முல்லை முத்தையா (ஜூன் 7, 1920 - பிப்ரவரி 9, 2000) தமிழ்ப் பதிப்பாளர். முல்லை பதிப்பகம் நடத்தியவர். பாரதிதாசனுக்கு அணுக்கமானவர், அவருடைய நூல்களை வெளியிட்டவர். எழுத்தாளர்.
முல்லை முத்தையா இளமையிலேயே பாரதிதாசன் மீது தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். பாரதிதாசன் நூல்களை பதிப்பிக்கவேண்டும் என்னும் விருப்பமே அவரை பதிப்புத்துறையில் இறங்கச் செய்தது. அவர் பதிப்புத்துறையில் இறங்கும்போது மர்ரேராஜம் கம்பெனி, அல்லையன்ஸ் கம்பெனி, கலைமகள் காரியாலயம், திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவை செயல்பட்டுக்கொண்டிருந்தன. நகரத்தார்களில் சக்தி பதிப்பகம் கோவிந்தன், தமிழ்ப்பண்ணை நடத்திய சின்ன அண்ணாமலை ஆகியோர் முன்னணியில் இருந்தனர். முல்லை முத்தையா அவர்களில் ஒருவராக இணைந்தார்.
முத்தையா தினமணி, பாரததேவி முதலிய இதழ்களில் உதவியாசிரியராகப் பணியாற்றிய கே.அருணாசலம் என்பவருடன் இணைந்து கமலா பிரசுராலயம் என்னும் நிறுவனத்தை தொடங்கினார். ஜவகர்லால் நேருவின் மனைவி கமலா நேரு நினைவால் அப்படி பெயர்சூட்டப்பட்டது. பின்னர் முல்லை பதிப்பகத்தை தன் பொறுப்பில் தொடங்கினார். முல்லைப் பதிப்பகம் முதல் வெளியீடு பாரதிதாசனின் அழகின் சிரிப்பு. தொடந்து தமிழியக்கம், அழகின் சிரிப்பு ஆகிய பாரதிதாசனின் நூல்களையும் அவர் வெளியிட்டார். பாரதிதாசன் முல்லை பதிப்பகத்தின் முகப்பு எழுத்தாளராகத் திகழ்ந்தார்.
தி.ஜ.ரங்கநாதன், டி.எஸ்.சொக்கலிங்கம், வல்லிக்கண்ணன், சக்கரவர்த்தி ராஜகோபாலாசாரியார், கோவை அய்யாமுத்து, க.அன்பழகன், க.இராசாராம், எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோரின் முதல் நூல்கள் முல்லை பதிப்பக வெளியீடாகவே வந்தன.
பாரதிதாசனுக்காகவே முல்லை என்னும் இதழை தொடங்கி நடத்தினார். அதில் தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகப் பணியாற்றினார். பதிப்புரிமைத் தொகையாக பாண்டிசேரியில் பெருமாள்கோயில் தெருவில் பாரதிதாசன் வாழ்ந்த வீட்டை ரூ 4000 செலவில் விலைக்கு வாங்கி பாரதிதாசனுக்கு அளித்தார். அது பின்னர் பாரதிதாசனின் நினைவில்லமாக ஆகியது.
முல்லை முத்தையா நகரசபை என்னும் இதழையும் நடத்தினார். தன் பதிப்பகத்துக்காக முல்லை முத்தையா சிறு நூல்களை எழுதி வெளியிட்டார். உலக இலக்கியங்களை எளிய முறையில் அறிமுகம் செய்யும் நூல்களையும், உலகசிந்தனையாளர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் சுருக்கமான நூல்களாக எழுதினார். பாரதிதாசனின் கவிதைகள், கட்டுரைகளை நூல்களாகத் தொகுக்கும் தொகுப்பாசிரியராகவும் திகழ்ந்தார்.