தமிழ் கதை மரபில் என். ஸ்ரீராமின் இடம்தனித்தன்மைமிக்கது. கிராமிய வாழ்வை களமாகக் கொண்ட அவரது கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையுமே பேசுகின்றன. அவை வெறுங்கதைகளாக அல்லாமல் பருவகாலம், பொழுதுகள், தாவரங்கள், பூக்கள், உயிர்கள், சத்தங்கள், வாசனைகள் ஆகியன நிறைந்த அனுபவங்களாகவே அமைகின்றன. இயற்கையை சொல்லாது வாழ்வும் இல்லை, எழுத்தும் இல்லை என்ற சங்க மரபைச் சேர்ந்தவை அவரது கதைகள் என்றாலும் நவீன கதைக்கான நுட்பங்களையும் உட்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. அழிந்துவரும் கிராம வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டவும் எடுத்துச்சொல்லவும் உதவும் பண்பாட்டு ஆவணங்களே என். ஸ்ரீராமின் கதைகள். தற்போது இரவோடி என்கிற தனித்துவமான நாவலை படைத்திருக்கும் என். ஸ்ரீராமுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
தேடலின் மயக்கம் --------------------------- சில வருடங்களுக்கு முன்பு, கிரெகரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய சாந்தாராம் புத்தகத்தை வாசிக்க நேர்ந்தது. அது மும்பையின் அண்டர் வேர்ல்ட் பற்றிய உண்மையும் புனைவும் கலந்து நேரடி அனுபவம் சார்ந்து எழுதப்படட ஒரு புதினம். அது எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் பலரிடமும் அதைப்பற்றி குறிப்பிட்டுவந்தேன். சிலர் அதை வாசிக்க என்னிடமிருந்து இரவல் வாங்கிச்சென்றனர். அதிலும் சிலர் வாசிக்காமலே அதைத் திருப்பித்தந்தனர். அவர்கள் அனைவரும் பொதுவாக என்னிடம் குறிப்பிட்ட்து, "கிட்டத்தட்ட ஐம்பது பக்கம் வாசித்துபார்த்தேங்க, தூக்கம் வருவதுபோல் இருக்கிறது. முடியல..."
எனக்கு இது வியப்பாக இருந்தது. கிட்டதட்ட 950 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. கதையின் களத்துக்குள் நம் மனம் போய் புகுந்துகொள்ள ஒரு குறிப்பிட்ட அளவிலான பக்கங்களாவது கடக்க வேண்டும் . ஏனெனில், அதன் களம் நமக்கு பழக்கம் இல்லாதது. அதன் மைய உணர்வு நம் மனதில் படிந்து வளர ஆரம்பிக்க வேண்டுமானால், அதற்கான குறைந்த பட்ச வாசிப்புப் பொறுமையையம், உழைப்பையும் வாசகரிடம் அது கோருவது இயல்புதானே. அப்போது தான் அந்த வாசிப்பின் சுவை நமக்கு கிடைக்க ஆரம்பிக்கும். அனைத்து உலக இலக்கிய வாசிப்புக்கும் இது பொருந்தும்.
பல வருடங்களுக்கு முன், கல்லூரி காலத்தில் பொற்றேகாட்டின் விஷக்கன்னிகை வாசிக்க ஆரம்பித்தபோது எனக்கும் இந்த இக்கட்டு நேர்ந்தது. ஆனால் , மெதுவாக குறிப்பிட்ட அளவிலான பக்கங்களை வாசித்த பின்பே அன்றைய மலபாரின் களம் எனக்குள் ஊற ஆரம்பித்து, பிறகு அந்தக்கதை எனக்குள் வேரூன்றி கிளைபரப்பி, பூப்பூத்து, காய்காய்த்து கனிய ஆரம்பித்தது.
அதனால் ஒவ்வொரு கதைக்கும் தேவைப்படும் அப்படிப் பட்ட பக்க வரம்பை, சாந்தாராம் பக்கங்கள் என்றே நண்பர்களிடம் குறிப்பிடுவேன். இந்த புத்தகத்தில் ஸ்ரீராம் படைத்திருக்கும் சாமக்கோடாங்கிகளின் உலகம் அப்படிப்பட்டதுதான்.
