"அந்த அக்காவைத் தேடி" - ஜெயகாந்தன்
‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்து’ மற்றும் ‘அந்த அக்காவைத் தேடி’ எனும் இரண்டு பெருங்கதைகளை ஒரே தொகுப்பாக 1985ல் வெளியிட்டுள்ளனர்.
திரு ஜெயகாந்தன் தனது முன்னுரையில் கூறியதுபோல, இரண்டும் தனித்தனியாக எழுதப்பட்டாலும், இரண்டையும் சேர்க்கும்போது ஒரே கதைதான் என்பதை அறியமுடிகிறது.
தற்போதைய LCU(Cinema Universe)க்கு முன்னோடி அப்போதைய Novel Universe. அதாவது சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா போன்றவர்கள் தனது, ஒரு நாவலில் பயன்படுத்திய கதைமாந்தர்களையும் அவர்கள் தொடர்பான சிற்சில சம்பவங்களையும், பிறநாவலிலும் தொடர் சம்பவங்களாக பயன்படுத்துவர்.
அதுபோல் இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்நாவல்களை JNU(Jayakanthan Novel universe) எனலாம்.
திரு ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளை வாசிக்க தொடங்குபோதெல்லாம் திரும்ப திரும்ப ஆச்சரியப்பட வைக்கிறார்.,
இன்றைய காலத்தில் வாசிக்கும்போதே முற்போக்கான கதைச் சம்பவங்களாக தெரிகிறதே, 40-50 வருடங்களுக்கு முன் இதையெல்லாம் எப்படி நமது முந்தைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டிருப்பர்? எப்படி உள்வாங்கியிருப்பர்?… அப்படியான பெரும் மலைப்புடன் கடந்த பக்கங்கள் பல உள்ளது இப்புத்தகத்தில்.
நவீன கால யுவ, யுவதிகள் இப்படித்தான் ஒன்று கூடி தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது இருத்தியலுக்கோ, அல்லது வேறு காரணம் எதுவோ இருக்கலாம். ஆனால் திரு ஜெயகாந்தன் படைத்த நவயுக யுவ/யுவதிகள் ஒரு கொள்கையை முன்னெடுத்து, அதன் வழிநடக்க, வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் மற்றும் வேலையை விடுத்து வாழ முற்படுகின்றனர். இந்த முடிவில் ஒளிந்திருக்கும் கருத்தியலை நுட்பமாய் கவனித்தால், அது பொதுவுடைமை எனும் கம்யூனிசத்திற்கு சென்றடையும்.(தற்கால வாசகர்களுக்கு உதாரணம், கத்தி திரைப்பட இட்லி கதை)
நாவலை வாசிக்கும் எந்த பெண்ணுக்கும், தன்னம்பிக்கையளிக்கும் வகையில் தெளிவான சிந்தனையும் திடமான நம்பிக்கையும் கொண்ட பெண்களாக
"வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைத்து" நாவலின் பைரவியும்
"அந்த அக்காவைத் தேடி" நாவலின் மாலாவும் ஜெ'வும் கதையின் முதன்மை கதை மாந்தர்களாக படைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நாவலின் கதையை ஒத்த திரைப்படங்களாக 'புவனா ஒரு கேள்வுக்குறி', 'மனதில் உறுதி வேண்டும்', 'வானமே எல்லை' போன்ற படங்களைச் சொல்லலாம். ஏனெனில், இந்நாவல்களில் சொல்லபட்ட பல நிகழ்வுகளோடு அப்படங்கள் ஒத்து போகிறது.
The Impossible Dream எனும் கார்ட்டூன் படத்தின் கதையை பற்றி விளக்கியிருக்கும் விதம் மிக அற்பதம்.
வாசிக்கும்போதே நம் மனக்கண்ணுள் அப்படத்தின் காட்சிகள் தெளிவாய் விரிந்து நகரும்.
உன்னத அனுபவம் அது.
பெண்ணியம் குறித்த ஞான போதனைகளுடன் நியாய யதார்த்தங்களை கொண்ட இந்நாவல்களால் நிச்சய தாக்கத்திற்கு உள்ளாவோம்.
புத்தகத்திலிருந்து…
\
பெண்கள் தாமே தமது உருவ அழகில் மயங்கி, தன்னை ஒரு மோகினியாக நினைத்துக் கொண்டு, அசட்டுத்தனமான கற்பனைகளில் சிக்கி, ஆண்களைத் தம்மை ஆளத் தகுந்த எஜமானர்களாக ஆக்கி அடிமைப்படுவதைத்தான் நடைமுறை வாழ்வில் நிறையவே பார்க்கிறோம்.
/
\
"பின்னே என்ன? வசந்தா மாதிரி என்னால் புடவையைச் சுற்றிக் கொண்டு திரிய முடியாது. நான் குர்தாவும் ஜீன்ஸும்தான் அணிந்து கொள்கிறேன். இதுதான் எனக்கு வசதியாக இருக்கிறது."
/
\
தலைமுறைக்குத் தலைமுறை நியாயம் மாறுகிறது. இதுவரை மாறாதிருந்த அநியாயங்கள் இந்தத் தலைமுறையில் மாறத்தான் போகிறது என்ற நம்பிக்கையில்தான் இவர்களையெல்லாம் சகிக்க வேண்டியிருக்கிறது.
