‘கள்ளம்’ உண்மையில் இது ஓர் அபாயகரமான நாவல். ப்ரகாஷ் சிறு பிள்ளைகளைப் போல அபாயங்களைச் சந்திப்பதில் எப்போதும் ஆவல் காட்டுவது வழக்கம். அதனால் தனக்கு கஷ்டம், நஷ்டம் என்று தெரிந்தும் துணிந்து அபாயங்களுடன் விளையாட அவரால்தான் முடியும். இக்கதையை நான் படித்தபோது, “பெண்கள் ஏனிப்படி லகுவில் சோரம் போகிறார்கள்?” என்ற கேள்வியை ப்ரகாஷிடம் கேட்டேன். “நீ வளர்ந்த சூழ்நிலையில் இவ்வாறு கேட்கிறாய். ஆனால் சமுதாயம் அப்படி இல்லை. அங்கே இவை நடந்தேறிக் கொண்டுதான் உள்ளன” என்று பதிலளித்தார். அப்போது என்னுடன் பணியாற்றிய எனது தோழி செல்வி, வசந்தாவிடம் நாவலைக் கொடுத்து, “படித்து விட்டு உனக்குத் தோன்றுவதைச் சொல்” என்றார். அவர் தஞ்சாவூர் பூக்காரத் தெரு பகுதியில் வசிப்பவர். படித்து விட்டு “எப்படி பாவா கண்ணால் பார்த்தது போல எழுதி இருக்கிறீர்கள்?” என்றார். ப்ரகாஷ் என்னைப் பார்த்தார். இப்படி இல்லை என்று மறுப்பதற்கு வகையில்லாமல் அவரது படைப்பும் கருத்தும் வலுப்பெறும் விதமாகத்தான் நடப்பும் செய்திகளும் கூறுகின்றன
உலக இலக்கியங்களை மொழிப்பெயர்த்து இங்கு நாம் படிப்பது போல, நம்மிடம் இருக்கும் நல்ல எழுத்தாளர்களின் நூலையும் அங்கு கொண்டு போனால் உலக இலக்கியங்களில் நமதும் ஒன்றாய் பேசபடும். இவரது நூல்களில் சிறுகதை தொகுப்பாய் " Boundless & Bare " என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. அறிந்து கொள்வோம்.
தஞ்சை ப்ரகாஷின் ' கள்ளம் ' என்னும் இந்த நூல்; ஒரு கலைஞனின் பித்த நிலை, அதுவும் சாதாரணமாய் அல்ல; தன் தந்தை கலையில் ஒரு ஜாம்பவானாய் இருக்கும் பட்சத்தில் அதை உடைத்தெரிந்து, புதிய பாதையை தனக்கென சுயமாய் எப்படி அமைத்தான் என்பதை தான் கலை நயத்துடன், காமம், காதலோடு சொல்லியிருக்கிறார்!! அவன் சந்திக்கும் பெண்கள்; இப்படி எல்லாம் இருந்திருப்பார்களா ? என்பதை தாண்டி நம்ப வைத்து ஒளிவு, மறைவின்றி அப்படியொரு ஈர்ப்பான மொழி நடை!! சுருக்கமாக, தஞ்சையில்,அக்காலத்தில் ஒரு அரண்மனையில் குடிக்கும், கஞ்சாவிற்கும், மாதுவிற்கும் என சகலத்திற்கும் அடிமையாகி ஓரத்தில் விழுந்து கிடக்கிறான். அங்கு இருக்கும் வேசியின் மாராட்டிய வேலைக்காரியின் மூலம்; தன் அப்பாவின் புகழையும், கலையம்சத்தையும் தாண்டி கண்ணாடி ஒட்டி அசுர சித்திரம் ஒன்று செய்து புதிதாய் ஒரு வாழ்விற்குள் நுரைகிறான்; அதுவோ, பரத்தைகள் உலாவும், போராட்டங்கள் சூழந்த சேரி எனப்படும் இடம் மூலம் தானே சுயமாய் கலை மூலம் பிரபலப்பட்டு அனைவரிடமும் காமமும், காதலும் என்றவாறு கிடக்கிறான்.
இதில் வரும் பெண்கள், இருந்திருக்கலாம்! ஆனால், நினைத்துப் பார்க்கையில் ஒரு பித்து பிடித்த கலைஞனின் வாழ்வும், அக்கால பெண்கள் வாழ்வும் கண்முன்னே 😍
இந்நாவலை படிக்கும் போது கற்பனை செய்து பார்க்கையில், அது ஒரு வித பரவசம் தருகிறது.
