//அடிவானத்தை மீறிய உலகின் அழகு என்பது பயங்களற்ற இரண்டு மிகச்சிறிய இதயங்களின் நட்பில் இருக்கின்றது// //'எனக்கு மட்டும்' என்று குவிகின்ற மையத்தையே காம்பாக்கிக் கொண்டு 'வெளி'வாங்கிப் பூக்கின்றது நட்பு// //கண்களை வாங்கிக்கொள்ள மறுக்கிறவள் காதலியாகிறாள் கண்களை வாங்கிக் கொண்டு உன்னைப் போல் கண்கள் தருகிறவள் தான் தோழியாகிறாள்// //துளியே கடல் என்கிறது காமம் கடலும் துளி என்கிறது நட்பு// ஆகிய வரிகள் அழகு. //தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது தொட்டுப் பேசுவது தான் நட்புக்கு நல்லத// இரண்டாவது வரியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இது தவிர சில கவிதைகளை வாசிக்கும் போது மிகைப்படுத்தி எழுதப்பட்டிருப்பது போலவும் நிஜத்தில் இப்படியும் நடக்குமா என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.
ஆண் பெண் நட்பு, அதில் தொடக்கத்தில் இருக்கும் கூச்சம் தொடங்கி.. சமூகத்தின் பார்வை, நம் உறவுகளின் பார்வை, எல்லாம் கடந்து.. நட்பு இவர்களின் பார்வைக்கு சுருங்கி நிற்கும் வட்டம் அன்று அது இரு உள்ளங்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் எல்லைகளற்ற முடிவிலி என்னும் அழகிய உண்மையில் நெய்யப்பட்ட இயல்பான கவிதைகள். நட்பே ஒரு கவிதை.. அதன் அழகை இதமான தென்றலாய்.. வருடி செல்லும் மயில் பீலியாய்.. வார்த்தைகளால் வர்ணம் தீட்டும் அருமையான புத்தகம். இதயத்தை வார்த்தைகள் வருட.. விழிகளுக்கு விருந்தாக அமைந்தது அதில் உள்ள புகைப்படங்கள் 💚