Jump to ratings and reviews
Rate this book

சினிமாவும் நானும் [Cinemavum Naanum]

Rate this book

368 pages, Paperback

Published January 1, 2011

5 people are currently reading
72 people want to read

About the author

Mahendran

3 books4 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (23%)
4 stars
10 (33%)
3 stars
8 (26%)
2 stars
3 (10%)
1 star
2 (6%)
Displaying 1 - 3 of 3 reviews
August 24, 2021
நான் முதன் முதலில் பள்ளிக்கூட பாட புத்தகத்திலிருந்தும் வார இதழ் களிலிருந்தும் விலகி தேடி போய் வாங்கிய புத்தகம் இசையமைப்பாளர் A.R.ரகுமான் பற்றிய ஒரு புத்தகம். காரணம் சிறு வயதில் இருந்து சினிமாவின் மேல் உள்ள தீராக் காதல்.
அந்த புத்தகங்களை வாசித்து பின் மெதுவாகத்தான் மற்ற இலக்கிய வடிவங்களாக விளங்கிய சிறுகதை தொகுப்பு, நாவல், குறு நாவல், சமூகம் மற்றும் இயற்கைச் சார்ந்த புத்தகங்களை வாங்கியது.

இப்படி இருக்க தமிழ் திரைப்பட இயக்குநர்கள் எழுதிய நூல்கள் பல இருந்து நான் தேர்ந்தெடுத்தது மகேந்திரன் அவர்கள் எழுதிய இந்த புத்தகம் தான்.

முதல் பாதி இவரது பால்ய காலம், தாழ்வு மனப்பான்மையால் புத்தகங்களை தேடி வாசித்தது, திரைத்துறையில் இவரது எதிர்பாரா பிரவேசம், பத்திரிக்கை துறையில் சோ அவர்களுடன் பணியாற்றியது, நாடகப் பணி என்று சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்று என்றாலும்.

என்னை மிக கவர்ந்தது இந்த புத்தகத்தில் இரண்டாம் பாதியில் திரைப்பட இயக்குநராக இவர் பகிர்ந்து உள்ள அனுபவங்கள் தான்.

இந்த புத்தகம் திரைப்பட ரசிகர்களுக்கும் சரி திரைத் துறையில் ஆர்வம் உள்ள அல்ல வரப்போகும் கலைஞர்களுக்கும் மேம்பட்ட ரசனையை ஊற்றுக்கண்ணாக கொண்டு படைக்கும் படைப்புகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்று தன் அனுபவங்களை உள்ளது உள்ளது படியே பகிர்ந்து உள்ளார்.

இவர் மேதகு பிரபாகரன் அவர்களை சந்தித்து கிளிநொச்சியில் உள்ள மாணவர்களுக்கு திரைப்பட பயிற்சி தந்தது இது வரை நான் அறியாதது. அதைப் பற்றி பெரிதாக எங்கும் இவர் தம்பட்டம் அடித்து கொள்ளவில்லை.

ஒரு இலக்கியம் இன்னொரு இலக்கியத்தை நோக்கி நம்மை நகர்த்தும், இந்த புத்தகத்தை பொறுத்தவரை இன்னொரு புத்தகத்தை மட்டும் அல்ல, பல காணாத திரைப்படங்களையும் அறிமுகப் படுத்தியுள்ளார்.

இவரும் ரஜினியும் ரசித்த எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதிய வரலாற்றுப் புதினங்களை நானும் ரசித்துள்ளேன் என்பதில் எனக்கு பெருமிதம்.

பல ஆளுமைகளை பற்றி இவர் இந்த புத்தகத்தில் அத்தியாயங்களாக நமக்கு விட்டு சென்றது ஒரு விருந்துதான்.

அதீத ஆர்வம் காரணமாக இந்த புத்தகத்தை நினைத்ததை விட மிக விரைவாகவே வாசிததில் எனக்கு மகிழ்ச்சி. இதன் நீட்சியாக இவர் பரிந்துரைத்த மற்ற புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களை குறித்து வைத்திருக்கிறேன்.