கண்டிப்பாக, மறுவாசிப்பில் இன்னும் மற்றொரு பார்வை படும்; அந்த அளவுக்கு மீண்டும் படிக்க வேண்டிய நாவல்.
ஈர்த்த சில வரிகள்;
" பசியின் இழிவே அது தணிந்து விடுவதில் தானிருக்கிறது காமத்தின் அவலமே, அது அடங்கிப் போவதில் தான் உதிர்ந்து போகிறது "
" என் போலித்தனம் எத்தனை சுவாரஸ்யமானது "
" இந்த முக விபச்சாரம் இல்லாமல் இன்று யாரிருக்கிறார்கள் ? "
" வாழ்க்கை யாரையும் விட்டு வைக்காது. ஏற்றமும் தாழ்ச்சியும் அதன் நியதி. வளர்ச்சியும் வீழ்ச்சியும் அதன் கதி. தான் மட்டும் தப்பித்துக் கொள்ளப் பார்க்கும் ஞானியும் அபத்தக் களஞ்சியங்களாய் நின்று போவதே இதன் கோரம். இவற்றை நான். யாருக்குச் சொல்லுவேன்? "
Author: தஞ்சை பிரகாஷ் Publisher: டிஸ்கவரி புக் பேலஸ் விலை : 200ரூபாய்.
வெகு நாட்களுக்கு பிறகு, இந்த ஆண்டின் முதல் நாவலாக வாசித்தது தஞ்சை பிரகாஷின் கள்ளம் நாவல். இந்த நாவலை எடுத்ததற்கு காரணம் இந்த நாவல் கொண்டிருக்கும் களம். ஒரு கலைஞன் தன் கலை மேல் கொண்டிருக்கும் தாகம், அவன் வந்திருந்த கலை பாரம்பரியத்தை எப்படி உடைத்து புதிய தரிசனத்தை கண்டுஅடைதான் என்பது தான் கதை. கதை மிக சுவாரசியமாகவும் யதார்த்தமாகவும் தான் பயணிக்கிறது, ஆனால் சொல்ல வந்த விஷயத்தை அதாவது கதையாய்யும் கதாப்பாதிறத்தையும் ரொம்பவும் மேலோட்டமாகவும் ரொமாண்டிஸிஸ் செய்யும் விதமாக இருந்தது தான் வருத்தம்.அதுவும் அந்த கலைஞன் (ப்ரோட்டாகனிஸ்ட ) தான் விரும்பும் கலையை உயிர்ப்பிக்க அவன் நாடும் சாரங்கள் கலை,கடவுள்,காமம். இதை இந்த கதையில் ஒரு சிம்போலிஸ்மாக மிக அற்புதமாக ஒரு இடத்தில் வருகிறது.நம் நாட்டின் தொன்மங்களில் கலை மதத்தோடுதான் பயணப்பட்டு வந்திருக்கிறது, அதுவும் நம் கலைகளில் காமம் சார்த்த பார்வைகள் மதத்தில் மிக தீவிரமாகவே இயங்கின. அதற்கு நம் கோவில்கழும் சிற்பங்களுமே சாட்சி. இந்த கலை அம்சங்கள் தந்த்ரா என்னும் மரபில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது (நம் இந்திய தத்துவ மரபில் சாக்த வழிபாட்டில் முக்கியமாக இருப்பது தந்த்ரா வழிபாடு).
இந்த கதை தஞ்சை ஓவிய மரபை பற்றியும் அதை வளர்த்த மாந்தர்கள் பற்றியும் விவரிக்கிறது, கதை ஒரு வரலாற்று பார்வையை கொண்டு இருத்தலும் அதை சொல்லாமல், கதாநாயகன் அவன் பயணிக்கும் பாதை அவன் சந்திக்கும் பெண்கள் என்றுதான் பயணிக்கிறது.இந்த வகை கதைகள் பலர் எழுதியதுததான் இருந்தும் தஞ்சை பிரகாஷ் அவர் நடையிலும் பார்வையிலும் நிச்சியம் ஒரு தவிர்க்க முடியாத ஒரு படைப்பாளி ஆகிறார். மொத்தத்தில் இந்த படைப்பின் take away என்றால் காமத்தை கலையிலும் கலையை காமத்திலும் தேட வைத்திருப்பதுதான்.
