மனித மனம் பலவித வண்ணங்களைக் கொண்டது. அது எப்போது எந்த வண்ணத்தை வெளிப்படுத்தும் என்பது சூழ்நிலையைப் பொருத்தது. ஆனாலும் கோபம் எனும் வண்ணம்தான் மனிதனின் எல்லா வன்முறைக்கும், தவறுகளுக்கும் அடிப்படையாகிறது. நேரான வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என நோக்கம்கொண்டவர்கள் பலரை கோபம், குரோதம் போன்றவை திசைமாற்றி வன்முறையின் பக்கம் இடறிவிடுகின்றன. வன்முறை உலகத்துக்குள் சென்றவர்கள் அதிலிருந்து வெளியே வரமுடியாமல் தங்கள் வாழ்வை இருள்களிலேயே முடித்துக் கொள்கிறார்கள். தூங்கா நகர் மதுரையையும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளையும் கதைக்களமாகக் கொண்ட இந்த ரெண்டாம் ஆட்டம், ஆத்திர மனிதர்களும் சூழ்நிலையால் திசைமாறிய மனிதர்களையும், பழிக்குப் பழி என பகை கொண்டு &#
ஒரு non-linear கதையை வார வாரம் தொடராக வாசிக்க பெரும் சிரமமாக இருந்ததினால் பக்கங்களை வெட்டி வைத்திருந்து சமீபத்தில் வாசித்தேன்.
ஓ அடுத்த கொலையா என்று நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளும் அளவுக்கு கதை முழுக்க அவ்வளவு கொலைகள். ஜெகதிக்கு மட்டும் அல்ல நமக்கும் ரத்த கவுச்சி அடிப்பது போன்ற உணர்வு. லக்ஷ்மி சரவணகுமாருக்கு நன்றாக character arc எழுத வருகிறது. முத்தையா காளி ஜகதி.. தரம்.
ஒரு அத்தியாயத்தில் செல்வம் சோணையிடம் ஜெகதியை அழைத்து வர சொல்கிறான். அடுத்த அத்தியாயத்தில் முத்தையா ஜெகதியை அழைத்து வர செல்வத்திடம் சொல்கிறார். ஒரு வேலை முத்தையாவின் அறிவுறுத்தலில் ஜெகதி அழைக்க பட்டிருந்தால் அது முன்னமே பதிவு செய்ய பட்டிருக்க வேண்டும்.
திடுதிப்பென்று சுப்புத்தாயி ஒதுங்குவது எப்படி ?
சுரேஷை கொலை செய்தது யார்? ஏன் இந்த கொலை மட்டும் விளக்கப்படமால் முடிவு மட்டும் சொல்ல படுகிறது?
தமிழக அரசியலின் மாற்றங்களுடன் பயணிக்கும் கதை நடிகரின் மரணத்திற்கு பின் எந்த referenceகளும் இல்லாமல் செல்கிறதே. தலைவரின் மகன் ரவி பகுதியில் சொல்வதற்க பஞ்சம்?
முதலும் முடிவும் ரொம்பவே பிடித்திருந்தது.
This entire review has been hidden because of spoilers.
ஆனந்த விகடன் 2022-ல் பிரசுரித்து அதிக விற்பனையான ஐந்து புத்தகங்களில் ஒன்று என்கிற அறிமுகத்துடன் இந்த புத்தகத்தை எடுத்த எனக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது . கதையின் ஒன் லைன் - வன்முறை . அந்த லைனை சுற்றி கதாபாத்திரங்கள் பிணையப்பட்டு நகரும் கதை வேறு எந்த விஷயத்தையும் ஆழ பேசாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்திருக்கே வந்து முடிவது தான் ரெண்டாம் ஆட்டம் . ரெண்டாம் ஆட்டம் என்கிற தலைப்பிற்கு பதில் இரண்டு ( அல்லது இரண்டரை ) தலைமுறை வன்முறை ஆட்டம் என்று பெயரிட்டிருக்கலாம் . கோவம் , வன்மம் , பொறாமை , ஆற்றாமை , வஞ்சம் , சூழ்ச்சி போன்ற எல்லா உணர்ச்சிகளுக்கும் மதுரை மக்கள் குறிப்பாக அதிகாரவர்கத்தில் இருப்போர் வன்முறை மூலமே தீர்வுகாண்கிறார்கள் ( கண்டார்கள் - தொண்ணுறுகளின் ஆரமபம் மற்றும் அதற்கு முன் கதை நடப்பது படைக்கப்பட்டிருப்பதால் , கண்டார்கள் என்று சொல்வதே சரியாகும் ) என்கிற ஒரு பொதுபுத்தியோடு எழுதப்பட்ட படைப்பாக தான் இருக்கிறது . பல கதாபாத்திரங்கள் வந்து வன்முறையை சுமந்து கொண்டு கதையை நகர்த்திக்கொண்டிருக்க ஜெகதி , செல்வம் , முத்தையா , காளி என இந்த நாள்வரை சுற்றி கதை நகர ஆரம்பிக்கும் போதே ஓரளவு