"எல்லாரும் உக்காருங்க. மஞ்சுமா, தம்பி பக்கத்துல உக்காரு. சத்து, உனக்கு தனியா சொல்லணுமா டி? அவள் பக்கத்துலே உக்காரு."
"இருங்க… இருங்க! ஒரு ஸ்பெஷல் ஐட்டம் கொண்டு வந்திருக்கேன்." என்று உள்ளே ஓடிய சத்மா, ஒரு ஜாடியோடு திரும்பி வந்தாள்.
"என்னடி இது?"
"அரை நெல்லிக்காய் ஊறுகாய்! இந்த வாட்டி அம்மா சொல்ல சொல்ல… நானே செஞ்சேன்!" குரலில் பெருமிதம் பொங்கச் சொன்னாள்.
"அடேயப்பா! கல்யாணத்துக்கு தயாராகிட்டேன்னு சொல்லு. உன் ரூட் கிளியர் ஆகிடிச்சின்னு சிம்பாலிக்கா சொல்றியா டி?!" மஞ்சிராவின் குரலில் வெகு நாட்களுக்கு அப்புறம் குறும்பு தெறித்தது.
"அய்யே!... நான் எதுக்கு சுத்தி வளைச்சி சொல்லணுமாம்? எல்லாம் டைரக்டாவே சொல்லிடுவேன். உன்னாட்டம் நினைச்சியா?... வருஷக்கணக்கா வாயைக் கட்டிக்கிட்டு இருக்க?!" சத்மா பதிலுக்கு மஞ்சிராவை சீண்டினாள்.
"அதென்னடி வருஷக்கணக்கு?!" டீச்சர் கேட்க… சத்மா மஞ்சிராவைப் பார்த்து கண்ணடித்தாள்.
"அதெல்லாம் அப்படித்தான், டீச்சர்!"
நல்லவேளை! அந்த நேரம் பார்த்து சமையல்கார அம்மா, டீச்சரையும் சித்தியையும் சமையல்கட்டிற்கு அழைக்க… மேற்கொண்டு குட்டு உடையாமல் மஞ்சிரா தப்பித்தாள்.
"ஏய்! என்னடி?" என்று தொடையில் கிள்ள… சத்மா சிரித்துக் கொண்டாள்.
மதனுக்கு என்னவோ மனம் கொஞ்சம் லேசானது போல இருந்தது.
"இன்னும் கொஞ்சம் சாதம் போடவா?" என்று மஞ்சிரா எழப் போக… "நானே…" என்று அவளை தடுத்துத் தானே போட்டுக் கொண்டான். கூடவே அவளுக்கும் ஒரு கரண்டி அள்ளி வைக்க… மஞ்சிரா தரையில் கால் பாவாமல் மிதந்தாள்.
அப்படியே அவன் நெல்லிக்காய் ஊறுகாயையும் அவளுக்கு வைக்கப் போக, சத்மா இடையிட்டாள்.
"ம்ஹூம்!... மஞ்சு நெல்லிக்காய் சாப்பிட மாட்டா."
"இதென்னடி புதுக் கதை?!... எங்க மஞ்சுவுக்கு நெல்லிக்காய்ன்னா உசிராச்சே?!" சமையல் கட்டில் இருந்து சித்தியின் குரல் கேட்டது.
"ஆங்!... அதெல்லாம் அப்போ." என்று உரக்கச் சொன்னவள்… குரலை தாழ்த்தி, "அத்தானுக்கு பிடிக்காதது எதுவும் எனக்கும் வேணாம்னு, அம்மிணி நெல்லிக்காயை ஒதுக்கி வச்சு… வருஷம் நாலு ஆகுது." என்று மதனைப் பார்த்துச் சொல்ல… "எவன்டா அந்த அத்தான்?!" என்று இவனுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.
ஒரு கரண்டி நிறைய நெல்லிக்காயை எடுத்து பிடிவாதமாக மஞ்சிராவின் தட்டில் போட்டவன், தன்னுடைய தட்டிலும் அதற்கிணையாக கொட்டிக் கொண்டான்.
"இப்போ பிடிக்கும்." என்று அவன் அழுத்தமாக சொல்ல… இரு பெண்களுக்கும் ஆச்சரியம் தாங்கவில்லை.
"உங்களுக்கு நெல்லிக்காய் பிடிக்குமா?!" இருவரும் ஒரு சேர குரல் எழுப்பினர்.
"என்னடி இது?!" சத்மா மஞ்சிராவை கேட்க, அவள் உதட்டை பிதுக்கினாள்.
நெல்லிக்காயை பார்க்கப் பார்க்க நாவில் எச்சில் ஊறியது. பல வருடம் பிரிந்த தோழியைப் பார்த்தது போல பரவசம் பொங்கியது. ஆசையோடு பார்த்தாள் மஞ்சிரா. மதன் அவளையே பார்த்திருந்தான்.
"ம். சாப்பிடு." என்றவனால் ஒரு வாய் கூட சாப்பிட முடியவில்லை. புளிப்புக்கும் அவனுக்கும் காத தூரம். யாரோ ஒரு அத்தானுக்கு பிடிக்காததால நாலு வருசம் ஒதுக்கி வைப்பாளாமா. இப்போ சொல்றேன் எனக்கு பிடிக்கும்னு. எனக்காக நீ சாப்பிட்டு தான் ஆக வேணும் என்று வீம்புக்கு போட்டுக் கொண்டவன்… விழி பிதுங்க விழுங்கி வைத்தான்.
"அடக்கடவுளே!... ஏன் டி, இதெல்லாம் சரியாய் தெரிஞ்சி வச்சிக்க மாட்டியா?! அத்தானுக்கு பிடிக்காது, பிடிக்காதுன்னு இத்தனை வருஷமா தப்பா தான் நினைச்சுக்கிட்டு இருந்தியா?! அநியாயமா அத்தனை நெல்லிக்காயை மிஸ் பண்ணிட்டயே! உங்க அத்தான் என்னடான்னா இந்த கட்டு கட்டறாரு!"
'அத்தான்' என்று சத்மா குறிப்பிடுவது தன்னை தானா?! நாலு வருடமாக என்றாளே?! மதனுக்குப் புரை ஏறியது.
"என்னடா அவசரம்?! இதென்ன?! எப்போதில இருந்து நீ நெல்லிக்காய் எல்லாம் சாப்பிட ஆரம்பிச்சே?!" என்று நடந்த கதை புரியாமல் டீச்சர் வினவினார்.
டோட்டல் டேமேஜ் என்று மனதுக்குள் முனகிக் கொண்ட மதன், அசட்டு சிரிப்பொன்றை அவசரமாக உதிர்த்து சமாளித்தான்.
"அது… அது டேபிள் மேனர்ஸ்!"
"அஹான்?!... டேபிள் மேனர்ஸ். சரி தான். இத்தனை நாளா அது லீவில போயிருந்ததாமா? நல்லா பொண்டாட்டிய தாங்கற போ."
நாப்கினால் உதட்டை துடைத்துக் கொண்டே அவன் மஞ்சிராவை பார்த்த பார்வையில் அவள் தன்னை மறந்தாள்.