Jump to ratings and reviews
Rate this book

அனாகத நாதம்

Rate this book

Paperback

Published January 1, 2024

Loading...
Loading...

About the author

செந்தில் ஜெகந்நாதன் (செந்தில் ஜெகன்னாதன்) (ஆகஸ்ட் 20, 1987) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். திரைத்துறையில் பணியாற்றுகிறார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (27%)
4 stars
7 (63%)
3 stars
1 (9%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Moulidharan.
97 reviews21 followers
January 1, 2026
பொங்கிப்பெருகும் அன்பின் ஊற்று

நவீன தமிழ் இலக்கிய சூழலில் எழுதப்படும் உரைநடை வடிவில் காலத்திற்கு ஏற்றார் போல அதன் பேசு பொருள் மாறிக்கொண்டே இருந்து வந்துள்ளது . அதில் பிரதானமாக இடம் பிடித்த ஒரு பேசுபொருள் அல்லது களம் குடும்ப உறவுகளுக்குள் நிகழும் சிக்கல்களும் , தனிமனிதன் சார்ந்த மனச்சிக்கல்களுமே . இன்றைய காலகட்டத்தில் சமூகம் சார்ந்த , மக்கள் வாழ்வியல் சார்ந்த , நிலம் மற்றும் மொழி மீது ஏற்படும் அடக்குமுறைகளை சார்ந்த பேசு பொருட்களாக அவை மாறியிருந்தாலும் , இன்றும் உறவுச்சிக்கல்களுக்கான இடம் இருக்கத்தான் செய்கிறது . இன்றைய படைப்பாளிகள் பல சிறந்த படைப்புக்களை அதன் மொழியளவிலும் , வடிவத்தின் அளவிலும் அவைகளை கொண்டாடினாலும் கருத்தியல் அடிப்படையில் அப்படைப்புகளை இந்த ஒற்றை காரணத்திற்காக ஏற்றுக்கொள்ள ஏனோ மறுத்துவிடுகின்றனர் . அப்படி பார்த்தால் இன்றைய இலக்கிய சூழலில் குடும்பம் சார்ந்த - உறவு சிக்கல்கள் சார்ந்த - ஆண் பெண் உறவுகள் சார்ந்த படைப்புகள் எந்த தராசிலும் வைக்க தகுதியற்றவையா என்ற கேள்வி எழுகிறது . மொழியும் - வடிவமும் சிறப்பாக இருந்தாலும் கருத்தின் அடிப்படையில் வைத்து மட்டுமே ஒரு படைப்பை மதிப்பிட முடியுமா என்ற ஐயமும் எழுகிறது . இத்தகைய சூழலில் தன்னுடைய முதல் படைப்பிலேயே இந்த கருத்தியலை எந்த வித ஐயமுமின்றி தூக்கி பிடித்தவர் செந்தில் ஜெகன்னாதன் . அதற்கேற்றாற் போல எழுத்து உலகமும் சரி வாசகர் உலகமும் சரி அவரை எந்த வித விமர்சனமுமின்றி ஏற்றுக்கொண்டது . அந்த நம்பிக்கையின் வழியே அவருடைய இந்த இரண்டாவது தொகுப்பிலும் அவர் எடுத்துக்கொண்ட களம் என்னை ஆச்சரியப்படுத்தியது .

