அதிமுக்கியமாக அவன் ஆர்டர் செய்தவை எல்லாம் தனக்காக எனபது புரிய… அவளுக்கு தலை சுழன்றது. பசி மயக்கம் என்று கண்ணை தேய்த்துக் கொண்டாள். சாப்பிட தூங்க என எதுவும் பிடிப்பதில்லை.
கோபமாக இருப்பவன் கோபமாகவே இருந்து விட்டால் கூட தேவலாம். தூவானம் போல இன்று தூறுவேன்; திடீரென தீயை வாரி இறைப்பேன் என்று அவன் நடத்தும் ஆள் மாறாட்டம் கொடுமையாக இருந்தது.
வேகவேகமாக பொட்டலத்தை பிரித்து இட்லியை விண்டு விழுங்கினாள். சட்னியின் காரமும் டீயின் தித்திப்பும் அவள் உட்கொள்ளும் அளவில் கச்சிதமாக! டீயின் வெம்மை தொண்டைக்குள் இதமாக இறங்கினாலும் நெஞ்சை சுட்டெரித்தது.
இது எந்த விதமான வெறுப்பாம்?! வேளைக்கு உண்கிறாளா என்பதை கழுகு போல பார்க்கிறான். கல் தடுக்கினால் கூட "என்னாச்சு?" என்று எங்கிருந்தோ ஓடி வருகிறான். முகத்தில் மட்டும் எள்ளையும் கொள்ளையும் முப்போகம் விவசாயம் செய்கிறான்!
நடையை எட்டிப் போட்டு அவனிருக்கும் இடம் சென்றால்… நெற்றி சுருக்கி, "ஏன், இப்படி ஓடி வரே?" என்று அதற்கும் எரிந்து விழுந்தான்.
இவனும் இவனது அக்கறையும் என பற்றிக் கொண்டு வந்தது.
"அவ்வளோ வெறுப்பா இருக்கா?" காதோரம் குனிந்து நிர்வாக விஷயம் பேசுபவன் போல அவன் கேட்க… முகம் மாறாமல் காக்க அவள் சிரமப்பட்டாள்.
உணர்ச்சி துடைத்த குரலில் அவன் சொல்லி இருக்க… உள்ளக்கூடு வெறுமையானது. தினம் காலையில் அது வேண்டாத ஏக்கங்களால் நிரம்பி வழிவதும்… விரும்பத்தகாத வார்த்தைகளால் வடிந்து காய்வதும் வாடிக்கை ஆகிவிட்டது.
"OK, பாஸ்" என அவனுக்கு மட்டும் இன்றி அருகில் இருந்தவருக்கெல்லாம் கேட்கும் படி சொன்னாள்.
"பாஸ்-ஆ?... என்ன மேடம்? சார் உங்க முறைமாமன் தானே?"
கொஞ்சம் சலுகை உள்ள மூத்த நிர்வாகி மூக்கை நுழைத்தார். தேஜன் தீ பார்வை பார்த்தான்.
சற்றும் சளைக்காத பார்வையோடு "உறவு முறை எல்லாம் தான் இல்லைன்னு ஆகிடுச்சே, சார்." என்றாள் மயிலா.