விழியன் அண்ணன் திருநெல்வேலி வருகிறார். எப்படி வரவேற்கலாம்? அவர் எழுதிய ஒரு புத்தகம் படித்து வரவேற்போம். சில புத்தகம் எடுத்தால் முடிந்துவிடுமே என்றே எடுக்காமல் வைத்திருப்போம். அப்படியான ஒரு புத்தகம் இது
விழியனும் குழலியும் என்ற தலைப்பும் கூட இந்நூலிற்கு மிகவும் பொருந்தும். எளிதாக இயல்பாக இருக்கவேண்டியவை இன்று அரிதானவை அச்சுறுத்துபவை போல் காட்டப்படுகின்றன. அப்படி ஒன்று தான் குழந்தை வளர்ப்பு. அதன் இனிய பக்கத்தைக் காட்டி ஆசை ஊட்டுகிறது இந்நூல்
முதிய பருவத்தில் இளமைக்கால நினைவுகளை அக்காலத் திரைப்பாடல் வழி நினைவுகூர்வது போலக் குழந்தை வளர்ப்பைக் கடந்து வந்தோரை மீண்டும் அந்நாளிற்கு இட்டுச் செல்லும் இந்நூல்
குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டிருப்போர் அது கடினம் என்று தோன்றும் பொழுதெல்லாம் எடுத்துப் படித்து அதன் இனிய முகத்தைக் காலம் கடக்குமுன் நுகர வேண்டும் என நினைவூட்டும்
பிடித்த நடிகரின் புதிய திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி காணச் செல்லும் நாளில் இளைஞர்கள் அந்நடிகரின் முந்தைய படம் பாடல் கண்டு கேட்டு வெறி ஏற்றிக் கொள்வது போலக் குழந்தை வளர்ப்பைத் துய்க்கவிருப்போர் படித்து ஊக்கம் பெறத்தக்க நூல்
பொறுமை பயன் தரும் என்பர். பொறுமை இன்பமும் தருமாம். குழந்தைகளின் ஒட்டாரத்தையும் சுட்டித்தனத்தையும் இடைவிடாத கேள்விகளையும் பொறுமையுடன் கையாண்டால்... ஆண்டால்? ஆளலாம் இன்ப மழலை உலகை. அடம் பிடிக்கும் குழந்தையின் கவனம் திருப்பக் கதையும் கற்பனையும் கைகொடுக்கும் போலும்
குழந்தைமையை நெருங்குவோம் என்ற தலைப்பில் புத்தகம் படைத்த இவர் உச்சி முகர் நூலில் குழந்தைமையைக் கொண்டாடக் கற்றுத்தருகிறார். இவரும் ஒரு குழந்தையே என எண்ண வைக்கிறார். குழந்தை மனம் கொண்ட ஒருவராலேயே குழந்தைமையைக் கொண்டாட இயலுமோ?
குழலியம்மா என்று தன் இணையரை ஓரிடத்தில் இந்நூலில் குறிப்பிடுகிறார் குழலியப்பா விழியன். குழலியப்பா ஒரு குழந்தையப்பா. அந்த அப்பா ஒரு குழந்தை என்பதால் தான் குழலியால் மட்டுமன்றி அவள் தோழன் தோழிகளாலும் குழந்தைகள் உலகில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்
நாமும் இப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட என்ன செய்ய வேண்டும் என்றும் கற்றுத்தருகிறார். காது வளர்க்க வேண்டும் நாம். அதாவது பெரிய காதுகள் வேண்டுமாம். ஆம் குழந்தைகள் தம் பேச்சையும் தாமே சொல்லும் கதைகளையும் உண்மையாகக் கவனிப்போரிடம் மட்டுமே தம் கதைகளையும் உண்மைகளையும் கூறுகிறார்கள்
பொறுமையாகக் கேளுங்கள் அந்தக் கதைக்குள் நீங்களும் இருக்கலாம்
குழந்தையாகிய குழலியப்பாவால் என்னவெல்லாம் செய்ய முடியும்?