சிறுகதை என்ற வடிவத்தை தன்னுடைய எல்லா கதைகளிலும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் ஆசிரியர் . கதை தொடங்கும் இடமாகட்டும் - உச்சம் பெரும் தருணமாகட்டும் - முடியும் தருணம் வரும் திருப்பமாகட்டும் எல்லாமும் அந்தந்த கதை களத்திற்கு கச்சித்தமாக பொருந்திவந்துள்ளது . இவையெல்லாம் தாண்டி அவருடைய மொழி முதல் தொகுப்பை காட்டிலும் சற்று செம்மையடைந்து - திறம்பட வெளிப்படுகிறது . குறிப்பாக சொற்தேர்வு - கூற வந்ததை சுருக்கமாகவும் ஆழமாகவும் கூறும் திறன் கூடிவந்துள்ளது .குறிப்பாக விடம் கதையில் " எதுக்கு பயப்புடுறோமோ அது கூட பழகிட்டோம்னா , தைரியம் தானா வந்துடும் " இந்த வரியை அந்த கதையில் படித்தவர்களுக்கு தெரியும் இதன் ஆழம் என்னவென்று . சொற்தேர்வை பற்றி சொல்லவேண்டுமென்றால் இரண்டு கதைகளை குறிப்பிடலாம் - அனாகத நாதம் இறுதிவரியில் " பொங்கும் புனலென பெருக்கெடுத்துக்கொண்டிருந்த வாசிப்பு " கடைமுகம் கதையின் இறுதி வரியில் வரும் " சிக்கென பிடித்தான் " . பொங்கும் புலனும் - தேவாரத்தில் பயன்படுத்திய சொற்களும் , சிக்கென பிடித்தான் - திருவாசகத்தில் பயன்படுத்திய சொற்களும் இங்கு 21 ஆம் நூற்றாண்டில் ஒரு சிறுகதையின் முடிவில் அந்த கதைக்கு ஏற்றார் போல பயன்படுத்தியது அவருடைய மொழி புலமையை பறைசாற்றுவதோடு நம் தமிழ் மொழியின் 2500 ஆண்டுகால தொடர்ச்சியின் ஒரு புள்ளியாக இதனை பார்க்கமுடிகிறது .

பெரும்பாலான எழுத்தாளர்கள் தங்களுடைய ஆரம்ப கால படைப்புகளை தங்களுடைய பால்யத்தின் நினைவுகளிலிருந்தும் , தங்களுடைய மண் சார்ந்த வாழ்விலிருந்தும் , தங்கள் வேர்களில் பின்னிப்பிணைந்த கதைகளையே எழுத முனைவார்கள் . இதற்கு செந்திலும் ஒரு விதிவிலக்கு அல்ல என்றாலும் இந்த தொகுப்பில் அவர் சில புதிய முயற்சிகளை தன்னுடைய சில கதைகளில் நிகழ்த்திப்பார்த்திருக்கிறார் . போகன்வில்லா கதை முற்றிலும் நவீன வாழ்வின் நகரத்தின் இன்றைய ஆண் பெண் உறவுகளை பேசும் கதை . இதில் ஒரு தலை பட்சமாக கதை நகர்ந்தாலும் - முழுக்க ஆணின் பார்வையிலேயே கதை சொல்லப்பட்டாலும் - ஆங்காங்கே திரைப்பட காட்சிகளை நமக்கு நினைவூட்டினாலும் இத்தகைய முயற்சி ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம் . ஏனெனில் இத்தகைய முயற்சி எத்தகைய எதிர்வினைகளை கொடுக்கிறது என்பதையும் அந்த களத்தை எப்படி வெவ்வேறு கோணத்தில் பார்க்கலாம் என்பதையும் அவர் இதன் மூலம் அறிந்துகொண்டு தன் வடிவத்தை செழுமைப்படுத்திக்கொள்ள உதவும் . தன்னுடைய பால்யத்தை அலகிலா விளையாட்டு என்ற கதை மூலம் அவர் புரவயமாகவும் - அகவயமாகவும் அந்த சிறுவனின் பார்வையின் வழியே நமக்குள் புகுத்த முயற்சித்தது சிறப்பு . தன்னுடைய திரையுலக அனுபவத்தின் வழி சாயை கதையை அவர் எழுதியிருந்தாலும் அதன் பின்னால் ஸ்டூடியோ கால திரையுலகம் சார்ந்த பல தகவல்களின் மூலம் அதன் பின்னால் இருக்கும் அவருடைய ஆராய்ச்சியும் அதற்கான மெனக்கெடலும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது .

