சூட்கேஸை அறைந்து சாத்தி லாக் செய்த ஸ்ரீராம் கல்யாணியின் கன்னத்தை மெள்ளத் தட்டினான். “அப்படீன்னா நான் தைரியமா பெங்களூர் போகலாம்?” கல்யாணி சிரித்தாள். “தாராளமா...” “சரி. எனக்கு விபூதி வெச்சு விடு...” கல்யாணி பக்கத்தில் இருந்த பூஜையறைக்குப் போய் விபூதி பொட்டலத்தைக் கொண்டு வந்து ஆட்காட்டி விரலில் தொட்டு நெற்றிக்கு இட்டாள். “என்னைப் பத்தி கவலைப்படாமே போய்ட்டு வாங்க. வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க...” “ம்.. ம்...” ஸ்ரீராம் சூட்கேஸை எடுத்துக் கொண்டான். “ஸ்ட்ரீட் கார்னர்க்குப் போய் ஆட்டோ பிடிச்சு போயிடறேன்...” கல்யாணியின் கன்னத்தை மறுபடியும் மெள்ள தட்டிவிட்டு மாமியிடம் சொல்லிக் கொண்டு வாசற்படி இறங்கினான்.