"இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்தியிடம் இருந்து விடுதலை பெற தமிழகம் நடத்திய போரட்டமும் முக்கியம். மொழிப்போரில் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்ற போதும் இது ஆயுதந்தாங்கிய போர் அல்ல. தமிழர்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாகத் திணித்த ஒரு அயல் மொழியை எதிர்த்து, தாய்மொழியாம் தமிழை முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு நீண்ட அரசியல் உரையாடல். காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார், அண்ணா, பக்தவத்சலம், மு. கருணாநிதி, பாரதிதாசன், ம.பொ.சி என்று தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மொழிபோருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்த அரசியல் தலைவர்களும் படைப்பாளர்களும் கவிஞர்களும் அநேகம். உடன் ஆயிரக்கணக்கான மக்களும் இணைந்து கொண்டதால் தமிழகச் சரித்திரத்தின் மிக முக்கியமான ஒரு சமூக, சரித்திர நிகழ்வாகவும் மொழிப்போர் விரிவடைந்தது. 1938 தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த ஏழு கட்ட மொழிப் போரட்டங்களும் அன்றைய அரசியல் வரலாற்றுப் பின்னணியுடன் இதில் விவரிக்கப்பட்டுள்ளன. திராவிட இயக்க வரலாறு, தமிழக அரசியல் வரலாறு வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கியப் படைப்பு இது."
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.
இந்தி மொழி ஆதிக்கத்திற்க்கு எதிராக 1938 தொடங்கி பல ஆண்டுகளாய் பல கட்டங்களாய் தமிழகத்தில் நடந்த மொழி போராட்டத்தைப் பற்றி விவரிக்கிறது இந்நூல்.
மொழிப்போர் என்பது இந்தி மொழியைப் பேசுகின்ற வட இந்தியர்களுக்கு எதிராகத் தமிழர்கள் தொடுத்த ஆயுதப்போர் அல்ல; இந்திய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் தொடுத்த யுத்தம் அல்ல. தமிழர்கள் மீது இந்தி மொழியைத் திணிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு வெவ்வேறு காலக்கட்டங்களில் எடுத்த கடுமையான நடவடிக்கைகளுக்கான எதிர்வினைகளின் தொகுப்பே மொழிப்போர்!
காங்கிரஸ் அரசு பள்ளிகளில் கட்டாய இந்தி மொழிப்பாடம் , மத்திய அரசு பணியில் சேர இந்தி , அரசு அலுவலகங்களில் இந்தி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை , இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி என பல்வேறு விஷயங்களில் இந்தியை இந்தி பேசாத மக்களிடம் திணிக்க முயன்றது.
பெரியார், சுத்தானந்த பாரதியார் , மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா, கருணாநிதி , க.அன்பழகன் , கே.ஏ மதியழகன், வைகோ என பல தலைவர்களும் மாணவர்களும் மொழிப்போராட்டாத்தை நடத்திச் சிறைச் சென்றனர்.
இந்த மொழிப்போரட்டத்தில் நடராசன் , தாலமுத்து ஆகியோர் சிறைக்கொடுமை தாளாமல் உயிரிழந்தனர்.
சின்னச்சாமி , அய்யம்பாளையம் வீரப்பன் , சத்திய மங்கலம் முத்து, மயிலாடுதுறை சாரங்கபாணி, விராலிமலை சண்முகம் , கீரனூர் முத்து, சிவகங்கை ராஜேந்திரன், பீளமேடு தண்டபாணி என்று தமிழுக்காக இந்தி திணிப்பை எதிர்த்து இவர்கள் தற்கொலைச் செய்து கொண்டார்கள்.
இந்தி ஆதரவாளர்கள் , ஆங்கில ஆதரவாளர்கள் என்று இரண்டு கூறுகளாகப் பிரிந்து நின்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டப்போது அப்போதைய பிரதமர் நேரு, "சிறுபான்மையினர் மீது அவர்கள் விரும்பாத ஒன்றை பெரும்பான்மை கொண்டு திணிக்க முற்பட்டால் , இந்த அவையோ அல்லது நாடோ எதை அடைய விரும்பிகறதோ அதற்கு வெற்றி கிடைக்காது " என்றார்.
இந்தியை ஒரு மொழி என்ற அடிப்படையில் படிப்பதிலோ , கற்றுக்கொள்வதிலோ இந்தி பேசாத மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. மாறாக, இந்தியைக் கட்டாயமாகப் படித்தே தீரவேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்திய போதுதான் பிரச்சனை தொடங்கியது. எதிர்ப்புகள் வலுத்தன.
