"அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்" - சோ
இதிகாசத்துக்கு "தேவரிஷி பிரகஸ்பதி" என்றால்,
கலியுக அரசியலுக்கு, "சோ".
1960களுக்கு பிறகான இந்திய அரசியல் பின்புல வரலாற்றில், தவிர்க்க முடியாதவரவாக இருந்திருக்கிறார், திரு.சோ.
1950களில் தொடங்கிய அவரது பொதுவாழ்க்கை,
அதாவது வழக்குரைஞராக, சட்ட ஆலோசகராக, நாடக சினிமா நடிகர்/இயக்குநராக, தேர்ந்த பத்திரிக்கையாளராக, அரசியல் ஆலோசகராக
கடைசி வரை இருந்துள்ளார்.
அவரது இந்த முக்கிய நபர்கள் மற்றும் தலைவர்களை பற்றிய அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு, 'துக்ளக்'கில் கிட்டதட்ட 1998 வரை எழுதப்பட்டது. இப்புத்தகம் இந்திய அரசியலின் தகவல் பொக்கிஷமாக கருதப்பட வேண்டிய ஒன்று.
அதுபோக, அவர் மேற்கொண்ட சட்ட வழக்குகள் , நாடக/சினிமா தகவல்கள், முக்கிய அரசியல் நிகழ்வுகள், அரசியல் தலைவர்களின் குணங்கள் எனப் பல விஷயங்களை மிக சுவாரசியமாக எழுதியுள்ளார்.
அனைத்தும் திரு.சோ அவர்களின் அனுபவத்திலிருந்து எழுதப்பட்டாலும், சுயசரிதை போல இல்லாமல், சுய எள்ளலுடன் சிறு ஹாஸ்யத்துடனேயே இக்கட்டுரைகளை படித்துவிட முடிகிறது.
திரு.சோ அவர்கள் எவ்வளவு தைரியமானவர் என்பதைனையும்,
அனைத்து கட்சி மற்றும் தலைவர்கள் சார்பற்றவராகவும் இருந்திருக்கிறார் என்பதனையும், பல தலைவர்களின் தவறுகளை அவர்களிடமே அப்பட்டமாக சொல்லி புரியவைத்திருப்பதை இக்கட்டுரைகளின் மூலம் அறியலாம். அதனை ஒரு அசட்டு தைரியம் என அவரே சொல்லிவிடுகிறார். ஆனால் அப்படியிருத்தும் அதனால் நன்மைகள் விளைந்ததாகவே அறியமுடிகிறது.
என்னை பொறுத்தவரை திரு.சோ அவர்கள் ஒரு தீர்க்கதரிசி. எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை மிகச்சரியாக கணிப்பதில் வல்லவர். உதாரணத்திற்கு, 2011லேயே திரு.நரேந்திர மோடி'யை துக்ளக்கின் ஆண்டுவிழாவிற்கு அழைந்திருந்தார்.இவர்தான் அடுத்த பிரதமர் என கணித்து.
போலவே, 2015லும் இரண்டாம் முறையும் மோடியே பிரதமர் ஆவார் என தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஆகவே, இவரது கட்டுரைகளில் சொல்லியிருப்பதை "மிகைப்படுத்தல்" என்பதாக நம்புவதற்கில்லை.
சுதந்திர இந்தியாவின் ஜனரஞ்சக சாட்சி இப்புத்தகம்.