தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசப்பிணைப்பை, புத்த துறவியின் இசையை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள 18 குறுங்கதைகள் அடங்கிய நுால் இது. இதில் நாம் அறிந்த மனிதர்களின் அறியாத வாழ்க்கையைப் பற்றி அலசுகிறது.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்னன் தமிழ் சிறுகதை தொகுப்பு 148 பக்கங்கள் தேசாந்திதிரி வெளியீடு
இந்த வருடம் வெளியான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சிறுகதை தொகுப்பு , அதற்கு காரணம் அதன் ஆசிரியர் . எஸ் ரா அவர்கள் சிறுகதையில் ஒரு மாஸ்டர் என்றுதான் சொல்ல வேண்டும் . இத்தனை வருடங்களுக்கு பிறகும் இத்தனை கதைகளுக்கு பிறகும் அவருக்கு எழுதுவதற்கு ஒரு சிறுகதையாக என்ன மிஞ்சியிருக்கிறது என்ற கேள்வியே என்னை இந்த புத்தகத்தை நோக்கிய பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . இப்படி மாஸ்டர் களின் சம கால புதிய படைப்புகளை திறக்கும் முன் எனக்குள் ஒரு அசரீரி போல ஒலிப்பது அ .முத்துலிங்கம் அவர்களின் ஒரு வாக்கியம் தான் . " நூறு நாற்காலிகளை செய்த ஒரு தச்சனுக்கு 101 ஆவது நாற்காலி செய்வது மிக சுலபம் , அதுவே 100 சிறுகதைகளை எழுதிய ஒரு எழுத்தாளனுக்கு 101 ஆவது சிறுகதை எழுதுவது தன் முதல் கதையை எழுதுவதை விட மிக மிக கடினமான ஒன்று ".இந்த வாக்கியம் எந்த அளவுக்கு உண்மை என்பதை எஸ் ரா அவர்கள் போன்ற மாஸ்டர்கள் கூறினால்தான் நமக்கு தெரியும் .
இந்த தொகுப்பில் மொத்தம் 18 சிறுகதைகள் உள்ளன .கதைகளுக்குள் செல்லும் முன் என்னை வெகுவாக கவர்ந்தது அக்கதைகளின் தலைப்புகள் தான் . மிகவும் மாறுபட்ட , கவித்துவமான , புதுமையான தலைப்புகள் . தலைப்புகளே தங்கள் கதைகளை வாசிக்க அழைக்கின்றன . குறிப்பாக இந்த புத்தகத்தின் பெயரான "கிதார் இசைக்கும் துறவி " என்ற தலைப்பு எவ்வளவு மாறுபட்ட , புதுமையான ஒரு தலைப்பு . ஒரு மொட்டை தலையுடன் ,காவி அங்கியுடன் ஒரு பௌத்த துறவி ஏன் கிதார் போன்ற ஒரு நவீன இசைக்கருவியை வாசிக்க வேண்டும் ? அதுவும் ஒரு நாளில் வெறும் 7 நிமிடம் மட்டுமே வாசிக்கும் அவரை வேடிக்கை பார்க்க ஏன் அவ்வளவு கூட்டம் திரள வேண்டும் ? இப்படி ஒரு வாசகனாக யோசிக்கும் வேளையில் கதை அந்த துறவியை பற்றியோ , கிதார் பற்றியோ அல்ல மாறாக ஒரு தந்தைக்கும் அவருடைய இளம் பருவ மகளுக்கும் இடையே சுருங்கி விரியும் உறவை பற்றியது என்பது கதையை வாசிக்கும்பொழுதுதான் நமக்கு புரிகிறது .
எஸ் ரா இந்த தொகுப்பில் பல புதுமையான பரிசோதனைகளை தன் சிறுகதைகள் மூலம் நிகழ்த்தி பார்த்திருக்கிறார் . இந்த வேட்கைதான் இத்தனை வருடமாக எஸ் ரா வை தொடர்ந்து எழுதவைத்துக்கொண்டிருக்கிறது . அவருக்கு மிகவும் ஆதர்சமான செகாவை பற்றி ஒரு கதை { செகாவின் துப்பாக்கி } , காஃப்கா வின் உருமாற்றம் போல - பனிக்கரடியாக உருமாறும் ஒரு அரசு அதிகாரி { பனிக்கரடியின் கனவு } , ஒரு எழுத்தாளன் வீட்டின் கதவை தட்டி கவிதைகளை மட்டுமே பிடிக்கும் உனக்கு ஏன் கதைகளை பிடிப்பதில்லை என்று கேள்வி கேட்கும் கதைகள் { கதவை தட்டும் கதைகள் } , ஹெர்மன் மெல்வில் உடைய MOBY -DICK கதையை களமாக கொண்டு ஒரு கல்லூரி ஆசிரியருக்கும் - மாணவிக்கும் இடையே நிகழும் ஒரு புரிதலின் போராட்டம் { வகுப்பறையில் திமிங்கலம் } . இப்படி பல் வேறு வகையில் அவர் தமிழ் சிறுகதைக்கு ஒரு புதிய பாதைக்கான தேடலில் தன்னையும் தன் வாசகர்களையும் கைகோர்த்து அழைத்துச்செல்கிறார் .