ஸ்ரீராம், தாராபுரத்துக்காரர். ஏற்கனவே அவருடைய மாயாதீதம் வாசித்து பிரமித்துபோனேன். கொங்கு நிலப்பரப்பில் அதன் மண் வாசனையோடு, அதன் நம்பிக்கை மற்றும் தொன்மங்களைக் கலந்து பூசிய சாந்தொடு உலாவரும் மனிதர்களை அவர் தன கதைகளில் காட்டுகிறார். அதனால் அவருடைய இரவோடி வாங்கிவைத்து வாசிக்கக் காத்திருந்தேன்.
சிறுவயத்தில் என் பாட்டி சாப்பாடு ஊட்டும் போது, "சோத்த போட்டு முழுங்காம இப்பிடியே கடைவாயில கொழக்கட்ட புடிச்சுட்டு உக்காந்தைனா, கோடாங்கி கிட்ட புடிச்சு குடுத்துருவ பாத்துக்க..." என்று அவள் சொல்லும் போது, மனதில் கருப்பாக, உருமாலை கட்டி, ஒரு பெரிய தொங்கும் துணிப்பையை தோளில் மாட்டிக்கொண்டு, உடுக்கை அடித்துக்கொண்டே "ஜக்கம்மா வர்றா... இந்த வீட்டுக்கு ஜக்கம்மா வர்றா" என்று உரக்க கத்திக்கொண்டு நடை வாசலுக்கு வரும் உருவம் மனதில் தோன்றும். அந்தப் பையில் தான் சோற்றை முழுங்காமல், குறும்பு பண்ணும் பையன்கள் இருப்பதாக ஒரு கற்பனை வந்து, வயிற்றுக்குள் பயம் பந்தாக உருளும். அதைத்தாண்டி, அவர்களெல்லாம் யார், எங்கிருந்து வருகின்றனர், அவர்கள் வாழ்வு எப்படிப்பட்டது என்று எதுவும் தெரியாது.
அப்படி நம் வாழ்வின் விளிம்பில் ஊடாடிய சாமக்கோடாங்கிகளின் வாழ்வை பெரும் உழைப்போடு ஆய்ந்து, வாசித்து, அவர்களின் நம்பிக்கை என்னும் ஒற்றை இழையை எடுத்து, புனைவு கூட்டி, மிக நளினமாக ஸ்ரீராம் பின்னிய ஒரு கதைத்தான் இந்த இரவோடி. “வெறும் தரவுகள் மட்டுமே பெரும்புனைவாகிவிடாது. வலுவான கதாப்பாத்திரங்களும் கதையோட்டமும் வாசிக்க ஏதுவான மொழிநடையும் தேவை. புனைவின் மகத்தான ஒளி வழிநடத்தினால் மட்டுமே இவை சாத்தியம் என்பது எனது ஆழ்நம்பிக்கை.” என்று அவரே குறிப்பிடுவதுபோல், தேடல் என்னும் ஒரு உணர்வு, குறிப்பிட்ட அளவு சாந்தாராம் பக்கங்கள் கடந்தபின், உள்ளே மனதில் வந்து அமர்ந்து கொள்கிறது. அதன் பின், வீரான் என்னும் சாமக்கோடாங்கியின் தேடல் வழியாகவே காலங்களையும், சம்பவங்களையும், அவற்றில் பயணம் செய்யும் மனிதர்களையும், கண்டு, அதோடு வேகமாக ஓடி ஓடிக் களைத்து விழவைக்கிறது!
கதையில் வரும் மனிதர்கள் எங்கள் கொங்கு பகுதியின் மொழிபேசுவதாலோ என்னவோ, முத்துசாமி வாத்தியார், பாதிரியார், கிளீனர், மீசைவைய்த்த, சுருட்டு குடிக்கும் மச்சு வீட்டுகாரர், அந்தப் மச்சுவீட்டு வயசான இந்திராணியம்மா, பானுமதியக்கா, பொட்லிக்காரர், இன்ஸ்பெக்ட்டர் ரவீந்தர், துன்பப்படும் அவர் மகன் என்று ஒவ்வொரு பாத்திரமும், நான் அறிந்த முகங்களோடு, எப்போதோ ஒரு பொழுது நான் சந்தித்த மனிதர்களாவே இருந்து, கதைப்பின்னலில் என்னை கட்டிப்போட்டது!