கதை நம்மிடம் ஒன்றுகிறது . இந்த கதை விகடனில் முதலில் பதிப்பானதால் வார வாரம் கதையை பரபரப்பாக்க கொலை கொண்டு முடிப்பது அத்தியாயமாக படிக்க நன்றாக இருக்கிறது ஆனால் முழுநீள நாவலாக அலுப்பை மட்டுமே தருகிறது . படிப்போரை ஆச்சரிப்படுத்தும் திருப்பம் என்கிற ஒன்று இல்லாமல் திருப்பம் என்றாலே கொலையாக தான் இருக்கும் என்கிற நம் யூகத்தை பொய்யாகாமல் பார்த்துக்கொண்ட எழுத்தாளரை கண்டிப்பாக பாராட்ட தான் வேண்டும் . விறுவிறுப்பான ஒரு நாவல் படிக்க விரும்புவோர் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தால் கண்டிப்பாக நேரம் ஓடும் . அதை தாண்டி வேறு எதுவும் ( இலக்கியமோ , வாழ்வியலோ ) இந்த புத்தகத்திலிருந்து எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே தரும் . தமிழில் நான் பார்த்த அருமையான புத்தக அட்டை வடிவமைப்பு கொண்ட புத்தகம் இது . பார்த்தவுடனே கையில் எடுக்க தூண்டும் ஒரு கவர்ச்சிகரமான அட்டை . அந்த அட்டையும் என் ஏமாற்றத்திற்கு காரணம் என்று சொல்லலாம் .
விகடன் பிரசுரம் என்றவுடனே நான் சுதாரித்திருக்க வேண்டும். ஆனால் லஷ்மி சரவணகுமார் கதைகளைப் பற்றி நல்ல விமர்சனங்கள் இருந்ததால் படிக்க எடுத்தேன். ஆரம்பத்தில் ரொபெர்த்தொ சவியானொ, மார்ட்டின் ஸ்கர்சசி போன்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். நல்லது. ஆனால் புத்தகம் அவர்களுக்கு கடன் படுகிறதா?
“நாலு பேருக்கு நல்லது செய்ய எதுவுமே தப்பு கிடையாது” என்ற வசனத்தை என்னும் நம் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வளவு நாள் abuse செய்வார்கள் என்று தெரியாது. கவனியுங்கள்...நான் எல்லோரும் ஒழுக்கசீலர்களாக இருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆனால் இதை glorify செய்யும் கதைகள் வெறுப்பைவிட அலுப்பை கொடுக்கின்றன.
மதுரை நிழல் உலகம், அதில் நடமாடும் மனிதர்கள், காவல் துறை, அரசியல்வாதிகள், பொதுமக்கள் என்று பல கோணங்கள் இந்தப் புத்தகத்தில் இருந்தாலும் எல்லாம் தேய்வழக்காக இருக்கின்றன. சிலசமயம் தினத்தந்தியில் செய்திகளில் வரும் வார்த்தைகள் கூட உயிரோட்டமாக இருக்கும், இந்தப் புத்தகத்தில் யாரோ 10ம் வகுப்பு மாணவன் கடமைக்குக் கட்டுரை வரைந்தாற் போல எழுத்தாளர் எழுதுகிறார்.
எல்லா கதை மாந்தர்களும் தட்டையாக, எதற்கெடுத்தாலும் ரத்தம் கேட்கிறார்கள். படிக்கும் நானும் கேட்க ஆரம்பிப்பேனோ என்று பயந்தேன். தொடரில் நடக்கும் சம்பவங்கள் அனைத்து தமிழ் சினிமாக்களில் காட்டப்பட்டுவிட்டன. வழக்கம்போல பெண்கள் இவர்களிடம் மிக சுலபமாக வீழ்கிறார்கள். இந்த psychologyஐ பிரம்மாவாலும் விளக்கமுடியாது என்று சொல்லிவிடலாம். என்றாலும் ஒரு சில இடங்களில் ஆச்சரியம் இருக்கிறது(சங்கரி தன்னை மறுமணம் கேட்க்கும் இடம், முத்தையா தன் முடிவைத் தேடுவது).
மொத்தத்தில் எழுத்தாளரின் திறமையை வீணடித்த ஒரு படைப்பு. மார்ட்டின் ஸ்கர்சசியை அவர் ஆரம்பத்தில் குறிப்பிட்டதால் ஒன்று சொல்லவேண்டும். அவரின் Mean Streets, The Departed, Goodfellas, Casino, The Irishman பார்த்தவர்களுக்கு ஏன் தமிழ் gangster படங்களோ, அல்லது கதைகளோ எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று தெரியும். அவரின் படங்கள் எல்லாம் ஒரு மனித வீழ்ச்சியை மிக உக்கிரமாக பதிவு செய்பவை. இதில் கடைசி மூன்று படங்களும் புத்தகங்களாக முதலில் வெளிவந்தவை. அவைகளை அவசியம் படிக்கலாம்.