/
\
"நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கும் உடைய புதுமைப் பெண்களுக்கு உதாரணங்களே இல்லையென்றா நினைக்கிறார்கள்? தான் அப்படிப்பட்ட ஒருத்தியென்று இந்தப் பைரவி நிரூபித்துக் காட்டுவாள்!"
/
\
"எனக்குத் தோன்றுகிற முதல் விஷயம் ஒரு வேலைக்கு மனுப் போடுகிற கூட்டத்தைச் சேர்ந்தவள் அல்ல நான் என்பது. வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்த நாடு இது. எவ்வளவோ ஏழைகள் ஒரு உத்தியோகத்துக்குப் போய்த் தான் தானும் தன்னைச் சேர்ந்த சில ஜீவன்களும் உயிர் வாழ முடியும் என்று தவித்துப் போராடுகிற தரத்தில் உழல்கிற இளைஞர்கள். அவர்களுக்கு இணையான ஏழைப் பெண்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்! என்னுடைய நண்பர்களில் பலர் அத்தகையவர் உண்டு. அவர்களை யெல்லாம் விட்டுவிட்டு டம்ப வாழ்க்கை வாழ்கிற இந்தக் குடும்பத்துக்கு இப்போது வருகிற வருமானம் போதாதென்று அந்த ஏழைகளின் வயிற்றுச் சோற்றைப் பறிக்கிற மாதிரி, வசதி உடையவர்கள் தங்களது உல்லாசச் செலவுக்காக உத்தியோகம் பார்ப்பது குறித்து நானே எவ்வளவு கடுமையாகப் பேசி இருக்கிறேன்."
/
\
“…அம்மா சொல்ற அந்தப் பழையகால மாட்டுத் தொழுவ வாழ்க்கை முறையும் எனக்குச் சரிப்பட்டு வராது. நான் ஒரு சுதந்திரப் பறவை. எனக்குத் தெரியும் சுதந்திரம் என்றால் சுயகட்டுபாடு என்று…”
/
\
"நடமாடும் தாவரங்களான மனிதர்களுக்குக் கலாசாரம் என்பது வேர். அந்த வேர் நன்கு பதிந்திருக்குமென்றால் முட்களுக்கு நடுவே எப்படி ரோஜாக்கள் சேதாரமின்றிப் பூத்துச் சிரிக்கின்றனவோ அப்படி, பல்சக்கரம் போல் சுழன்று வரும் இந்த வாழ்க்கைச் சகடத்தின் பற்களில் சிக்கிக் கொள்ளாமல், உருமாறாமல், ஊனப்படாமல் மனிதர்களும் சிரிக்க முடியும்! என்ற தைரியத்தை இந்த மெல்லிய ரோஜாக்கள் எனக்குத் தந்திருக்கின்றன..."
/
\
"புத்தகங்களில் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை. நமக்கு வேண்டியது - அதாவது நம்மை அபிவிருத்தி செய்து கொள்வதற்குத் துணையான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்"
/
\
இந்தச் சமூகத்தை மாற்ற விரும்புகிறவர்கள், இந்தச் சமூகத்தின் பிடிகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
/
\
தலைமுறைக்குத் தலைமுறை நியாயம் மாறுகிறது. இதுவரையில் மாறாதிருந்த அநியாயங்கள் இந்தத் தலை முறையினால் மாறத்தான் போகிறது.
/
\
"பெண்ணாகப் பிறந்துட்டமேன்னு தாழ்வுணர்ச்சி கொள்ளக்கூடாது; நாணிக்கோணிக் குறுகி ஒதுங்கப்படாது; அநாவசியமா வெட்கப்படக்கூடாது. ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்திலே புதிய நம்பிக்கை வரணும்"
/
\
"...நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணும் நற்குடிப் பெண்ணின் குணங்களாம்..." என்ற பாடல் வரிகளை நினைத்துக் கொண்டேன்.
/
\
இதோ கண்முன் தெரிகிற இந்தப் பூமிக்கோளம் அனைத்து ஜீவராசிகளையும் சுமந்து கொண்டு எல்லையில்லா மோனப் பெருவெளியில் கற்பனைக்கு எட்டாத வேகத்தில் ஆனால் ஒரு கணக்கோடு, ஒரு கணமும் பிறழாத நியதியோடு இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதில் ஏதோ ஒரு புள்ளியில்தான் நான், எனது என்று கொள்ளும் அனைத்தும் நிறைந்துள்ளன.
/
\
இந்தப் புண்ணிய பூமிக்கோளின் மீது பகைமையும் போர் வெறியும் ஆதிக்கப் பேராசையும், மனிதர்களை அடிமைப் புழுக்கள் ஆக்குகிற அக்கிரமங்களும் சுரண்டலும், கடவுளையும் மனிதனையும் ஒட்டு மொத்தமாக அழித்துப் போடுகிற அபசாரக் கலைகளும் வியாபார - லாப வேட்கையும், வறுமைக் கொடுமைகளும், நோயும் மண்டி, வளர்ந்து கொதித்துக் கொப்பளித்துக் கொண்டிருப்பது ஒரு அவமான கரமான யதார்த்தம்...
/