செந்தில் ஜெகன்னாதனின் எழுத்தின் சிறப்பே அவர் கதைகளுக்குள் கொண்டு வரும் உவமைகள் தான் . அவை கதைக்கும் அத்தருணத்திற்கும் பொருத்தமாக இருப்பதோடு நம்மை அந்த கற்பனைக்கும் பயணம் செய்ய வைத்து நம்மிடம் ஒரு நீங்க இடத்தை அந்த உவமைகள் பெற்றுக்கொள்கின்றன . அனாகத நாதம் கதையில் தன் நாதஸ்வரத்தை தொலைத்த சாமிநாதன் தான் செல்லும் வழியில் பூத்துக்குலுங்கும் செம்பருத்தி மலர்களை ஒரு செடிமுழுக்க கூட்டமாக பார்த்த தருணம் அவை அனைத்தும் நாதஸ்வரத்தின்
அணைசுவை போல பாவித்து அவை அனைத்தும் ஒரே நேரத்தில் இசைப்பது போல வரும் உருவகம் ஒரு இனிமையான கவிதை போல நம்மை உணரவைக்கிறது . கடைமுகம் கதையில் தன் செயலிழந்த கால்களை பாபு நீருக்குள் மூழ்கியிருக்கும் தருணத்தை கால்கள் மீன்களின் சிறகுகள் போல தண்ணீருக்குள் வளைவதை உணர்ந்தேன் என்று கூறும் இடம் நம்மையும் அந்த கால்களை உணரச்செய்கிறது . விடம் கதையில் அன்விதாவின் நீளமான கூந்தலை முதல் பாதியில் ஒரு விதமாகவும் அதுவே கணவனின் பார்வையில் இரண்டாம் பாதியில் வேறு விதமாக உருவகப்படுத்தி கூறுவதும் இறுதியில் ஒரு பாம்பைப்போல அவனுடைய கையில் வழுவழுவென உருளும் தருணம் அந்த கதை யதார்தத்திற்கு வெகு அருகில் சென்றுவிடுகிறது .

