பார்த்திபன் அவளின் வார்த்தைகளில் அசுவாரஸ்யம் அற்றுப்போய்க் கேட்டதும் - முதல் முறையாக கீதாவின் முகம் கருமை தட்டியது. சற்று நேரத்தில் சம்பத் கிளம்பிப் போனான். வாசல் வரை போய் அவனை வழியனுப்பிய கீதா திரும்பி வந்து சஞ்சலத்தோடு பார்த்திபனை ஏறிட்டாள். அவளைக் கவனிக்காததனமாய் ரேடியோ முள்ளைத் திருப்புவதில் மும்முரமாக இருந்தான். ‘‘இன்னிக்கென்னவாம்... முசுமுசுன்னு இருக்கீங்க...?” பார்த்திபன் நிமிர்ந்தான். கீதாவின் முகத்தில் அப்பழுக்கான சாயலை - அதன் ரேகையைக் கூடப் பார்க்க முடியவில்லை. இவளைப் போய்... சந்தேகப் பட்டதே என் முட்டாள் மனசு... மவுனமாய் அவளை சமீபித்து - ஆதரவாக அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தான். மறுநாள்— அதற்கடுத்த நாள் – சம்பத் வரவில்லை.