சந்திரிகா திறந்திருந்த கண்ணாடிக் கதவின் வழியாக உள்ளே நுழைந்தாள். காவலாளி சொன்ன மாதிரியே கறுப்புக் கோட்டில் சிவப்பாய் ஒருவர் தெரிந்தார். மேஜையின் மேல் கற்றை கற்றையாய் பைல்களை வைத்துக் கொண்டு எதையோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தார். உச்சந்தலையில் வழுக்கை பரவியிருந்தது. கறுப்புக் கோட்டின் காலர் பாகம் நைந்திருந்தது. கூரிய மூக்கிற்குக் கீழே - மேலுதட்டில் நரை மயிர் கசமுசாவென்று மீசை என்று பெயர் சொல்லிக் கொண்டு வளர்ந்திருந்தது. தாடியும் அதே அடர்த்தியில் தெரிந்தது. முகத்தில் குறைந்தபட்சம் முந்நூறு சுருக்கங்களாவது இருக்கும். வயசு? ஐம்பதும் மதிக்கலாம் - எண்பதும் மதிக்கலாம் என்பதுபோல் ஒரு ரெண்டுங்கெட்டான் தோற்றம்.