"மாணிக்கம்', 'அளம்' எனும் இரு நாவல்களின் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர் சு. தமிழ்ச்செல்வி. 2002ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருது இவரது முதல் படைப்பான "மாணிக்கம்" நாவலுக்குக் கிடைத்தது.
தீவிர இயங்கு தன்மையும் படைப்பூக்கமும் இயல்பாக்க் கொண்ட சு.தமிழ்ச்செல்வியின் மூன்றாவது நாவல் 'கீதாரி'. வாழ்தலின் நிமித்தம் புலம்பெயரும் அனுபவத்தின் வலியை 'பெற்றோகாட்'டின் 'விஷக் கன்னிக்குப் பிறகு அழுத்தத்தோடு விவரித்துச் சொல்கிறது இந்நாவல்.
மனிதகுலத்தின் நெடிய வரலாறெங்கும் காணக்கிடைக்கும் தீராத அலைச்சலும் மனக்கொதிப்பும் வாழ்தலுக்கான வேட்கையும் இயற்கை தன்னுள் வைத்திருக்கும் உயிர்களுக்கான ஆறுதலும் இப்புனைவின் பரப்பெங்கும் உக்கிரம் கொண்டுள்ளன.
சு. தமிழ்ச்செல்வி என்பவர் ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர். திருத்துறைப்பூண்டியில் பிறந்த இவர் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல இலக்கிய மேடைகளை அலங்கரிக்கும் இவர் மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி, தொப்புள்க்கொடி மற்றும் கண்ணகி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "மாணிக்கம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
கீதாரி என்றால் ஆடு மேய்ப்பவர்கள். சமூகத்தில் பெரிதும் பொருட்படுத்தப்படாத ஒரு நாடோடி வாழ்வு முறை வாழும் ஆடு மேய்ப்பவர்கள் வாழ்க்கை முறை, பழக்கவழக்கம், நம்பிக்கை, சடங்கு, திருமணமுறை ,அவர்களின் வழக்காறுகள், பழமொழிகள்,பாடல்கள் போன்றவற்றை பற்றி பேசும் கதைதான் கீதாரி. நூலாசிரியர் தமிழ்ச்செல்வி எனக்கு முற்றிலும் அறிமுகமில்லாத ஒரு எழுத்தாளர் இதற்கு முன் கீ.ராவின் கிடை என்னும் நாவலையும் பெருமாள்முருகனின் பூனாச்சி நாவலையும் வாசித்தபின் ஆடுகள் மீது எனக்கு ஒரு பெரும் ஈடுபாடும் பிரியமும் வந்தது. அதனால் இந்த கீதாரி நாவலையும் அதே ஒரு எதிர்பார்ப்பு ஒரு உற்சாகத்துடன் படிக்கத் தொடங்கினேன்.
ஞாயிற்றுக் கிழமையானால் மட்டன் பிரியாணி குல சாமி வழிபாடு ,கோயில் திருவிழா, காதுகுத்து, மொட்டை அடித்தல் திருமண விழா, போன்ற எந்த ஒரு விழாவிலும் அங்கு கிடா வெட்டுதல் இல்லாமல் நடைபெறாது அப்படி நம் மக்கள் கிடாவிற்கு ஒரு முக்கியத்துவத்தை காலம் காலமாய் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் நாம் ஒருபோதும் அந்த கிடாயை வளர்ப்பவர்களைப் பற்றியோ அவர்களின் வாழ்வுமுறை எப்படியிருக்கும் என்பதைப் பற்றியோ நாம் ஒருபோதும் யோசித்து பார்த்ததே இல்லை.... இப்படி இந்த கீதாரி மக்களின் வாழ்வு முறை பற்றி தெரிந்துக் கொள்ள ஆசைப்படுபவர்கள் வாசிக்கவே நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்தான் கீதாரி.
இந்த நாவலின் உயிரோட்டமே இந்நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள கீதாரிகளின் வட்டார மொழி தான்.From my point of view reading books through People's regional language will emotionally connects you with those people.
இந்த கீதாரி இன மக்களுக்கு எந்த ஒரு கல்வியோ அறிவோ வெளி உலக அறிவோ இல்லை... இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆடு மேய்க்கும் தொழில் மட்டுமே.. ஊர் ஊராக சென்று அறுவடை வயல் பக்கத்தில் கிடை போட்டு ஆட்டுப்புழுக்கை யின் மூலம் வருமானம் ஈட்டி வாழ்ந்துவரும் மக்கள் ஒரு மினிமலிஸ்டிக் வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தனர் அதாவது இவர்கள் பெரும் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய காரணத்தால் இவர்கள் போகும் இடத்திற்கு வலுவான சாமான்களை எடுத்துக் கொள்ளாமல் தேவையான சிறுசிறு சாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு அந்தந்த ஊர்களில் விலையும் தானியங்களையும் பயிர்களையும் உண்டு வாழ்ந்துவந்தனர் குழம்பிற்கு மசாலா அரைப்பது என்றால் கூட அவர்களிடம் ஒரு உரலோ ஆட்டுக்கல்லோ இருக்காது. அவர்கள் அந்த ஊரில் ஏதாவது ஒரு வீட்டிற்கு சென்று ஒரு மாதத்திற்கு தேவையான குழம்பு மசாலா போன்ற அனைத்தையும் அரைத்துக் கொண்டு அதிலிருந்து கொஞ்சம் கில்லி கில்லி தினமும் குழம்பு குழம்பு வைத்து உண்டு வந்தனர் ... இவர்களுக்கு என்று வீடு எதுவும் இல்லை நிலம் எதுவும் இல்லை போகும் இடங்களில் கூண்டு கட்டி உள்ளே கோணிப் பைக்குள் உறங்குவர் ..வெயில் என்றாலும் மழை என்றாலும் எல்லாம் அந்த கூண்டுக்குள்ளே தான்.
நாவல் முழுவதும் கரிச்சா , சிவப்பி , இருளாயி, ராமு கீதாரி , வெள்ளைச்சாமி போன்ற கதாபாத்திரங்களின் மூலம் ஆடு மேய்ப்பவர்கள் வாழ்க்கையில் வரும் இன்னல்கள் சமூகத்தில் அவர்களுக்கு வைத்திருக்கும் இடம் அவர்களின் அறியாமை போன்றவற்றை தமிழ்ச்செல்வி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்..
இது சாதாரண ஒரு புத்தகத்தை படிப்பது போல் இல்லாமல் கீதாரிகளின் வலியைத்தாண்டி மதிய வேளையில் உண்ட மயக்கத்தில் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு காற்றாட ஊர் கதை பேசும் அந்த சுகத்தையும், ஒரு பாலுமகேந்திரா பாரதிராஜா படத்தை பார்த்த ஒரு உணர்வை இந்த புத்தகம் எனக்கு தந்துள்ளது..