Episode 22 & 23 பச்சை பட்டில் மதுரை மீனாட்சி போல மிளிர்ந்தாள் மயிலா. காதோரம் ஒரு கற்றை குழல் தொங்க... தளர்வாக ஒரு கொண்டை போட்டு கார் கூந்தலை முடித்திருந்தாள். கொண்டையை சுற்றி சூடி இருந்த சன்ன மல்லி தேஜனை தலை சுற்றிப் போக வைத்தது.
பிளாக் மெட்டலில் பெரிய தோடு கழுத்தோடு கொஞ்சியது. அதிக ஜொலிப்பில்லாத சரிகைக்கு அந்த மெட்டல் காதணி பொருத்தமாக இருந்தது.
சின்ன சாந்து பொட்டு கூட அத்தனை அழகு சேர்க்குமா?! ஆமாம் என்ற பொட்டுக்குக் கீழே மெல்லிய கோடாக சந்தனமும் குங்குமமும்.
தேஜன் அவளுக்கு இணையான மிடுக்கோடு தெரிந்தான். கருத்தடர் கேசம்; சுடர் விடும் கண்கள்; சுண்டி இழுக்கும் பார்வை; பொலிவான புன்னகை.
அடர் நிற குர்தாவில் ஒரு அரச குமாரன் போல இருந்தான். கன்னத்தில் மயிலாவை சுழற்றிப் போடும் அந்த காந்த குழி! கம்பீரத்துக்கு கம்பீரம் சேர்க்க கையில் ஒரே ஒரு ஐம்பொன் காப்பு.
மயிலா சாய்ந்து அமர்ந்து கொள்ள ஏதுவாக காரின் முன் இருக்கையை சரி செய்து விட்டான் தேஜன். அடங்காத கேசத்தை அளைய துடித்தன மயிலாவின் கரங்கள். அவனையே மையலாகப் பார்த்திருந்தாள். தரணி பாட்டி சொன்னதே மனதில் ஓடியது.
"தேங்க்ஸ்!" மனமுவந்து சொன்னாள்.
"ம்."
"இல்ல… சீட்டை சொல்லலை. பாட்டி கிட்டே பேசினீங்களே… அதை சொன்னேன்."
நிமிர்ந்து பார்த்தான்.
"நீங்க தான் என்னை வற்புறுத்தி கல்யாணம் செஞ்சிக்கிட்டதா சொன்னீங்களாமே?!.. பாட்டி சொன்னாங்க."
"ஓ."
"மஞ்சள் கயிறை பத்தி பாட்டி எதுவுமே தூண்டி துருவலைன்னாலும்… என்னை பத்தி என்ன நினைப்பாங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். எனக்கு சங்கடமாவே இருந்தது…"
"இப்போ சரியா போச்சா?" என்று கேட்டு அவளை ஆகாசத்தில் பறக்க விட்டான்.
"ஆமா. ரொம்ப சந்தோஷம்!" தெற்று பல் தெரிய சிரித்தாள்.
"ம். குட். ஒரே வீட்டிலே இருக்க போறீங்க. இட் இஸ் இம்போர்ட்டன்ட் டு கிளியர் தி ஏர். (It is important to clear the air.)" என்று சொல்லி, பறக்கும் அவளை பட்டென்று தரையில் இழுத்துப் போட்டான்.
சாலையை இவள் இலக்கின்றி வெறிக்க... சாலையே இலக்கு என்று அவன் வெறிக்க… அத்தனை மெனக்கெட்டு சீட்டை சரி செய்திருக்க வேண்டியதில்லையோ?!... வர வேண்டிய இடம் அதற்குள் வந்து விட்டிருந்தது.