சாசனம் திரைப்படம் எனது திரைப்பட பெட்டகத்தில் சில வருடங்களாக உள்ளது. அதையும் காண இந்த புத்தகம் தூண்டியது.

இலக்கியங்களை சிறிது தாமதமாக வாசித்தாலும் உலக திரைப்படங்களை 16 வருடங்களாக எனது தமயன் மூலம் கண்டது என் ரசனையை மேம்படுத்தி உள்ளது என்று அசரீரியாக மகேந்திரன் அவர்கள் சொல்லும் போது ஒரு இனம் புரியாத பெருமிதம் கலந்த மகிழ்ச்சி எனக்குள் வந்து போனது.
Profile Image for Mayuran Senthurselvan.
22 reviews3 followers
January 7, 2022
Shares a lot about his cinema experience. He focuses on his failed opportunities and the coincidence that keep him alive in "his kind of cinema". Strictly advises not to follow his footsteps. Further, he recommends some books and advises as well.

இயக்குனர் மகேந்திரன் என்பவர் சினிமாவை வணிக நோக்கின்றி திரைக்காவியமாக காலம் காலமாக தீட்ட முனைந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு இன்றுமே பிடித்த படமாக இருக்கும் “முள்ளும் மலரும்” படத்தை கொடுத்த இயக்குனர். எம்.ஜீ.ஆர் அவர்களால் திரையுலகிற்கு இழுத்துவரப்பட்டு, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதையை ஒரே மூச்சாக எழுதி முடித்தவர். இப்படி அவரின் வாழ்க்கை சாகசங்களை தனக்கு நிகழ்ந்த தற்செயல்களாக “சினிமாவும் நானும்” என்ற புத்தகம் மூலமாக எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறார். அது மட்டுமல்ல, சினிமாவின் உன்னதத்தையும் அதில் தான் தவற விட்ட பல விடயங்களையும் காலம் கடந்த பட்டறிவு கல்வியறிவு மூலம் சொல்கின்றார். தான் கடந்து வந்த பாதையை யாரும் பின்பற்ற வேண்டாம் என்பதுடன் மட்டுமன்றி, எப்படியான பாதைகளை பின்பற்ற வேண்டும் என சொல்லாமல் சொல்லி செல்கின்றார். அதை விட திரை உலகத்தை கட்டி ஆண்ட பிரபலங்களுடன் தனக்குண்டான பழக்கத்தையும் அவர்களின் சிறப்பையும் காட்டி நிற்கின்றார்.

சினிமா என்பது ரசிகனுக்காக ரசிகனே உருவாக்குவது, ஆகவே ரசிகனை தயாரிப்பாளர்கள் குறைசொல்வது ஆகாது என்றும். தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் மட்டும் படங்கள் அல்ல, வேற்று மொழி சினிமாக்களின் அறிவும் நம்மை உலக அளவில் நிலை நிறுத்த தேவை என்பதும் அவரின் வாதங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நமது சினிமா நமது பண்பாட்டு கலாசாரங்களை வெளிக்காட்டி நிற்கவேண்டும் என்ற அவர் ஒரு பிற்போக்குவாதி அல்ல. புதுமைகளை சேர்த்து தான் ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை அவர் மறுக்கவில்லை. அதற்காக யதார்த்தத்துக்கு எதிரான படங்களின் வருகை குறைந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்.

