விழியனின் 'மலைப்பூ' அதிசயமாய்ப் பூத்த பூ; பூவுக்குள் மலைக் கிராமத்துப் பிஞ்சு நட்ச்சத்திரங்களையும் பார்க்கிறேன். அறிவியல் இயக்கத்தில் இன்று வரை மின்னிப் பிரகாசித்து வழிகாட்டி வரும் மூத்த நட்ச்சத்திரங்களையும் பார்க்கிறேன். விழியனின் மொழி பல்லுக்கு மெதுவான பணியாரம்; லகுவாகவும் இருக்கிறது. இனிப்பாகவும் இருக்கிறது.
காட்டில் மலர்ந்து மலையில் வளர்ந்து சமவெளி இறங்கிச் சிற்றூர் தாண்டிப் பேரூர் சென்று அரங்கம் அமர்ந்து பெருமேடை ஏறிச் செழித்தோங்கும் ஒரு பூப்போன்ற சிறுமி தான் இந்த மலைப்பூ. தலைப்பில் பூவிற்கு மேற்கோள் குறியும் இதனால்தான் போலும்
இந்தப் புதினத்தை விழியன் அண்ணன் எழுதத் தூண்டுகோலாக அமைந்ததே அச்சிறுமி தானாம். விழியனின் விழிவழிப் புகுந்த அச்சிறுமி அவர் மனவழிக் கதை நடத்துகிறாள். மலைமக்கள் வாழ்வைப் பேசும் நூல் திரைப்படம் சிலபல உள்ளன. இந்நூலில் மலைவாழ்சிறார் உலகம் காட்டுகிறார் விழியன்
இயற்கையோடு இயைந்த வாழ்வு என்று அவர்கள் வாழ்வை நாம் கற்பனை செய்கிறோம். ஆனால் மலையில் அதுவும் வறுமையில் வாழும் குடும்பச் சிறார் வாழ்வு ஏக்கத்துடனும் தாழ்வு மனப்பான்மையுடனும் வெளி உலகின் மேல் அச்சத்துடனும் கழிவதைக் கதைவழி காட்டுகிறார்
அச்சிறுமியின் முதல் சமவெளி இரவு Fan கீழ் உறக்கம் மேற்கத்தியக் கழிவறை இரவுப் பேருந்துச் செலவு(payanam) வெளியூர்ச் செலவு தொடரிச் செலவு வெளிமாநிலச் செலவு மேடை வெற்றி ஒதுக்கியவர்களால் ஏற்கப்படுதல் போன்ற பல முதல் முறைத் துய்ப்பைக் கதையெழுதிப் படிப்பவரை உலுக்கியுள்ளார்
ஒரு கருவை எடுத்துக்கொண்டு சூழ்ந்து சிந்தித்துக் கதை செய்தல் வழக்கம். அந்தக் கதையில் ஓரிரு நற்கருத்தும் புதிய செய்தியும் சேர்த்தல் கூட ஓரளவு வழக்கமே. விழியன் அதனினும் மேலே சென்றுள்ளார்
தான் நேரில் கண்ட ஒரு மலைவாழ்சிறுமியைத் தன் கதையின் தலைவி ஆக்கி
அவளுடைய அன்றாடச் சிக்கல் அனைத்தையும் பேசி
அவள் போன்ற சிறுவர் வாழ்வை உயர்த்த முயல்பவராக வரும் கதைமாந்தருக்கு ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர் பெயரையே வைத்து
சிறார்களுக்காகச் செயல்படும் பல்வேறு ஆளுமைகளைக் கதையின் போக்கில் கொண்டுவந்து படிப்பவர்க்கு அறிமுகம் செய்து
இவ்வளவையும் பாடம் எடுத்தாற்போலல்லாமல் சிறார் மட்டுமின்றிப் பெரியோர் படித்தாலும் சுவை குன்றாது கதை நடத்திச் செல்கிறார்
நடுவே குழலியப்பாவும் குழலியம்மாவும் சிறப்புத் தோற்றத்தில் அவர்களாகவே வருகின்றனர். அட நம்ம விழியன் அண்ணனும் Vidhya அக்காவும் தான்
எங்கள் எதிர்வீட்டு மழலைச்சிறுவனுக்கு எந்த car கண்டாலும் அது அவன் அப்பா car தான். அது போல இந்த மலைப்பூச்சிறுமிக்கு எந்தப் பெண் car ஓட்டினாலும் Vidhya அக்கா தான் நினைவிற்கு வருகிறாள்
Vidhya அக்கா: வாய்ப்பு வந்தால் விடாதே விழியன் அண்ணன்: வாய்ப்பை உருவாக்கு பாதையை நீயே போடு
இப்படி இருவரும் மலைப்பூவையும் அவள் மனத்தையும் உயர்த்தக் கூறிய சொற்கள் சரியான வேளையில் அவள் நினைவில் எழுகின்றன
இருப்பினும் வண்ணங்களை வாங்க ஆசை எழும் அதைப் படிக்கையில்
பெரியவங்களானதும் என்ன ஆகப் போறீங்க என்ற வினாவே பெரும்பாலும் சிறுவர்களிடம் கேட்கப்படும். கதையில் வரும் மெய்விஞ்ஞானி T.V.V. பெரியவங்களாகி அறிவியலுக்கு என்ன செய்யப்போறீங்க என்று மலைப்பூவைக் கேட்கிறார்
பெண் பூப்பெய்தியதும் நடத்தப்படும் சடங்கின் பின்னாலிருந்த நடைமுறைக் காரணத்தை மலைப்பூவின் ஆசிரியர் வாயிலாக விழியன் உரைக்கிறார்
எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரம் தான் ஆனால் ஒருவரின் 24 மணிநேரம் இன்னொருவரின் 24 மணிநேரத்திற்குச் சமமாகாது என்பதை உணர வைக்கிறார்
பேராசிரியருக்குப் பெரிய teacher என்ற பெயர் தருகிறாள் மலைப்பூ
இப்படி நயக்கவும் சுவைக்கவும் துய்க்கவும் சிந்திக்கவும் ஏராளம் வைத்துள்ளார் இச்சிறார்புதினத்தில் விழியன்
நமக்குக் கிடைத்த வாழ்வின் அருமை தெரியாமல் பலரிருக்க மலைப்பூச்சிறுமி போல அடிப்படைத் தேவையும் அன்றாடத் தேவையும் கூடக் கிடைக்கப்பெறாமல் வாழும் குழந்தைகளின் வாழ்வு இக்காலப் பெற்றோரும் சிறுவர்களும் அறிந்து தமக்குக் கிடைத்திருக்கும் வாழ்வின் மதிப்பை உணர்தல் வேண்டும்
அன்றொருநாள் எங்கள் விழியனைச் சந்தித்த மலைப்பூவே உனக்கு எங்கள் நன்றி
நீ அன்று உரையாடவில்லை எனில் இந்த மலைப்'பூ' எங்களுக்குக் கிடைத்திராது
நீயும் உன் போலுள்ள அத்தனை மலைப்பூக்களும் அனைத்து நிலப்பூக்களும் மலர்ந்து செழித்து மணங்கமழ இறை/இயற்கை அருள்க