கரிக்கோல் என்று அருளியார் தமிழில் கூறும் pencil பல ஒன்று சேர்ந்து செல்லும் சிறு சுற்றுலா பற்றிய கதை இது. நமக்கென்று ஓர் உலகம் இருப்பதுபோல கரிக்கோல்களுக்கும் ஓர் உலகம் உள்ளதாம்
அவ்வுலகிற்கு நம்மை இந்நூல்வழி அழைத்துச் செல்கிறார் விழியன். அவை பேசுகின்றன. அவற்றிற்குக் கை கால்கள் உள்ளன. ஒவ்வொரு கரிக்கோலும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும் ஒவ்வொரு நிறத்தில் இருந்தாலும் அனைத்தும் ஒரே நிறத்தில் எழுதுவதை வியக்கிறார் விழியன்
மாந்தர்களாகிய நம் அகவை கூடக்கூட நம் உயரம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதிகரிக்கிறது. ஆனால் கரிக்கோலுக்கோ அகவை கூடக்கூட அல்லது அவை எழுத எழுத அவை முதிர முதிர அவற்றின் உயர்ம் குறைகிறது. ஆக இளங்கரிக்கோல் உயரமாகவும் முதிர்கரிக்கோல் குள்ளமாகவும் இருக்கின்றன
மாந்தனுக்கும் கரிக்கோலுக்கும் இடையேயான இந்நன்முரண் சுட்டுகிறார் விழியன்
சிறுவர்கள் அன்றாடம் புழங்கும் பொருளை வைத்துக் கதை சொல்கையில் அது அவர்கள் மனத்திற்கு நெருக்கமாக அமையும். அவற்றின் வழி கனியிடை மருந்து போல் கதையிடை நற்கருத்தை ஒளித்து வைத்து ஊட்டுகிறார்
பள்ளி வளாகத்திற்கு வெளியே கரிக்கோல் அனைத்தும் தம் விருப்பம் போல் ஆட்டம் போட்டுக் களிப்பதும் பள்ளியினுள் இருக்கும்பொழுது வரிசையில் செல்வதும் மேற்கூறியதற்கோர் எடுத்துக்காட்டு
கரிக்கோலின் உரிமையாளரான சிறுவரின் பெயரையே அந்தந்தக் கரிக்கோலுக்கு இட்டழைத்தது ஒரு நல்ல உத்தி
கரிக்கோல் கதை என்றதும் கரிக்கோலே இக்கதையின் தலைவன்/Hero என்றாகிறது. எனில் எதிரி/Villain யார்? வேறு யார்? கரிக்கோலைக் கூர்மையாக்கத் துருவும் Sharpener என்னும் கரிக்கோல் துருவிகள் தான். தலைவன் இருக்கிறான் எதிரி இருக்கிறான் பாங்கன் எனப்படும் தலைவனின் தோழனும் வேண்டுமல்லவா
Pen எனப்படும் தூவல் தான் கரிக்கோலின் பாங்கன் எனலாம். விழியன் தூவலைக் கரிக்கோலின் உறவுமுறை என்கிறார்
கரிக்கோல் அனைத்தும் ஒன்றுசேர்ந்து ஓரிரவு சுற்றுலா சென்று ஒரு சிற்றருவியில் ஆடுகின்றன. உயரமான இளங்கரிக்கோல் குள்ளமான முதுகரிக்கோலுக்கு ஏற இறங்க கடக்க உதவுகின்றன
கரிக்கோல் பற்றிய வரலாற்றைக் கதையின் போக்கில் ஒரு கரிக்கோலே ஆமை அண்ணாச்சியிடம் கூறும்படி அமைத்ததோடல்லாமல் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் சில துணுக்கும் தருகிறார் விழியன்
சிறுவர்கள் புழங்கும் பொருட்களை வைத்து இதுபோன்ற கதை சொல்லல் பெருகுக! உயிரற்ற பொருளையும் கவனமாகக் கையாளும் ஒழுக்கம் இதன்மூலம் வளரக்கூடும்
தன்னுயரம் குறைத்து மாணவர்களை உயர்த்தும் கரிக்கோல் பற்றி இந்நூல் படிக்கும் சிறுவர்கள் மேலும் தேடுக!