ராஜகுரு சிந்துவின் கையை சில விநாடி நேரத்துக்கு உற்றுப் பார்த்துவிட்டு பிறகு வாயைத் திறந்தான். “ஸார்...! மேடத்துக்கு உடம்பு வியர்க்காத வேலை. அடிக்கடி கடல் கடந்து போக வேண்டியிருக்கும். இந்த வேளையில் நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கும். கோபப்படக்கூடாத வேலை...” ஜெயக்குமாரும் சிந்துவும் திகைப்போடு ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள். “அட... பரவாயில்லையே...” “நான் சொன்னது சரியா ஸார்?” “ரொம்ப சரி... மேற்கொண்டு மேடத்தைப் பத்தி சொல்லு பார்க்கலாம்...” ராஜகுரு சிந்துவின் கையை மேலும் சில விநாடிகளுக்கு உற்றுப் பார்த்துவிட்டு மெல்லிய குரலில் தொடர்ந்தான். “ஸார்... மேடம் இன்னும் ரெண்டு வருஷ காலத்துக்கு ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய நேரமிது.