செந்திலின் சிறுகதை உலகம் பெரும்பாலும் பெற்றோர்களை சுற்றியே சுழல்வதை நம்மால் உணரமுடிகிறது . எல்லா கதைகளிலும் பெற்றோர்கள் முக்கிய கதை மாந்தர்களாக வருகின்றனர் . பிள்ளைகளை வாஞ்சையோடு வளர்க்கும் பெற்றோர்கள் - ஊரே தூற்றினாலும் தன் பிள்ளையை பேணிப்பாதுகாக்கும் பெற்றோர்கள் - மாற்றாந்தாய் பிள்ளையானாலும் , தான் பெற்றெடுக்காத பிள்ளையானாலும் உடலால் தாயாகாமலே மனதால் பெண்ணாக பிறந்த அனைவரும் தாயுள்ளம் கொண்டவர்களே என்பதை ஒவ்வொரு கதையிலும் உணர்த்துகிறார் . பிள்ளைகளும் பெற்றோர்களின் மீது பேரன்பு கொண்டவர்களாகவே இருக்கின்றனர் அவருடைய உலகத்தில் . கடைமுகம் கதையில் கெட்ட வார்த்தையில் சாவித்ரியை திட்டி காரியுமிழ்ந்து அசிங்கப்படுத்தும் அதே பாபு தான் அவளுடைய கால்களை தெய்வசிலையென பற்றிக்கொள்கிறான் . ஊரே ஞானசூன்யம் என்று தூற்றும் சாமிநாதன் தன்னுடைய அம்மாவின் ஆறுதலான வார்த்தைக்கு பின் தான் அந்த அதியசயத்தை நிகழ்த்துகிறான் . தான் பெறாத பிள்ளைக்கு தாயாக மாறும் சாவித்ரி ஒரு பக்கம் என்றால் நவ நாகரீக உலகில் நகர சூழலிலும் தான் பெறாத பிள்ளையான விச்சுவிற்கு தந்தையாகிறான் சின்னா .
இதுவரை நான் வாசித்த சிறுகதைகளும் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையாக தம்பொருள் அமைந்தது . பெரும்பாலும் தன்னுடைய கதைகளில் அதிர்ச்சிகளை தராத செந்தில் இந்த கதையில் உண்மையில் வாசகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் . அனாகத நாதம் கதை வெளிவந்த நாட்களில் அனைவராலும் பரவலாக பேசப்பட்டு பகிரப்பட்ட படி இந்த கதை பெரும்பான்மையான வாசகரின் கவனத்தை ஈர்க்கவில்லை என்று நினைக்கிறன் . என்னை பொருத்தவரை அவருடைய மிகச்சிறந்த கதை தம்பொருள் தான் . வாழ்வில் சரியான நேர்கோடான நல்லவைகளானவற்றை ஒரு பரந்த வெளியில் பேசுவதும் எழுதுவதும் சுலபம் . ஆனால் சற்று கோணலை - வழிதவறிய ஒன்றை - மீறலின் பக்கம் இருக்கும் நியாயத்தை வாசிக்கும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளும்படி அதற்கான தக்க காரணத்தை கூறி பொதுவெளியில் ஒரு கதையின் வடிவில் எடுத்துரைப்பது சற்று சவாலான ஒன்று . அதைத்தான் தம்பொருள் கதையில் செந்தில் செய்துகாட்டியுள்ளார் . இத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளை வாசித்து முடித்த பின்னும் மனம் ஏனோ தம்பொருள் கதையில் வரும் இந்திராணியின் தனிமையுடனும் - கார்த்தியின் ஏக்கத்துடனும் - கந்தவேலுவின் வெண்மையுடனும் - கந்தவேலு மனைவியின் வாஞ்சையுடனே நின்றுவிடுகிறது . இந்த கதையில் எல்லோரும் நல்லவர்களே இருந்தும் கதையில் பல தவறுகள் நிகழ்வதாக நமக்கு தோன்றினாலும் அவரவர் பக்கம் நியாயம் இருப்பதாக பேசுவதுதான் கதையின் பலம் . குடும்பமும் சரி - ஊர் மக்களும் சரி - உலகமே என்ன நினைத்தாலும் சரி தனக்கு சரியென படுவதை செய்யத்துணியும் இந்திராணி கதையில் எங்குமே ஒரு குரலுயர்த்தலோ , புரட்சிகர வசனங்களோ , பிரச்சாரமோ இல்லாமல் அமைதியாக பெண்ணியம் பேசி செல்கிறாள் . கந்தவேலுவின் உடலுக்கு கார்த்தி கொள்ளிவைப்பதோடு கதை முடிவதும் அவனை வாஞ்சையோடு கந்தவேலுவின் மனைவி பார்ப்பதும் மனித மனங்களின் மாற்றத்தின் வெளிப்பாடு . கதையின் முடிவில் கார்த்தியை அரவணைக்க இரண்டு அன்னைகள் இருக்கின்றனர் என்பதை நினைக்கும்பொழுது அதிர்ச்சியான மனது சற்று ஆசுவாசப்படுகிறது .
ஒவ்வொரு எழுத்தாளனும் தன் நிலத்தை , அதன் மக்களை , அவர்களின் மொழியை , வாழ்க்கை முறையை அப்படியே தங்களுடைய கதைகளில் பிரதிபலிக்க முயற்சிசெய்வார்கள் . இதில் செந்தில் சற்று மாறுபடுகிறார் . இவருடைய பெரும்பாலான கதைகள் அவருடைய நிலத்தை சார்ந்த கதைகளாக இருந்தாலும் கதையில் இடம்பெறும் கோயில்கள் , திருவிழாக்கள் , ஊர் பெயர்கள் , பேருந்துகள் , உள்ளூர் விளையாட்டுகள் , கலை விழாக்கள் , தெருக்களின் பெயர்கள் என ஒரு நாடகத்தின் பின் திரையை போல தன்னுடைய நிலத்தை பயன்படுத்துகிறார் . அதைத்தவிற வட்டார வழக்கோ , நிலம் சார்ந்த சிக்கல்களோ , அதன் பின் நிகழும் அரசியல் பற்றியோ அவர் பெரிதும் தன்னுடைய கதைகளில் பேசுவதில்லை . அதனால்தான் அவருடைய கதைகள் வீட்டிற்குள்ளும் - வீதிகளுக்குள்ளும் சுருங்கிவிடுகின்றன . வாசிப்பதற்கும் ஒரு இலகுவை கொடுக்கின்றன . அதனால்தான் இவருடைய எந்த கதையும் வாசித்தவுடனோ வாசிக்கும்பொழுதோ ஒரு அதிர்ச்சியை எந்த ஒரு தருணத்திலும் கொடுக்காது . மொழியும் வடிவமும் அவருக்கு கைதேர்ந்தவை என்பதால் இனி வரும் படைப்புகளில் அத்தகைய கருப்பொருட்களை நாம் எதிர்பார்க்கலாம் .
இர.மௌலிதரன்
30-12-25
9.09 இரவு
Profile Image for Siva Prasath T R.
90 reviews4 followers
September 22, 2026
செந்தில் ஜெகநாதனின் அனாகத நாதம் சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்தபோது, ஒவ்வொரு கதையும் வெவ்வேறு மனிதர்களையும் அவர்களுடைய வாழ்க்கையையும் பேசினாலும், எல்லாக் கதைகளிலும் மனித மனத்தின் உணர்வுகள்தான் முக்கியமாக இருக்கிறது என்று தோன்றியது.மழைக்கண்’ போலவே இந்தக் கதைகளின் தலைப்புகளும் என்னை மிகவும் ஈர்த்தன. குறிப்பாக நஞ்சமுது,தம்பொருள், கடைமுகம் போன்றன.
‘அலகிலா விளையாட்டு’ கதையை வாசித்தபோது, நான் என்னுடைய சிறுவயதிற்கே திரும்பிச் சென்ற மாதிரி இருந்தது. சிறுவர்களின் விளையாட்டு, பொங்கல், கோவில், தெரு என்று ஒவ்வொரு காட்சியும் என் சிறுவயதின் அழகான நினைவுகளை மீண்டும் கண் முன்னே கொண்டு வந்தது. மறந்துவிட்டோம் என்று நினைத்திருந்த எத்தனையோ சின்னச் சின்ன நினைவுகள் படம்போல ஓடிக்கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் கதையை வாசிப்பதைவிட, என் சிறுவயது நினைவுகளுக்குள்ளேயே பயணித்துக்கொண்டிருந்தேன். ஆனால் அந்த அழகான நினைவுகளுக்கிடையே வரும் இழப்பு, கதையின் முடிவில் அந்தக் குதூகலத்தை அமைதியாக மாற்றிவிடுகிறது. கதை முடிந்த பிறகும் சிறிது நேரம் என் சிறுவயதுதான் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