குழலியப்பாவால்
வானத்தில் புகைப்படும் எடுக்க முடியும்
தன் வாசல் கழுவிய வானம் உடைந்து விழுந்தால் அதைக் கயிறு கட்டி மீண்டும் மேலேற்ற முடியும்
மண்ணில் விழுந்து பிய்ந்து போன அழுக்கான வெண்ணிலவை Fevistick போட்டு ஒட்டிச் சலவை இயந்திரத்தில் போட்டு வெளுப்பாக்கிக் கால் பந்து போல் எட்டி உதைத்து மீண்டும் வானில் ஏற்ற முடியும்
கீழே விழுந்த விண்மீன் ஒவ்வொன்றாக எடுத்து எறிந்து வானில் நிறுத்த முடியும்
குழலியப்பா shoe உள்ளிருந்து குட்டி யானைகள் புறப்பட்டு வரும் என்றால் குழலி shoe உள்ளிருந்து விண்மீன் வெளிவருவதில் வியப்பில்லை தானே
குழந்தைகளிடம் பொம்மைகள் பேசும் என்கிறார். எனக்கென்னவோ விழியனிடமும் பொம்மைகள் பேசும் என்று தோன்றுகிறது
குழலியப்பா இப்படி எனில் இக்குழந்தையப்பாவின் குழலியால் என்னவெல்லாம் முடியும்?
Jeeboombaa என்று அப்பா சொல்லித் தந்த கணக்கு magic செய்ய முடியும்
குதிரை பொம்மையைக் கட்டி உறங்கி நினைத்த இடத்திற்குச் செல்ல முடியும்
இரவில் Sun காண முடியும். Night Sun நிலவிற்குக் குழலி இட்ட பெயர்
காற்றைப் பணமாகக் கொடுக்க முடியும்
தன் தாத்தாவிற்குக் குழலி தாத்தா என்று பெயர் வைக்க இயலும்
ஒலி அணைத்த Tom & Jerry படத்தில் பேரோலி கேட்டுக் காதைப் பொத்திக் கொள்ள முடியும்
கதை சொல்லவும் கதை விடவும் முடியும்
ஆங்கிலம் முழுதும் கற்று முடிக்க இயலும். ஆம் A-Z தானே ஆங்கிலம்
மாயம் செய்கிறேன் என்று சொல்லி மயக்க முடியும்
ABCD... எழுத்துக்களில் ஒவ்வொன்றுக்கும் இடையில் உள்ள உறவைக் காண இயலும்
தொண்டை கட்டிய குரலாலும் குழலியால் குழலியப்பாவை ஈர்க்க முடியும்
இந்தக் குழலியப்பாவின் குழந்தையும் குழந்தையப்பாவின் குழலியும் நம்மை நாடு கடத்துகிறார்கள் இந்நூல் வழி
இவர்கள் ஏறும் வானூர்தி செல்லும் வழியில் இருக்கும் நிலவே விண்மீன்களே ஒதுங்கி உங்களைக் காத்துக்கொள்க! இல்லையேல் உங்களை இடித்துத் தள்ளிவிடுவார்கள்!
விழியனால் எங்கும் தேவதைகளைக் காண முடிகிறது
அதனால் தான் ஒரு தேவதை தன் பிஞ்சுக் கைகளில் முத்தமிட்டுக் காற்றில் அதை ஊதி அவருக்கு அனுப்புகிறாள்
ஒரு தேவதை குழலியிடம் விழியனுக்கு ஒரு chocolate கொடுத்தனுப்புகிறாள்
உங்களுக்கும் இவை வேண்டுமா? தேவதைகளைக் காண முயல்க
ஒவ்வொரு நூல் படித்த பின் எழுதப்படும் துய்ப்புரை எப்படி இருக்கப்போகிறது என்பதை அந்நூலே முடிவுசெய்கிறது. இந்நூலிற்கான பதிவு இப்படி இருக்க வேண்டும் என குழலி மழலையாயிருந்த பொழுதே முடிவு செய்துவிட்டாள் போலும். இப்படியாக இவ்வாண்டின் குழந்தைகள் நாள் நிறைவடைந்தது எனக்கு