். அவள் யூதப் பெண். எனது மாணவியாக அறிமுகமாகி என்னைத் திருமணம் செய்து கொண்டவள். அவளுக்கு என்னை விடவும் என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களிடம் அதிக ஒட்டுதல் முப்புள்ளி அந்த பெண்கள் நித்தியமான வதைமுகாமில் வாழ்பவர்கள் என்று ஒருமுறை ராகேல் சொன்னது நிஜமான உண்மை.
/
\
காந்தி அமைதியான குரலில் சொன்னார்:
" குடும்ப அமைப்பிற்குள் உள்ள வன்முறையை என்னால் மாற்றவே முடியவில்லை. தோற்றுப்போன மனிதனாகவே என்னை உணருகிறேன். பெண்களின் முழுமையான பங்களிப்பும் ஆதரவும் இல்லாமல் இந்தியாவில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தி விட முடியாது என்பதை உணர்கிறேன்..."
/
\
என்னால் சாதிய திமிர் களுடன் வாழ முடியாது. அதே நேரம் சாதியை முற்றிலும் உதறியும் வாழ முடியாது. சாதியை மறைத்துக் கொண்டு வாழ்வது மட்டுமே எனக்கு சாத்தியம். அந்த நெருக்கடியில் இருந்து வாழ்நாள் முழுவதும் எனக்கு விடுதலையே கிடையாது என்ற எண்ணம் என்னை ஆழமான வேதனைக்கு உட்படுத்துகிறது.
/
\
ஒரு மனிதன் தனது அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதைப் போல அதை அழித்துக் கொள்வதும் ஒரு சவால் தான். அதிலும் தான் வெற்றி பெற வேண்டும் என்று டால்ஸ்டாய்க்கு தோன்றியது.
/
\
ஒரு மனிதன் பெண்ணை நேசிக்க துவங்கும் போதுதான் வீடு அவனுக்குள் முளைவிடத் துவங்குகிறது. காதல் வளர வளர வீடு அவனுக்கு முக்கியமானதாக ஆகிப்போகிறது. உண்மையி���் அது ஒரு வலைப்பின்னல். பெண்களும் வீடும் ஒன்றுதான் போலும். எப்போதும் இடம் தந்து அணைத்துக்கொள்ளும், எப்போது விலக்கி வெளியே அனுப்பும் என்று புதிராகவே இருந்தது.
/
\
வயதுதான் மனிதர்களின் ஒரே பலவீனம். காலம் வளர வளர இயற்கையின் அங்கமான தாவரங்கள், பாறைகள் என அனைத்தும் உறுதியாகின்றன. வலிமை கொள்கின்றன. மனிதனோ வயதானதும் பலவீனமாகிவிடுகிறான்.
/
\
"தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய எண்ணங்களே எல்லா பிரச்சனைகளுக்கும் விதையாக இருக்கின்றன. உங்களை நீங்கள் பகிர்ந்துகொடுங்கள். தண்ணீரைப் போல நிறையும் பாத்திரங்களின் வடிவம் கொள்ளுங்கள். காற்றைப் போல எடையற்று இருங்கள்."
/
\
பொங்குமாங்கடலும், சாலையில் வழிந்தோடும் அருவித் தண்ணீரும் நனைந்த உடைகளும் ஈரம் சொட்டும் கேசத்துடன் தோளில் துவைத்த துணிகள் ஊசலாட, எதற்கு அந்தச் சிரிப்பு என அறியாத சிரிப்போடு பொலிவுறும் முகத்துடன் பெண்கள் நடந்து வரும் அழகும், என்னை பூசிய உடல்களுடன் ஆண்கள் பருத்த தொப்பை மினுங்கச் செல்வதும், இட்லி கடைகளில் இருந்து எழும் புகையும் , மங்குஸ்தான் பழ வாசனையும், சீயக்காய், தைல எண்ணெய் வாடையும், காதுகளில் படும் மழைத்துளியின் கூச்சம் தாளாமல் தலையைச் சிலுப்பிக் கொள்ளும் பசுமாடும், வாழைப்பழத்தைப் பறித்துப் போய் தின்னும் குரங்குகளும், ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு வரிசை வரிசையாக வரும் மனநல சிகிச்சை பெறும் நோயாளிகளும், சாரலுக்கு சுக்கு காப்பி குடிக்கும் குற்றாலநாதசுவாமியும், செண்பகக் குழல்வாய்மொழி அம்மையும் ஒன்று சேர்ந்ததுதானே குற்றாலம்(அம்மையின் பெயர்தான் எத்தனை ருசிகரமாக இருக்கிறது, அம்மையின் பிரதி ரூபங்களாக எத்தனை செண்பாக்கள் குற்றாலத்தில்).
/
\
எதிர்பாராமைதான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. நமது திட்டங்களை மீறி வாழ்க்கை நம்மை இழுத்துப் போகிறது. நம்மை முழுமையாக அதற்கு ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.
/
\
மனிதர்களை துயரத்தில் இருந்து மீட்பதற்காகவே பாடகர்களைக் கடவுள் படைத்திருக்கிறார்.
/
\
ஒரு மனிதன் வாழ்ந்த முறையைவிட அவனது சாவே அவனைப் பற்றி பேச வைக்கிறது.
/