உலகில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் பிறவா நிலை என்ற தேடலை மையப்படுத்தி கோட்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் போது, இந்தியாவில் தோன்றிய வைதீக வேத மரபானது பிறப்பை மையப்படுத்தி மக்களை அடிமைப்படுத்துதல் என்ற ஒற்றை கோட்பாட்டினை மறைவாக வைத்துக்கொண்டு காலத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக் கொண்டு சமூகத்தை எப்படி ஆழ நினைக்கிறது என்பதனை வெட்டவெளிச்சமாக விளக்கும் ஒரு நீண்ட கட்டுரை தொ.ப. ஐயாவின் 'சமயங்களின் அரசியல்'.
சமணம், பௌத்த மாதங்கள் நிறுவன மதங்களாக இருந்தாலும் அச்சமயங்களின் உணர்வுகள், மொழிவழியாகவோ பிற புறவழியாக தமிழ்நாட்டில் வெளிப்படவில்லை. இதுவே சைவ வைணவ சமயங்கள் இங்கு தலைதூக்கக் காரணமாக இருந்த ஒன்று என்பதனை நிறைய அறியா தகவல்கள் கொண்டு இந்த நீளமான கட்டுரை விளக்குகிறது.
சைவமும் வைணவமும் அரசு சார் மக்களிடம் நெருக்கமான உறவினை வைத்துக்கொண்டு மொழி வழியாகவும் பக்தி இலக்கியங்கள் வழியாகவும் தங்களை முதல் நிறுவன சமய இயக்கங்களாக நம் சமூகத்தில் காலூன்ற எவ்வளவு முயற்சி செய்தது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் நிறைந்து இருக்கும் கட்டுரை இது.
துறவை மையப்படுத்திய சமணம், வெகுசன மக்களிடம் நெருங்காமல், ஊர்களுக்கு ஒதுக்குப்புறமாக மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்த அவர்களின் நிரந்தர வாழ்விடங்கள் அற்ற நிலை, சொத்துடைமை இல்லாமை போன்ற காரணங்களால் எளிய மக்களுக்கு இந்த சமயத்தைப் பின்பற்றுவது கடினமாக இருந்தது. மேலும், அவர்களின் நிர்வாண துறவு நிலை பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய ஒன்றாக இருந்ததினால் விரைவாகச் சமணம் வீழ்வதற்கு மற்றுமொரு காரணமாக இருந்தது என்பதை நாம் அறியமுடிகிறது. சமணம் கொண்ட அதே துறவு நிலை, மக்களோடு இணக்கமாக உறவு கொள்ளாமை மற்றும் பௌத்தம் கொண்ட கடுமையான தவ பயிற்சி முதலிய காரணத்தால் தமிழ்நாட்டில் பௌத்தம் நிலைகொள்ளவில்லை. இந்த இரண்டு சமயங்களின் வீழ்ச்சியின் காரணங்களைப் பயன்படுத்திக்கொண்ட சைவமும் வைணவமும் அந்த சமயங்களின் நேர்மாறான குடும்ப அமைப்பு முறை, சொத்துடைமை போன்ற கொள்கையினால் தமிழ் மக்களோடு இணக்கம் கொண்டது எனவும், மக்களின் இயல்பான வாழ்வியலைக் கடவுளோடு ஒப்பிட்டு இலக்கணம் செய்து, பாடல்கள் பாடி தங்கள் சமயத்திற்கு வலு சேர்த்தது என்பதனையும் நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
ஆனால் சைவத்திற்கும், வைணவத்திற்கும் வேத பரப்புரையைக் கொள்கையாகக் கொண்ட வைதீக சமயமே பெரிய எதிரி என்பதனை விளக்கும் ஒரு சிறந்த கட்டுரை. வேதங்களை மரபாகக் கொண்ட வைதீகம் சைவ வைணவ சமயங்களிலும், அரசு உருவாக்கத்திலும் தனது கோட்பாடுகளைப் புகுத்திக்கொண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் உயிர் பிழைத்து சமூகத்தை அடிமைப்படுத்த நினைக்கிறது என்பதனை நாம் அனைவரும் அறிவது மிக அவசியம் என்பதை இந்த கட்டுரை உணர்த்தும்.
எவ்வளவு பெரிய சமயங்கள் வந்தாலும் சென்றாலும், தாய் தெய்வ வழிபாட்டு நெறியினை மையமாகக் கொண்ட தமிழ் நாட்டார் தெய்வ வழிபாடு அழியாது நிலைத்து வாழும் காரணங்களை அழுத்தம் திருத்தமாக தொ. பரமசிவன் ஐயா பதிவு செய்திருக்கிறார் இக்கட்டுரையில்.
இந்த புத்தகத்தின் பின்னிணைப்பான தொ.ப ஐயா மற்றும் சுந்தர் காளி அவர்கள் இருவரின் 'சமயம் ஒரு உரையாடல்' நம்மிடம் இருக்கும் சமயம் சார்ந்த நிறையக் கேள்விகளுக்கு விடை தரும் பக்கங்களாக அமைத்திருக்கிறது.
சமய நம்பிக்கை உள்ளோர், சமய நம்பிக்கை இல்லாதோர், என அனைவரும் வாசிக்கவேண்டிய புத்தகம் 'சமயம் ஒரு அரசியல்'