இலங்கையின் கிளிநொச்சிக்கு வந்து திரைப்பட மாணவர்களுக்கு பாடங்கள் எடுத்தது தலைவரை சந்தித்தது போன்ற விடயங்களையும் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது இறுதி திரைப்படமான “சாசனம்” வெளியாவதற்கு பட்ட வேதனை கொடுமையானது. தான் குறைப்பிரசவத்தில் பிறந்து இறந்திருக்க வேண்டியது தொடங்கி தன்னை மனைவி எப்படி சினிமாவின் வறுமையின் பிடியில் தாங்கி குடும்பத்தை நடத்தி சென்றால் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அனைத்தும் கட்டுரை வடிவில் ஒரு நேர் கோட்டில் இல்லாமல் இருந்தாலும் இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும் தருணத்தில் இயக்குனர் மகேந்திரனின் வரலாறும் இன்றைய தமிழ் சினிமாவின் தேவையையும் எளிமையாக புரிந்து கொள்ளமுடிகிறது.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Prem.
77 reviews51 followers
April 30, 2017
எப்படி இந்தியத் திரையுலக்கிற்கு "பதேர் பாஞ்சாலியோ", அப்படித் தமிழ் திரையுலகிற்கு "உதிரிப் பூக்கள்". அத்திரைப்படத்தைப் படைத்தவர் மகேந்திரன் எனப்படும் அலெக்ஸ்சாண்டர் (இயற்பெயர்). பத்திரிக்கையாளராகத் தொடங்கி, திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி பின் திரைக்கதையாசிரியராகி அங்கிருந்து இயக்குனராக முன்னேறி முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப் பூக்கள், ஜானி என்ற மறுக்கவியலாத திரைப்படங்களைத் தந்தவர். தனக்கும் திரையுலகிற்கும் உள்ள உறவை அவருக்கே உரித்தான மொழி நடையுடன் கட்டுரைகளாக எழுதியுள்ளார். திரையுலகத்திற்கு அவரது அறிமுகம், திரைப்படங்கள் பற்றிய அவரது பார்வை எப்படி விரிவடைந்தது என்று தெளிந்த நீரோடையாக விவரிக்கிறார். மக்கள் திலகம் திரு. எம்.ஜி.ராமச்சந்திரனுடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார். கல்லூரி காலத்தில் ஏற்பட்ட அந்தத் தொடர்பே அவரை பின்னாளில் கலைத்துறைக்குள் உள்ளிழுத்தது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசனுடன் அவர் சேர்ந்து பணியாற்றிய தங்கப்பதக்கம் நாடகம், திரைப்படம் மற்றும் அவருடனான பழக்கம் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. ஒரு சிகரெட் எப்படி இவரையும் ரஜினியையும் இணைத்தது, அதன் மூலம் முள்ளும் மலரும், ஜானி என்ற படங்கள் உருவானதுடன் ரஜினி என்ற சாகாப்தம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்தார் என்றால் அது மிகையல��ல ."செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்" என்ற காலத்தால் அழியாத பாடல் படமாக்கப்பட கேமரா, பிலிம் ரோல் ஆகியவற்றிற்கு செலவு செய்தது திரை ஆர்வலர் கமல் ஹாசன் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியுமோ. இவர்கள் இருவருக்கும் இருந்த நல்ல நட்பு, நல்ல திரைப்படங்கள் மீது இருந்த காதல் ஆகியவைற்றையும் பதிவு செய்துள்ளார்.

