ராஜாவும் பிறரும் எண்பதுகளின் திரையிசை பற்றிய அனுபவப் பகிர்வுகள்
தமிழ்த் திரை இசையை அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம்கள், இரண்டாயிரத்துப்பத்துகள் என்று decadeவாரியாகப் பிரித்துப் பேசுகிற மரபு இருக்கிறது. ஒவ்வொரு Decadeக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர்கள் முந்தைய decadeஐச் சற்றே அலட்சியமாகப் பார்ப்பதும் (நாங்க அங்கிருந்து வளர்ந்துட்டோம்ல!), அடுத்த decadeஐ மிக அலட்சியமாகப் பார்ப்பதும் (அங்கே தரம் குறைஞ்சுபோச்சுல்ல!) உப மரபு.
அவ்வகையில், நான் எண்பதுகளின் ரசிகன். குறிப்பாகச் சொல்வதென்றால், எண்பதுகளின் இளையராஜாவுக்கு ரசிகன்.
எண்பதுகளுக்கு முன்பும் பின்பும் ராஜாவும் பிறரும் நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார் என்றாலும், ஏனோ இவை எனக்கு மிக உவப்பானவை. என் ஃபோனில் இவற்றையே மிகுதியாக நிரப்பி வைத்துத் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்கிறேன். மற்ற பாடல்கள் அவ்வப்போது கேட்பதுண்டு. ஆனால் ஒரு சில நிமிடங்களுக்குப்பின் சலித்துப்போய், மனம் மீண்டும் இவற்றையே நாடும், ‘வீட்டு ரசம்’, ‘அம்மா கையால் சோறு’, ‘புருஷன் கையால் ஒரு மொழம் மல்லிகப்பூ’ போன்ற க்ளிஷேக்களை இங்கே நிரப்பிக்கொள்ளவும்.
அவ்விதத்தில், எண்பதுகளின் தமிழ்த் திரையிசைபற்றி நான் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை Freetamilebooks.com இணையத் தளத்தினர் தொகுத்து மின்னூலாகக் கொண்டுவருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.
இந்நூல் முற்றிலும் இலவசம், வணிக நோக்கின்றி யாரும் எவ்வண்ணமும் பயன்படுத்தலாம். இதனை வாசிப்போர் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளலாம், தடை ஏதும் இல்லை. வாசித்து உங்கள் கருத்துகளை nchokkan@gmail.comக்கு எழுதினால் மகிழ்வேன். நன்றி!
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சிறிதும் பெரிதுமான 15 கட்டுரைகள் கொண்ட குறுநூல். கட்டுரைகளைப் படிக்கும் போதே அவை குறிக்கும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வந்தேன். மொத்தமாக 2 மணி நேரம் பிடித்தது. பல புதிய விடயங்களை உள்ளடக்கிய புத்தகம். திருவாசகம் பற்றிய கடைசி கட்டுரையை சொக்கன் தனி புத்தகமாக மற்ற பாடல்களின் விளக்கத்தோடு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
நாடி, நரம்பு, இரத்தம், சதை என எல்லாவற்றிலும் தமிழ் ஆர்வமும், இளையராஜா இசையின் மீது தீராத ரசனையும் கொண்டுள்ள ஒருவரால்தான் இதுப்போன்று எழுத இயலும். இந்தப் புத்தகத்தை படித்தது நல்லதொரு ரசனையான அனுபவம். இளையராஜா இசை பிரியர்களுக்கும், தமிழ் பிரியர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.