இந்தியாவின் தனிப்பெரும் மொழி இந்தி மட்டுமே என்ற கருத்தை முன்வைத்த இந்தி ஆதரவாளர்களுக்கு அந்த பெருமையும் கேள்விக்குறியாக்கும் வகையில் இரண்டு அம்சங்கள் இருந்தன. முதல் அம்சம் , 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்தி மொழி பேசுவோரின் சதவிகிதம் 42 . இந்தி பேசாத மக்களின் சதவிகிதம் 58 . அந்த பட்டியலில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்று தனியே எதுவும் குறிப்பிடப்படவில்லை மாறாக , இந்தி - உறுது- இந்துஸ்தானி- பஞ்சாபி ஆகிய நான்கு மொழிகளையும் பேசுவோரின் எண்ணிக்கை 42 சதவிகிதம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தி மட்டுமே 42 சதவிகிதம் அல்ல.
இரண்டாவது அம்சம், இந்தி மொழியைப் பேசுவதாகச் சொல்லப்படும் அத்தனை பேரும் ஒரே வகை இந்தியைப் பேசவில்லை. கௌரவி , பிரஸ், கௌஷாலி, ராஜஸ்தானி, பீகாரி ஆகிய ஐந்து குழுக்களைக் கொண்ட மொழி இந்தி. ஒவ்வொரு குழுவிலும் இரண்டு முதல் ஐந்து வரையிலான மொழிப்பிரிவுகள் இருக்கின்றன.
கடிபோலி, பங்காரு இரண்டும் கௌரவி மொழிக்குழுவையும் பிரஜ் பாஷா, கண்ணோவ்ஜி , பண்டேலி ஆகியன பிரஜ் குழுவையும் அவதி , பஹேலி, சட்டிஸ்காதி ஆகியன கெளஷாலி குழுவையும் மார்வாடி, மால்வி , ஜெய்புரி, மேவதி, மாலினி ஆகியன ராஜஸ்தானி குழுவையும் போஜ்புரி, மைதிலி, மகாஹி, கார்வாலி, காமாயுளி , நேபாலி ஆகியன பீகாரி குழுவையும் சார்ந்தவையாக இருக்கின்றன.
இந்தியில் தேவையான அளவு இலக்கியங்களோ அறிவுசார் அறிவியல் நூல்களோ இல்லை என்கிறார் மொழியியல் ஆய்வாளர் பஷீர் அகமது சயீத்.
"ஹிந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற வரையில் , இந்திய யூனியன் அரசின் ஒர் ஆட்சிமொழியாக ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் என்று நேரு அளித்த வாக்குறுதியை காப்பாறமல் அதை அலட்சிய படுத்தும் விதமாகவே அவருக்குபின் வந்த பிரதமர்களும் அவர்களின் அரசாங்கமும் நடந்துக்கொண்டது.
மொழி என்பது உணர்ச்சிபூர்வாமன ஒன்று . மொழியானது தொன்றுத்தொட்டு காலாகாலத்திற்க்கும் ஒரு மனிதனுடன் பயனிப்பது. என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ன உடை உடுத்த வேண்டும் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்று ஒரு மனிதன் இன்னொரு மனிதனக்கு கட்டளையிடவும் முடியாது திணிக்கவும் முடியாது. அதே நிலைதான் ஒரு மொழிக்கும் ஒரு மொழியை சிறுமைப்படுத்தி இன்னொரு மொழியை உயர்த்தி பிடித்தால் சிறுமைப்படுத்திய மொழி பேசும் மக்கள் அடிமைகளாகவே நடத்தப்படுவார்கள். அதுமட்டுமின்றி அவர்களின் உரிமைகளும் மறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்படலாம்.
இந்தியா என்ற தேசம் பல மொழியையும் பற்பல கலாச்சார பழக்கவழக்கங்களை பின்பற்றும் பல மாகாணங்களால் ஆனது. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று கூறுவர் அது இந்தியாவிற்க்கு மிகவும் பொருத்தமான வாக்கியம் . இந்தியாவின் வலிமையே இங்கு பல்வேரு பிரிவுகளாய் வாழும் இந்த மக்களின் ஒற்றுமையில்தான் இருக்கிறது . அதற்க்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இந்த மக்களுக்கு எதிராக அரசாங்கம் எந்தவொரு சட்டத்தையோ திட்டத்தையோ கொண்டுவருமானால் அது இந்திய நாட்டின் வலிமையை இந்நாட்டு மக்களே உடைக்கும் நிலைமைக்கு தள்ளப்படும்.
"மொழிப்போர், " உண்மையில் வெகு நாட்களுக்கு பிறகு என் கண்களை கலங்கிடச் செய்த ஒரு புத்தகம் இது. உலகில் எந்த ஒரு இனமும் தனது மொழியினை காக்க இத்தனை மெனக்கெட்டதும் இல்லை, இத்தனை உயிர் தியாகம் செய்த வரலாறும் இல்லை, தமிழனை தவிர்த்து. உண்மையில் நன் பெருமிதம் கொள்கிறேன் தமிழனாய் பிறந்ததற்காக.