ஆரம்பத்தில் பல கால இழைகளில் துவங்கி ஒன்றுக்கொன்று என்ன சம்பந்தம் என்று மயங்க வைக்கும் கதை, அதன் மைய இழை பிடிபட்டவுடன், வேகமெடுக்கிறது. அகிலொடும், வீரானோடும் எனக்குப் பழக்கமான எங்கள் பகுதிகளான, தாராபுரம், காங்கயம், கொடுமுடி என்று ஓட ஆரம்பிக்கும் கதை, பிறகு அவர்களோடு நம்மை மஹாராஷ்ட்ரா வரை கூட்டிப்போய் திரும்ப கர்நாடகாவின் மைசூரு, நாகர்ஹோலே, பன்னேர்கட்டா வழியாக நம் கொங்கு எல்லையான தெங்குமராட்டா வழியாக திரும்ப வந்து ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது.
இருந்தபோதும் , புத்தகத்தில் முடிந்த தேடல் என் மனத்தில் மட்டும் இன்னும் முடியவில்லை.
🌟"படைப்பு சங்கம்" விருது பெற்ற நூல். விருதுக்கு ஏற்றார் போல், இந்த கதை ஒரு அருமையான படைப்பு, இக்கதையை படிக்கும் பொழுது, ஒரு மனிதன் எண்ணத்தில் எத்தனை வலிமை இருந்தால் இவ்வாறெல்லாம் சிந்தித்து, தரவுகளை ஆராய்ந்து, அதற்காக பல பயணங்களை மேற்கொண்டு, கதை எழுத முடியும் என்று நூலின் ஆசிரியர் மீது ஒரு பேர் வியப்பு உண்டாகிறது.😲👏👏👏 இது ஒரு "Non Linear" கதை களம்..
ஒரு சாமகோடாங்கி சிறுவனை (வீரான்) மையமாக வைத்து எழுத பெற்ற கதை. கோவை மண்டலம் தாராபுரத்தை சுற்றி அமைந்துள்ள இடங்களில் கதை நகர்ந்து செல்லும். குடுகுடுப்பு இசையுடன் ஜக்கம்மா தேவி அருள் கொண்டு வீரான் கதையை துவக்குகிறார். நெருப்பு வளையங்களுக்குள் துவங்கி நெருப்பு வளையங்கள் வழியாக கதை முற்றுபெறும். கொங்குவெளி சாமகோடங்கிகள் பற்றிய தகவல்கள் இந்த கதையில் இடம் பெற்றுள்ளன. அவர்களின் குல நம்பிக்கை, அவர்களுக்கு முன்னோர் வகுத்த வழி.
**அந்த முன்னோர் சாபம் என்று கருதும் கூடத்தில் இருந்து ஒருவன் தனித்து இயங்க துடிக்கிறான்,அவன்தான் வீரான். வீராணை படிக்க வைக்க அவன் தந்தை முற்பட்டாலும், அவர்கள் சமுதாயம் அவன் படிக்க மறுப்பு தெரிவிக்கிறது... இது கதையின் ஒரு மையமாக இருந்தாலும், கதை இன்னும் வேறு இரு பாதைகளில் பயணிக்கும்.. ***அவனது பயணம் மிக விரு விருப்பாக இருக்கும், அவன் சந்திக்கும் மனிதர்கள், அவனை தேடும் மனிதர்கள், அவன் தேடும் மனிதன் *** என்று பல கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு சுவாரசியமான பயணமாக இந்த கதை இருக்கும். சாமகோடாங்கிகளை நம் வாழ்நாளில் நம்முடன் நிலைத்து இருக்கும்படி கதை ஆசிரியர் எழுத்துக்களுக்கும், கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார். **இந்தக் கதையை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும்***
This Novel has stuff to get generated on the Silver screen as Web Series