எருமை மறம் ❤️ • தன் படையினர் எல்லோரும் அஞ்சி பின்வாங்கினாலும் தனி ஆளாய் நின்று எதிரிகளை மோதத் துணியும் ஒரு வீரனைப் பற்றிப் பாடுவது ‘எருமை மறம்’. அந்த வகையில் இந்நூல் வீரமும் காதலும் நிறைந்த நம் ஆதித்தமிழரின் இயற்கையோடிணைந்த வாழ்வியலின் அகமும் புறமும் பேசும் மறமாக படைக்கப்பட்டிருக்கிறது. இலகுவான எழுத்தும், இயற்கையை குழைத்து மெழுகிய கவிநயமான மொழிநடையும் பக்கங்களை புரட்டும் அதேவேளை, கொண்ட கருவோ வாசிப்பவர் மனதை புரட்டிப்போடுகிறது. • ஆதிக்கப்போர், தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு தேவைகளுக்காக பல்வேறு வடிவங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்குள் சாதாரண மக்கள் பலியாவதும், வீரதீரர்கள் எதிர்த்து நின்று போராடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு நிலத்தின் மீதான ஆதிக்கப்போரை மையமாகக்கொண்டு விரிந்த நெடுங்கவிதையே இந்த ‘எருமை மறம்’. • [“அதிகாரத்தைக் கைமாற்றத் தேவையான கருவி நிலம், ஒருபோதும் அதனை இழக்கக் கூடாது, மொழிக்குப் பிறகு நிலமே இனத்தை அழியாமல் காக்கும், நமது இனம் அழியாது அழிய விடக்கூடாது. உயிர் கொன்றேனும் உயிர் கொடுத்தேனும் இனம் காப்போம்” —புத்தகத்திலிருந்து.]