‘போகன்வில்லா’ காதலைத் தாண்டி, மறுமணத்தைச் சுற்றியிருக்கும் சிக்கல்களைப் பேசுகிறது. கணவனைப் பிரிந்து குழந்தையுடன் வாழும் யாமினி, அதன் பிறகு சின்னாவுடன் உருவாகும் உறவு, கடந்த காலம், எதிர்பார்ப்புகள், மனக்காயங்கள், ஈகோ, புரிதலின்மை என்று கதை நகர்கிறது. ஒருவரை ஒருவர் நேசித்தாலும், அந்த அன்பை எப்படிக் கையாள்வது என்பதில் இருவருக்கும் சிக்கல் ஏற்படுகிறது. குழந்தையுடன் வாழும் ஒரு பெண் மீண்டும் ஒரு உறவைத் தேர்ந்தெடுக்கும்போது எதிர்கொள்ளும் சிரமங்களையும் கதை இயல்பாகக் காட்டுகிறது. காதல் மட்டும் ஒரு உறவைத் தக்கவைக்காது, புரிதலும் மற்றவருடைய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் மனமும் தேவை என்பதை ‘போகன்வில்லா’ உணர்த்துகிறது.

‘தம்பொருள்’ என்னை மிகவும் பாதித்த கதைகளில் ஒன்று. தொடக்கத்திலேயே ஒரு பெண் தன் மகனை அழைத்துக்கொண்டு தாத்தா வீட்டிற்குச் செல்லும் காட்சி, அவள் ஏன் அந்த முடிவை எடுத்தாள் என்ற கேள்வியை எழுப்புகிறது. கணவனைப் பிரிந்து வாழும் இந்திராணியின் வாழ்க்கைக்குள் செல்லச் செல்ல, அவளுடைய தனிமையும் அவளைச் சுற்றியிருக்கும் பார்வைகளும் நம்மைத் தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன.

