கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
புத்தகம் : கடல் புறா எழுத்தாளர் : சாண்டில்யன் பதிப்பகம் : வானதி பதிப்பகம் பக்கங்கள் : 1700 நூலங்காடி: Bookwards விலை : 1100
🔆 ஸ்ரீ விஜயத்தின் ஜெயவர்மனுக்கும் அவர் சகோதரர் குணவர்மனுக்கும் அரியணை போட்டி வர, அரசாள வேண்டிய குணவர்மன் தனது மகளுடன் சோழர்களின் உதவியை நாடி வருகின்றார்.
🔆 கலிங்க மன்னன் பீமனால் அங்கு பிரச்சனைகள் வர, சோழர்களின் படைத்தளபதியான கருணாகர பல்லவன், அகூதாவின் உதவியோடு அவர்கள் இருவரையும் தப்பிக்க வைக்கிறார். அகூதாவுடன் இருந்து கப்பல் போரிலும் தேர்ச்சி பெற்றார் கருணாகர பல்லவன்.
🔆 படைத்தளபதியாக இருந்தவர் கடற்கொள்ளைக்காரராக மாறுகிறார். ஸ்ரீ விஜயத்தின் வாயிலாக இருக்கும் அஷ்யமுனைக்கு சென்று, பலவர்மனை வீழ்த்தி அந்த கோட்டைக்கு மஞ்சள்அழகியை தலைவியாக அமரச் செய்தார்.
🔆 ஸ்ரீவிஜயத்தை கைப்பற்ற தனது கடல் புறாவுடன் மிகத் திறமையான வீரர்களுடன் கருணாகர பல்லவன் சென்றார். பிறகு என்ன நடந்தது என்பதே கதை.
🔆 கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரக்கலத்தை, கடல் புறாவாக கருணாகரன் வடிவமைத்தது மிக அற்புதம். கடல் புறாவில் அடிக்கப்பட்ட ஒரு ஆணி கூட, அவர்கள் போர் செய்வதற்கு எவ்வாறு உதவியது என்பதை தெரிந்து கொள்ளலாம். தரையில் நடக்கும் போர் பற்றி நாம் அறிவோம், கடலில் நடக்கும் போர் அதை விட ஆபத்தானது, காற்றின் திசை, அலையின் வேகம், இதற்கு மேல் எதிரிகளின் அடுத்த செயல் என அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
🔆 இரு இளவரசிகள் கதையில் வருகின்றனர். எதிர்ப்பார்த்த மாதிரி நாயகனுக்கு இருவர் மீதும் காதல் வருகிறது. சில இடங்களில், இளவரசிகள் இருவரையும் வர்ணனை செய்கிறேன் என்று பயன்படுத்திய வார்த்தைகள், எனக்கு பிடிக்கவில்லை.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேள்பாரி ஆகியவற்றை வாசித்துப் பல நாள்கள் கழித்து என் கையில் வந்த மிகச் சிறந்த வரலாற்றுப் புதினம் கடல்புறா. இந்தக் கதையில் விறுவிறுப்பு என்ற சொல்லுக்கே குறைவில்லை. கதையின் ஓட்டம் நம்மை இழுத்துச் செல்லும் விதம் அற்புதம். ஒருமுறை கையில் எடுத்துவிட்டால் நூறு பக்கங்களுக்கு குறையாமல் வாசிக்க வைக்கும் வல்லமை கொண்டது.
கதை, அநபாயசோழன் மற்றும் அவனது நெருங்கிய தோழனும் படைத்தலைவனுமான கருணாகர பல்லவனைச் சுற்றியே நகர்கிறது. கருணாகரன் இந்தக் கதையின் மையக் கதாபாத்திரம். அநபாயசோழன் கலிங்கத்தின் மீது படையெடுத்ததற்கு என்ன காரணம் என்பதற்கு வரலாற்று சான்றுகளையும், ஆசிரியரின் கற்பனையையும் கலந்து சிறப்பாக புனைந்திருக்கிறார் சாண்டில்யன். கலிங்கத்துப் பரணி என்னும் நூலில் குறிப்பிடப்பட்ட அந்த வெற்றிக்குப் முன் நடந்ததை கதை இங்கு உயிர்ப்புடன் விரிகிறது.
சாண்டில்யனின் எழுத்தின் தனிச்சிறப்பு, ஒவ்வொரு வர்ணனையும் கண்முன் நிற்கும் வண்ணம் வடிவமைத்தல். கதையின் வேகம் எந்த பக்கத்திலும் தளர்வதில்லை; மாறாக திருப்புமுனைகள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து வாசகரை நிமிடமும் சலிக்க விடாது பிடித்துப் போடும். எனக்கென மிகுந்த ஈர்ப்பை ஏற்படுத்தியது அமீர் என்னும் அரபு வம்சத்தவர். அதேபோல், அகூதா என்ற பாத்திரம் குறுகிய காலம் தோன்றினாலும் முழுக் கதையின் வழியே தனது இருப்பை உணர்த்திக் கொண்டே செல்கிறது. கதையில் காதல் காட்சிகளும் நயமாகப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன.
முதல் பாகத்தில் கலிங்கத்திலிருந்து திட்டமிட்டு தப்பிக்கும் காட்சி என்னை ஆழமாக கவர்ந்தது. அந்தத் திட்டமிடல், அதில் எழும் பரபரப்பு, நடைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் சுவாரஸ்யத்தின் உச்சியை எட்டுகின்றன. கதை பல இடங்களில் கிளைத்தாலும், இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்து முழுமையான நிறைவை அளிக்கிறது.
இரண்டாம் பாகம் தொடக்கத்தில் மெதுவாக நகர்ந்தாலும், பக்கங்கள் செல்லச் செல்ல விறுவிறுப்பின் தீயாய் பறக்கிறது. குறிப்பாக கடைசி எழுபது பக்கங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு பரபரப்பாகவும் மனம்கவரக்கூடியதாகவும் பல திருப்பங்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன.
இறுதி பாகமே அதிகப் பக்கங்கள் கொண்டிருந்தாலும், அதனை வாசிக்கும் போது ஒருபோதும் நீளமாக இருப்பதாக உணரமுடியாது. எல்லா துணைக் கதைகளும் இங்கு ஒன்றிணைந்து தீவிரமிக்க பரபரப்புடன் பறக்கும். வாசகர் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் இறுதி வரை நம்மை கட்டிப்போடுகின்றன.
மொத்தத்தில், கடல்புறா என்பது அழகிய, விறுவிறுப்பான, சிறந்த வரலாற்றுப் புதினம். சோழரும் பல்லவரும் இணைந்து எவ்வாறு தமிழின் புகழை உயர்த்தினர் என்பதை வெளிப்படுத்தும் அரிதான படைப்பு இது. ஒவ்வொரு தமிழரும் கட்டாயம் வாசித்து அனுபவிக்க வேண்டிய நூல். இந்தப் புதினத்தை முடித்தவுடன், சாண்டில்யனின் மற்ற படைப்புகளையும் தவறாமல் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிவிட்டது.