கதவை தள்ளிக் கொண்டு உள்ளே போனாள். வெளி நாட்டு வியாபார இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டு - சாய்ந்து உட்கார்ந்திருந்த ராமபத்ரன், அற்புதாவைப் பார்த்ததும் புன்னகைத்தார். ஐம்பத்தைந்து வயதுக்குரிய உடம்பு. கண்ணாடி அணிந்த கோதுமை நிற முகம். நேர் கோடு எடுக்கப்பட்ட நரை கிராப். உடம்பைக் கச்சிதமாய் கவ்வியிருந்த காலர் இல்லாத கோட். “வாம்மா...” இதமான குரலில் சொல்லி - தனக்கு முன்பாய் இருந்த நாற்காலியைக் காட்டினார். அற்புதா அதில் தயக்கமாய் உட்கார்ந்தாள். “என்னம்மா... என்னைப் பார்க்கணும்ன்னு... மானேஜர்கிட்டே சொன்னியாமே...?” “ஆமா... ஸார்...” “என்ன விஷயம்...?” “எனக்கு வர்ற மாசம் பதினோராம் தேதி கல்யாணம் நிச்சயமாயிருக்கு ஸார்...” “அடேடே...!” ஆர்ப்பாட்டமாய் மலர்ந்தார்.