பெண்களின் சொத்துரிமை வெறும் தாளில் மட்டுமே இருக்கிறதோ என்ற கேள்வியையும் இந்தக் கதை எழுப்புகிறது. ஆடுமாடு அடைக்கும் தொழுவத்தில் தங்க வைக்கப்படுவதும், “நாய்க்குச் சோறு போடுகிறேன், அவளுக்குப் போடமாட்டேனா?” என்று கணவன் பேசுவதும் ஒரு பெண் தன் வாழ்க்கையிலேயே எவ்வளவு கீழாக நடத்தப்படுகிறாள் என்பதை உணர்த்துகிறது. இப்படிப்பட்ட சூழலில் கந்தசாமியின் வருகை, தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் அன்பும் துணையும் தேவைப்படலாம் என்பதை நினைவுபடுத்துகிறது. ஆனால் அந்தத் தேவையைக்கூட அவளுடைய ஒழுக்கத்தோடு இணைத்துப் பார்க்கும் சமூக மனநிலையையும் கதை கேள்விக்குள்ளாக்குகிறது.

தன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விருப்பத்துக்கும், தன் மகனைப் பற்றிய அக்கறைக்கும் இடையில் இந்திராணிக்குள் நடக்கும் போராட்டமும் தெரிகிறது. ஆரம்பத்தில் அவளைப் பற்றி உருவாகும் பார்வை, கதை நகர நகர மாறிக்கொண்டே வருகிறது. குறிப்பாக இறுதியில் வரும் திருப்பம், பெண்களைப் பற்றி நாம் எவ்வளவு எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம் என்பதையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. ‘அவள் என்ன செய்தாள்?’ என்பதைக் காட்டிலும், ‘அவள் ஏன் அந்த நிலைக்கு வந்தாள்?’ என்று யோசிக்க வைப்பதுதான் இந்தக் கதையின் பெரிய பலம்.

‘அனாகத நாதம்’ தொகுப்பின் தலைப்புக் கதை மட்டுமல்ல, வாசித்து முடித்த பிறகும் நீண்ட நேரம் மனதில் தங்கும் கதையாகவும் இருக்கிறது. சாமிநாதனின் வழியாக ஒரு கலைஞனின் இயலாமை, அவமானம், குடும்ப மரபின் அழுத்தம், தன்னால் முடியுமா என்ற தயக்கம் என்று அவனுக்குள் நடக்கும் போராட்டத்தை ஆசிரியர் இயல்பாகக் கொண்டு சென்றிருக்கிறார். தாத்தாவும் தந்தையும் புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள். அந்த மரபில் தானும் ஒரு பெயர் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், நாதஸ்வரம் அவனுக்கு எளிதில் வசப்படுவதில்லை. அதனால் ஒரு கட்டத்தில் அந்தக் கலையையே வெறுத்து விலகிச் செல்கிறான்.

வைத்தி, “உனக்கு நாதஸ்வரம் வராது” என்று சொல்லி அவனை அடித்து, அவனிடமிருந்த நாதஸ்வரத்தைப் பிடுங்கி எறியும் காட்சி மிகவும் வலிமையானது. அந்த நாதஸ்வரத்தைப் பார்க்கும்போது, சாமிநாதனுக்குத் தன் தந்தையே அடிபட்டுக் கிடப்பது போலத் தோன்றும் இடம் மனதைத் தொடுகிறது. ஒரு நாதஸ்வரத்தை வெறும் இசைக்கருவியாக இல்லாமல், தந்தை, குடும்ப மரபு, வலி, நினைவு என்று பலவற்றின் உருவமாக மாற்றியிருக்கும் விதமும், ஆசிரியர் கையாண்டிருக்கும் உவமைகளும் சிறப்பு.

‘விடம்’ கொஞ்சம் வித்தியாசமான கதை. திருமண வாழ்க்கை நம் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்று நினைப்பது, துணையின் ஒவ்வொரு செயலிலும் சந்தேகத்தைத் தேடுவது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் எப்படி உறவுக்குள் பெரிய சிக்கலாக மாறுகின்றன என்பதை சுவாரஸ்யமாகச் சொல்கிறது. குறிப்பாக பாம்பையும் பெண்ணின் கூந்தலையும் ஆசிரியர் இணைத்திருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. நமக்குப் பிடித்ததெல்லாம் நமக்கே உரிமையானது என்று நினைத்தால், அதுவே ஒரு கட்டத்தில் நம்மைக் கடிக்கக்கூடியதாக மாறிவிடும் என்பதுதான் ‘விடம்’ சொல்லும் சுவையான உண்மை.