ஆசிரியர் : தஞ்சை ப்ரகாஷ் நாவல் 207 பக்கங்கள் ரிதம் வெளியீடு
சில நேரங்களில் ஒரு புத்தகத்தின் கதையை தாண்டி அந்த புத்தகம் உருவான பின்னணி அந்த புத்தகத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் . அப்படி இந்த புத்தகம் உருவான பின்னணி முற்றிலும் மாறுபட்டது . தஞ்சை ப்ரகாஷ் - நவீன தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி பாணியில் தன் மண்ணையும் மக்களையும் தன் கதைகளுக்குள் கொண்டாடியவர் . ஆனால் ,அவரையும் அவருடைய எழுத்தையும் நம் தமிழ் சமூகம் கொண்டாட தவறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும் . ஏறத்தாழ 7-8 மொழிகளில் எழுதி பேச தெரிந்து , சிறந்த மத்திய அரசு பணியில் இருந்தும் இலக்கியத்தின் மேல் தனக்கு இருந்த ஈர்ப்பால் அனைத்தையும் துறந்து சிறு சிறு வேலைகள் செய்து தன் எழுத்து பணியை தொடர்ந்தவர் . அவருடைய இறுதி காலத்தில் தன் கைகளில் உள்ள எலும்பு கட்டி அகற்றப்பட்டு எழுத முடியாமல் இருந்த தருணத்தில் தன் நண்பனின் உதவியோடு எழுதிய நாவல் தான் இந்த கள்ளம் . தன் வாழ்நாள் முழுதும் தன் மனதில் ஊறிக்கொண்டே இருந்த ஒரு கருவை ஒரு பெரும் சரித்திர இதிகாசமாக எழுத எத்தனித்து தன் வாழ்வின் சூழ்நிலையும் , உடல் நிலைமையும் ஒத்துழைக்காத காரணத்தால் அதனை கள்ளம் நாவலாக நமக்கு கொடுத்துள்ளார் . இவருக்கு மட்டுமல்ல தமிழ் இலக்கியத்தின் பல முன்னோடி எழுத்தாளர்களுக்கும் இதே நிலை தான் மிஞ்சியது . தஞ்சை பின்புலத்தில் ஒரு மாபெரும் நவீன இதிகாசத்தை நம் தமிழ் சமூகம் தவறவிட்டது என்று தான் கூறவேண்டும் .இவ்வளவு இன்னல்கள் இருந்தும் , இருக்கும் என்று அறிந்திருந்தும் ஏன் எழுத்தாளர்கள் இந்த சமூகத்திற்கு இன்னும் எழுதிக்கொண்டே இருக்கின்றனர் ? அவர்கள் இந்த சமூகத்திற்கு என்ன கூற விளைகின்றனர்? பல ஆயிரம் புத்தகங்கள் இன்னும் ஒரு முறை கூட திறக்கப்படாமல் இந்த தமிழ் மண்ணில் தவித்துக்கொண்டிருக்க இன்னும் புத்தகங்கள் வேண்டுமா ? எழுத்தாளன் வேண்டுமா ? எழுத்து வேண்டுமா ? இந்த கேள்விகள் அனைத்திற்க்கும் பதில் நாம் வாசிப்பதில்தான் இருக்கின்றன . வாருங்கள் வாசிப்போம் .
தஞ்சையின் புகழ் பெற்ற தஞ்சை சித்திப்பட கலையை பிரதானமாக வைத்து எழுதப்பட்டதுதான் இந்த கள்ளம் நாவல் . முந்தைய தலைமுறையில் இந்த சித்திரப்பட கலையில் உலகளவில் தலைசிறந்து விளங்கிய மீனாக்ஷிராஜு . அவரின் அடுத்த கலை வாரிசாக அவர் நினைத்த அவருடைய ஒரே மகன் பரந்தாமராஜு. ஆனால் பரந்தாமராஜுக்கோ காலம் காலமாக ஒரே வடிவி��் ஒரே கண்ணன், ராதை போன்ற சித்திரத்தை வெறுமனே வண்ணங்களும் உருவங்களும் மட்டுமே மாற்றி விற்பது எல்லாம் ஒரு கலையே இல்லை என்று வெறுத்து ஒதுங்கி தன் மனம் போன போக்கில் அலைகிறான் . இலக்கியம் , ஓவியம், கவிதை , மது , மாது என்று எண்ணற்ற போதைகளுள் புரள்கிறான். அவனால் எல்லா மனிதர்களை போல கட்டமைக்கப்பட்ட ஒரு எந்திரம் போலான வாழ்க்கையை வாழவே முடியாது என்று பல முறை அவன் தந்தையிடம் முறையிட்டும் அவனுடைய தந்தை அவனை புரிந்துகொள்ளவில்லை .ஒரு கட்டத்தில் இந்த மோதல் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேறி ஒரு மராட்டிய விலை மாதுவாகிய ஜம்னா விடம் தஞ்சம் புகுந்து தான் உடலின் பசியையும் ,கலையின் பசியையும் போக்கிக்கொள்ள முயல்கிறான் . அவர்களின் கூடலுக்கு பிறகு அந்த இ சிதிலமடைந்த மராட்டிய கோட்டையில் அவன் வரைந்த அந்த நடன மங்கை பலரின் கவனத்தை ஈர்க்கிறது .அதன் பிறகு ஜம்னாவுடன் சேர்ந்து அருகில் உள்ள சேரியில் வாழ தொடங்கி, அங்கு உள்ள பெண்களிடம் நெருக்கம் ஏற்பட்டு, அவர்களின் ஆசைகளின் வழி அவர்களை இந்த சித்திரப்பட கலையை கற்றுக்கொடுத்து அவர்களையும் கலைஞர்களாக மாற்றுகிறான். இறுதியில் அந்த தந்தை தன் மகனை புரிந்து கொண்டாரா? பரந்தாமராஜு எந்த ஒரு வாழ்க்கையை விரும்பினானோ அந்த வாழ்க்கை கிட்டியதா? கண்ணனும் ராதையும் பிடித்து வைத்த இடத்தை எப்படி வால்முனியும், அம்மனும், முனியும் பரந்தாமராஜு வின் கலையில் இடம் பிடித்தன? இந்த வினாக்களுக்கு விடைகளாகவும், சில புதிய வினாக்களுடனும் கதை தொடர்கிறது பரந்தாமராஜு வின் பயணத்துடன்.