சிறு வயதில் தாழ்வு மனப்பான்மையால் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த அவருக்கு அந்தப் பழக்கத்தால் கிடைத்தப் பலன்களை அதார்த்தமான் வர் திரைப்படங்களே சொல்லும். முள்ளும் பலரும், உதிரிப் பூக்கள் இரண்டுமே இலக்கியத்தில் இருந்து தழுவப்பட்டதே. யதார்த்தமான கதைக்களன், பெண்களை முன்னிலைப்படுத்திய கதைகள், தேவை இல்லாத சண்டைக்காட்சிகள், டூயட் காட்சிகள் இல்லாத நடைமுறைக்கு ஒத்த திரை மொழி எனத் தமிழ் மொழி முன்பறியாத பல விடயங்களை பயன்படுத்தி இருக்கிறார். அதற்கான தனது காரணங்களை எழுதிச் செல்கிறார். திரையுலகம் பற்றிய தனது புரிதல், உலக சினிமா பற்றிய அனுபவம், திரைக்கதை இலக்கணம் பற்றி அவர் கற்ற பாடங்கள், அவரை சிரிக்க/சிந்திக்க வைத்த நகைச்சுவை நடிகர்கள், இலக்கியங்கள்/நாவல்களைப் படமாக்குவது எப்படி, சத்தியஜித் ரே, விட்டோரிய டி சிக்கா (பைசைக்கிள் தீவ்ஸ் திரைப்பட இயக்குனர்), மிருனாள் சென் போன்ற ஆளுமைகள் என்று பல கட்டுரைகள் இப்புத்தகத்தில் உள்ளன. நடிகை பானுமதியுடனான அவரது நீண்டு கலந்துரையாடலில் பேசப்பட்டக் கருத்துக்கள் இக்காலத்திற்கும் பொருந்துவது நமது திரைத்துறையின் சாபமே. அவரது திரைப்படங்கள் உருவானது எப்படி என்று தனித்தனி அத்தியாயங்களில் எழுதி உள்ளார். ஒரு அபூர்வ சந்திப்பு என்ற கட்டுரையில் விடுதலைப் புலிகள் முன்னாள் தலைவர் திரு. வேலு பிரபாகரனை அவர் சந்தித்த நிகழ்வை நெகிழ வைக்கும் விதத்தில் எழுதியுள்ளார். தமிழ்/உலக/நல்ல திரைப்படங்களில் ஆர்வம் உள்ள எவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

மகேந்திரன் பற்றி கவிஞர் வாலி "பட்டத்து ராணியின் பவனி" நூலில் எழுதிய கவிதை

உமாசந்திரனை - உயிர்ப்பித்தான்;
புதுமைப்பித்தனைப் - புதுப்பித்தான்;
சிவசங்கரியை - சிறப்பித்தான்;
சுருங்கச் சொன்னால்..
செத்த சினிமாவை - பிராணவாயு செலுத்தி - மீண்டும் பிறப்பித்தான்!

பார்த்தேன் பலமுறை..
மகேந்திரனின் 'முள்ளும் மலரும்';
புரிந்தது - மகேந்திரன் தொட்டால்
முள்ளும் மலரும்!

பார்த்தேன் பலமுறை..
மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்';
அன்றுமுதல் - எனக்கு மற்றப் பூக்களெல்லாம்
எதிரிப் பூக்கள்!

என் விழிவாயால்
உண்டு - நான் ரசித்தது - மகேந்திரனின் 'நண்டு';
என் மனவிரலில்
மாட்டி - நான் மகிழ்ந்தது - மகேந்திரனின் 'மெட்டி'!

நம்மவர் சினிமாவை
நையாண்டி செய்தோர்
வாய்களைப் - பூட்டிய பூட்டுக்கள் - மகேந்திரனின் 'பூட்டாத பூட்டுக்கள்'!

மகேந்திரனிடம் மக்கள்
சொன்னார்களா என்ன..

நல்ல படங்கள் தந்து - எங்கள்
'நெஞ்சத்தைக் கிள்ளாதே'! என்று?
பின் ஏன் பிடரி சிலிர்க்க
எழுந்து - கண்கள் கனலுமிழச் சிங்கம் கர்ச்சிக்காதிருக்கிறது இன்று?

எழுவதும்; விழுவதும்; கதிருக்கும் உண்டு;
கர்மயோகி கவல்வானா இது கண்டு?

மகேந்திரனே!
மறுபடி ஏழு;
காகித வயலைக்
கைப்பேனா ஏரால் உழு;
விளையும் விழுமிய - சொல் - எனும் நெல்;
அதனை - ஏந்தி எங்கணும் செல் ;
சொல்லும் செயலும்
புல்லும் பொழுது -
வெல்லும் வெல்லும்
வெல்லும் எனச் சொல்!

சிலுவை சுமந்தது - மானுடம் கண் மலர
மரியாள் மகன் கழுத்து;

செலவைச் சுமந்தது - மானுடராசனை மேம்பட -
மகேந்திரனின் எழுத்து;

இத்தகு இரக்கமுடையோர் - கழுத்தை எழுத்தைக்
காலமே! நீ வழுத்து!
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.