‘சாயை’ இந்தத் தொகுப்பில் கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது. சினிமா, காக்கைகள், ஒரு மனிதர், கொஞ்சம் மர்மம் என்று கதை நகர்கிறது. அந்த மனிதர் யார், காக்கைக்கும் அவருக்கும் என்ன தொடர்பு, உண்மையில் நடப்பது என்ன என்று கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். எல்லாவற்றுக்கும் நேரடியான விளக்கத்தைத் தராமல், சில கேள்விகளோடு நம்மை விட்டுச் செல்வதுதான் இந்தக் கதையின் சுவாரஸ்யம்.

‘நஞ்சமுது’ ஒரு குடும்பத்தின் பொருளாதார வீழ்ச்சியையும், அதனால் உறவுகளுக்குள் ஏற்படும் மாற்றங்களையும் பேசுகிறது. 한 குடும்பம் நன்றாக வாழ்ந்து பின்னர் எல்லாவற்றையும் இழந்துவிடும்போது, ஒவ்வொருவரும் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. பாசம், கோபம், சுயநலம், தன்மானம், குடும்பப் பொறுப்பு என்று பல உணர்வுகள் மோதுகின்றன. வறுமை என்பது பணம் இல்லாத நிலை மட்டுமல்ல, அது குடும்பத்துக்குள் இருக்கும் உறவுகளையும் மாற்றிவிடும் என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

கடைசியாக ‘கடைமுகம்’. இந்த எட்டுக் கதைகளில் என்னை அதிகம் தாக்கிய கதை இதுதான். பாபுவின் பார்வையில்தான் கதை நகர்கிறது. தாயை இழந்த பிறகு, தந்தையின் வாழ்க்கையில் வரும் சாவித்திரியை அவன் தன்னுடைய எதிரியாகவே பார்க்கிறான். அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகத்தோடும் வெறுப்போடும் பார்க்கும் பாபுவின் செயல்கள் சில இடங்களில் நமக்குள்ளும் அவன் மீது வெறுப்பை ஏற்படுத்துகின்றன. அவன் மாற்றுத்திறனாளி என்பதால் பரிதாபம் கொள்ள வேண்டும் என்று கதை நம்மை எங்கும் கட்டாயப்படுத்தவில்லை என்பதும் எனக்குப் பிடித்திருந்தது.ஆனால் கதை நகர நகர, பாபுவைப் பற்றிய நம்முடைய பார்வையும் மாறுகிறது. அவன் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் தாயின் மீதான ஏக்கமும், இழப்பின் வலியும் மெல்லப் புரியத் தொடங்குகிறது. ஒரு மனிதரைப் பற்றிய முதல் பார்வை எவ்வளவு எளிதில் தவறாகிவிடலாம் என்பதை கதை உணர்த்துகிறது. இறுதியில் பாபுவின் மனதுக்குள் இருக்கும் தாய்ப்பாசத்தையும் அவன் சுமந்துகொண்டிருக்கும் வலியையும் புரிந்துகொள்ளும் தருணம் மிகவும் நெகிழச் செய்கிறது. கதை முடிந்த பிறகும் பாபுவை நல்லவன், கெட்டவன் என்று முடிவு செய்ய முடியாமல் அவனைப் பற்றியே யோசிக்க வைத்தது. அதனால்தான் ‘கடைமுகம்’ இந்தத் தொகுப்பில் என்னை அதிகம் பாதித்த கதையாக இருந்தது.'கடைமுகம்’ என்ற தலைப்பே கதையின் தன்மையைப் போல இருக்கிறது. தொடக்கத்தில் நாம் பார்க்கும் மனிதர்களின் முகமும், கதை முடிவில் அவர்களைப் புரிந்துகொண்ட பிறகு தெரியும் முகமும் ஒன்றாக இருக்கவில்லை.

