கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட அரசர்கள், அரசியர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், அரசவைப் புலவர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட 100 பேரின் மிகச்சிறந்த பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா தெய்க்கா என்பவர் கி.பி. 1235 百人一首 (Hyaku nin isshu Verses from Hundred people) என்ற பெயரில் பதிப்பித்தார். நம் சங்க இலக்கியங்களில் அகத்திணை புறத்திணை என வகுத்திருப்பதுபோல் அல்லாமல் ஜப்பானிய இலக்கியங்களில் எல்லா இலக்கியங்களிலும் வீரம் தவிர்த்துக் காதல், இயற்கை வர்ணனைகள், வாழ்வியல் சிக்கல்கள் ஆகியவற்றைப் பொதுவான கருக்களாகக் கொண்டு செய்யுள்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. தான்கா என்னும் ஐந்தடிச் செய்யுள்களாக அமைந்துள்ள இவற்றின் தமிழ்வடிவம் வெண்பாவாக இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஆசிரியர் குறிப்பும் அருஞ்சொற்பொருளுடன் கூடிய விளக்கவுரையும் இந்த ஜப்பானிய இலக்கியத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
சப்பானிய இலக்கியத்தில் சிறப்பான 100 ஐந்தடித் தான்கா வகைக் குறும்பாடல்களைத் தமிழில் நான்கடி வெண்பாக்களாக மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் கமலக்கண்ணன். கூடவே மூலப்பாடலை இயற்றியவரின் காலம், அவரது வாழ்க்கைக்குறிப்பு, பாடலை இயற்றிய சூழல், பாடலை நாம் புரிந்து கொள்வதற்குத் தேவையான திணை, பொழுது முதலான செய்திகளையும் தந்திருக்கிறார். தமிழுக்கும் நிகோங்கோ எனும் சப்பானிய மொழிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அத்துடன், நமது சங்க இலக்கிய மரபைப் போலவே காலத்தைக் குறிக்கும் கிகோ (季語) எனும் குறிச்சொற்களும் பழைய நிகோங்கோ இலக்கியத்தில் உள்ளன. சில உருவகங்களும் விரவியுள்ளன. கடுந்துயரைக் காட்டுவதற்கு (அழுது அழுது) சட்டையின் கைப்பகுதி நனைவதாகக் காட்டுவது நிகோங்கோ இலக்கியத்துக்கே உள்ள தனியான உருவகம் என நூலின்வழி அறிந்தேன். அன்மையில் வந்த சப்பானிய திரைத்தொடரில் கூட அதேபோன்ற காட்சி வந்ததைக் கண்டு வியந்தேன்.
இவற்றையெல்லாம் தமிழ் வாசகர்களாகிய நமக்குக் கடத்தத்தக்க அளவுக்கு இருபுல அறிவும், நேரடி சப்பான்வாழ் துய்ப்பும் பெற்ற வெகுசிலரில் நண்பர் கமலும் ஒருவர். அவர் இந்த நூலுக்காக நான்காண்டுகாலம் உழைத்திருக்கிறார். அவரிடம் 'நூல் எப்பொழுது வருகிறது' என நான் பார்க்கும்போதெல்லாம் ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். வெளிவந்ததும் உடனே வாங்கி விட்டேன். படிக்கப் படிக்க அந்நாள் சப்பானை நம் கண்முன் நிறுத்துவதாக இருந்தது. அதிலும் நிகோங்கோ மூல உரையையும் படிப்பதற்கு வசதியாக இறகனா எழுத்துப்பெயர்ப்பும் உள்ளதால் நிகோங்கோ மொழி கற்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
அண்மையில் வெளிவரும் பல நூல்களில் எழுத்துப்பிழைகளும் இலக்கணப்பிழைகளும் மலிந்துள்ளதைக் கண்டு எரிச்சலுற்றிருக்கிறேன். ஆனால் பலவின்பால், ஒரு/ஓர் உட்பட பொதுவாகக் காணும் பிழைகள் எதுவுமில்லாமல் வந்துள்ளது மிகச்சிறப்பு. ஒரே ஒரு திருத்தம் செய்தால் நன்று. நிகோங்கோவில் டகரம் இல்லை, தகரம் மட்டுமே என்பதை ஆசிரியர் அறிந்திருந்தாலும் ஆங்கில எழுத்தில் t என வருவதைத் தமிழில் டகரமாகப் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். அவற்றைத் தகரமாக மாற்றிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.