இந்த கதையில் விவாதிக்க எண்ணற்ற இடங்கள் இருந்தாலும். எனக்கு விவாதிக்க தோன்றிய இடம் இரண்டு தான். ஒன்று எப்பொழுதும் என் மனதில் தோன்றும் கேள்வி ஏன் கலை வடிவில் எப்பொழுதும் மேல் வகுப்பினர் வணங்கும் கடவுள்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கப்படுகிறது? ஒரு சில கடவுள்கள் மட்டும்தான் அழகா? கிராமத்து தெய்வங்கள் ஏன் கலை வடிவில் இடம் பெறுவதில்லை? இந்த கேள்விக்கு தான் பரந்தாமராஜு தன் கலை வடிவில் பதில் கொடுக்கிறான். இரண்டு - எல்லா காலத்திலும் பரந்தாமராஜு போன்ற சிறகடிக்க துடிக்கும் இளைஞர்கள் தங்கள் இருப்பை இந்த உலகில் நிலை கொள்ளாமல் சிதறடிக்கப்படுகின்றனர். அந்த சுழலில் சிக்காமல் இருப்பவர்களை உலகம் தனக்கு விருப்பப்பட்ட பெயர் கொண்டு அழைத்து அலைக்களைக்கிறது. அந்த சுழலை எதிர்த்து நின்று தனக்கென ஒரு வழியை உருவாக்கி அதில் பல பெண்களுக்கு வழி வகுத்து கொடுத்து ஒரு சமூக போராளியாக தான் எனக்கு பரந்தாமராஜு தெரிகிறான்.
இந்த புத்தகம் வாசிக்க உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும். மேலோட்டமாக அந்நியமாக இந்த புத்தகத்தை வாசித்தால் வெறும் காமமும், வெறுப்பும், வசவுகளும் மட்டுமே தென்படும். ஆனால், இந்த புத்தகம் பரந்தாமராஜு என்ற ஒரு இளைஞனின் மனசாட்சி தானே முன்வந்து இந்த கதையை நமக்கு கூறுவது போல நாம் வாசித்தால் ஆழமாக இந்த வாழ்க்கையை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இந்த புத்தகம் மூலம் என்னால் என் மகனின் இளமை பருவத்தை புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். " நான் இருட்டில் பறக்கிற பறவை. இருட்டுக்குள்ளே.. உள்ளே... ஒளியை அலகால் பிரித்தெடுக்க ரத்தம் கக்கிப் பறக்கிற கரும்பறவை " இந்த ஒற்றை வரி தான் இந்த நாவலின் மையம்.இதனை புரிந்து கொண்டால் பரந்தாமராஜு போன்ற பல இளைஞர்களை, கலைஞர்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
கரமுண்டார் வூடு தந்த பாதிப்பு அடங்காமல் தான், கள்ளத்தை கையில் எடுத்தேன். வாழ்க்கையின் வேஷங்களை கிழித்தெரிந்து அதன் எந்த பரிமாணத்தையும் விட்டுத்தராமால் வாழ்வின் இருப்பை நியாய படுத்தியது தஞ்சை ப்ரகாஷின் கள்ளம். தஞ்சை ப்ராகஷை கடந்து செல்வது அவ்வளவு சுலபமல்ல என்று மற்றுமொருமுறை உணர்ந்து கொண்டேன்.