‘மழைக்கண்’ வாசித்தபோது எழுத்தாளர் உருவாக்கிய மனிதர்கள் எனக்குள் நீண்ட நேரம் தங்கியிருந்தார்கள். அந்தத் தொடர்ச்சியில் ‘அனாகத நாதம்’ வாசிப்பும் நல்லதொரு அனுபவமாக அமைந்தது. இந்தத் தொகுப்பில் வரும் மனிதர்கள் நம்மைச் சுற்றி எங்கோ பார்த்தவர்களாகவும், சில நேரங்களில் நம்முடைய வாழ்க்கையின் ஏதோ ஒரு பகுதியை நினைவுபடுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களின் வலியும் ஏக்கமும் நமக்கும் நெருக்கமாகிறது.

கிராமத்து வாழ்க்கை வரும் கதைகளில் அந்த மண் வாசனையை உணர முடிகிறது. அதே நேரத்தில் காதல், திருமணம், குடும்பம், உறவுச் சிக்கல்கள் என்று இன்றைய வாழ்க்கையின் பல பக்கங்களையும் ஆசிரியர் இயல்பாகக் கொண்டு வந்திருக்கிறார். வட்டார மொழியும் கதைகளுக்கு இன்னும் நெருக்கத்தைத் தருகிறது.

இருந்தாலும், ‘மழைக்கண்’ உடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ‘அனாகத நாதம்’விட ‘மழைக்கண்’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘மழைக்கண்’ வாசித்தபோது ஏற்பட்ட அந்த நெருக்கமும், அதன் மனிதர்களோடு ஏற்பட்ட உணர்வுப்பூர்வமான தொடர்பும் எனக்கு இன்னும் ஆழமாக இருந்தது.

மொத்தத்தில், ‘அனாகத நாதம்’ எனக்கு வெறும் எட்டு சிறுகதைகளின் தொகுப்பாகத் தெரியவில்லை. எட்டு விதமான மனித வாழ்க்கைகளுக்குள் சிறிது நேரம் சென்று வந்த அனுபவமாகவே இருந்தது. சில கதைகள் நினைவுகளைத் திறந்தன, சில கதைகள் உறவுகளைப் பற்றி யோசிக்க வைத்தன, சில கதைகள் மனிதர்களைப் பற்றிய நம்முடைய முன்முடிவுகளைத் திரும்பிப் பார்க்க வைத்தன. அதனால்தான் புத்தகத்தை மூடி வைத்த பிறகும், இந்தக் கதைகளில் வந்த சில மனிதர்கள் மனதுக்குள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறார்கள்.
Profile Image for Riyaz.
16 reviews1 follower
March 10, 2026
“அனாகத நாதம்” என்ற சொல் யோக மற்றும் ஆன்மீக மரபுகளில் வரும் ஒரு கருத்து — வெளியில் எந்த இரண்டு பொருளும் மோதாமல் எழும் “ஒலி”. அதாவது, உள்ளிருந்து எழும் அமைதியான நாதம்.

இந்த புத்தகம் மனித வாழ்க்கையின் குழப்பங்கள், நினைவுகள், உறவுகள், ஆன்மீக தேடல், தனிமை, மற்றும் உள்ளார்ந்த அமைதியைத் தேடும் முயற்சிகளை மையமாகக் கொண்டு நகர்கிறது. கதையின் மையத்தில் இருக்கும் மனிதன் வெளிப்புற உலகின் சத்தங்களில் இருந்து மெதுவாக விலகி, தனது உள்ளத்தில் ஒலிக்கும் அந்த “அனாகத நாதத்தை” உணர முயல்கிறான்.

நூலில் நிகழ்வுகள் பெரிய திருப்பங்களோ அல்லது அதிரடி சம்பவங்களோ இல்லாமல் மெதுவாக விரிகின்றன. ஆனால் அவை மனித மனத்தின் நுண்ணிய அலைச்சல்களைப் பதிவு செய்கின்றன. நினைவுகள், இழப்புகள், கேள்விகள், மற்றும் அமைதிக்கான ஏக்கம் — இவை அனைத்தும் இந்த நூலில் மென்மையாக பின்னப்பட்டுள்ளன.

இது ஒரு கதையை மட்டும் சொல்லும் புத்தகம் அல்ல; வாசகனை தன்னுள் நோக்கச் செய்யும் ஒரு சிந்தனைப் பயணம்.
Displaying 1 - 3 of 3 reviews