எப்பொழுதும் இந்த உலகம் கண்டுகொள்ளாத ஒருவனை இலக்கியம் மட்டும் தான் உற்றுநோக்கும் . இலக்கியவாதியின் கண்களுக்கு மட்டும்தான் அவன் தெரிவான் . இவனும் இந்த உலகத்தில் நம்மோடு உருவத்தால் மட்டுமே மனிதன் என்று இந்த உலகம் அடையாளப்படுத்தும் ஒரு அவல நிலையை அகற்றி அவனும் பசி , சிரிப்பு, துக்கம் , காதல் , அன்பு , கண்ணீர் , ஏக்கம் ,கோபம் , ரௌத்ரம் என அனைத்து உணர்வுகளும் கொண்ட ஒரு சராசரி மனிதன் தான் என்பதை உணர்த்துவதுதான் இலக்கியம் . அந்த வகையில் " இரவு காவலாளியின் தனிமை " " முகமது அலியின் கையெழுத்து " ஆகிய இரு கதைகளும் நம் அன்றாட வாழ்வில் நாம் எளிதில் கடந்து சென்று கவனிக்க மறந்த இரு உன்னதமான உயிர்களை பற்றிய கதைகளே . இந்த தொகுப்பில் என்னை பெரிதும் பாதித்த ஒரு கதை என்றால் " தலைகள் இரண்டு " என்ற கதைதான் . ஒரு மருத்துவனாக இறந்த மனித உடல்களை கூறுபோட்டும் , பிறவி குறைபாடு காரணத்தால் இறந்த சிசுக்களை கண்ணாடி குடுவையில் அடைத்து பாடம் படித்து பழகிய எனக்கு அந்த இரட்டை தலை கொண்ட சிசுவுக்கு ஒரு அன்னை இருப்பாள் , அந்த சிசுவுக்கு ஒரு அண்ணனோ , அக்காவோ இருப்பாள் , அவர்கள் குடும்பத்தில் இன்றும் அந்த சிசு அவர்களின் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பான் என்றோ நாங்கள் எண்ணிப்பார்த்ததே இல்லை . இது தான் ஒரு இலக்கியவாதியின் பார்வைக்கும் ஒரு சராசரி மனிதன் அவன் மருத்துவனாகவே இருந்தாலும் அவனுடைய பார்வைக்கும் உள்ள வேறுபாடு . தன் அன்னை சொல்லி கேட்டு , தன் நினைவுகளில் மட்டுமே இருந்த தம்பியை முதல் முதலில் கண்ணாடி குடுவையில் கண்டவுடன் அவன் ஓடோடி தன் அன்னையிடம் கூறி , இருவரும் அந்த நினைவு அலைகளால் கரையொதுக்கப்பட்டு தம்பிக்கு ஏன் நாம் பெயர் வைக்கவில்லை என்று வினவுகின்றனர் ? உயிருள்ளவருக்குத்தான் , உயிருள்ளவரைதான் இங்கு எல்லாமே , இறந்த பின் இங்கு அனைவரும் வெறும் உடல்கள் மட்டுமே . ஆனால் , கதையின் முடிவில் தாய் மனம் கொள்ளாமல் தன் உயிரின் ஒரு பாதியை அதுவும் இரட்டை பாதியை நேரில் சென்று கண்டு அதற்கு ஒரு பெயர் அல்ல இரண்டு பெயர்கள் சூட்டுவது இலக்கியத்தின் உச்சம் . இரண்டு தலைகள் உள்ளதால் அவர்கள் இரண்டு மகன்கள் அதனால் இரண்டு பெயர்கள் . இனி அந்த அருங்காட்சியகத்திற்கு தவறாமல் ஒரு பார்வையாளர் வருவார் , வெறும் பார்வையாளராக மட்டுமல்லாமல் ஒரு தாயாக அதுவும் இரண்டு மகன்களின் தாயாக . இத்தனை அன்பு நிறைந்த அம்மாக்களின் இதயம் வெறும் ரத்தமும் சதையும் மட்டுமே கொண்டு இயங்குகிறது என்பதை நம்புவது சற்று கடினமான ஒன்று தான் .
"கிதார் இசைக்கும் துறவி " 18 சிறுகதைகளின் தொகுப்பு, மனித வாழ்க்கையில் சில முடிவுகள் அவர்களது இயல்பையே மாற்றுகின்றன , அந்த மாதிரியான - நினைத்தது ஒன்றும் நடந்தது ஒன்றும் நிதர்சனமான உலகில் எப்படி அவர்களை கொண்டு செல்கிறது என இக்கதைகளின் வழியே எஸ் ரா, நிதானமாக விரிந்துரைக்கிறார் ..