அற்பத்தனமான கண்கட்டு மாயங்களைச் செய்து மக்களை மயக்கும் செப்படி வித்தைக்காரர்கள் அல்லர் சித்தர்கள், அவர்கள் வாழ்வின் உன்னதத்தை அடைந்தவர்கள். முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். எல்லா எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள். சஞ்சலமற்ற தூய தவவலிமையின் காரணமாக தெய்வநிலையை அடைந்துவிடும் மகான்களான சித்தர்கள் தங்களது அற்புத சக்திகளை துன்பப்படும் மாந்தர்களின் துயரங்களைப் போக்குவதற்கே பயன்படுத்தியுள்ளனர் என்பதை நூலாசிரியர் எஸ். சந்திரசேகர் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லியுள்ளார். யோகம், மருத்துவம், வர்மம், மந்திரம், வான சாஸ்திரம், ரசவாதம் உள்ளிட்ட எல்லா ஆயக்கலைகளையும் அறிந்த சித்தர்கள் பலர் இருந்தும் இந்த நாலில் சித்தர் போகரின் வாழ்க்கையை மட்டும் விரிவாகவும், நுட்பமான சங்கதிகளையும் எளிய நடையில் எல்லாத்தரப்பட்ட வாசகர்களுக்கும் பயன்தரும் வகையில் ஆசிரியர் விவரித்திருப்பது பாராட்டுக்குரியது. பதிணென் சித்தர்களில் ஒருவரான போகர் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமூலரை தன் பாட்டனாராகவும், காலாங்கி சித்தரை தன் தந்தையின் ஸ்தானத்திலும் வைத்து, அவர்கள் பாதம் பணிவதாக தன்னுடைய போகர் 7000 என்ற நூலில் விவரித்து உள்ளார். போகர் தன் குரு காலாங்கி சித்தர் கட்டளைப்படி, சீன தேசம் சென்று, தனது பரகாய பிரவேச சித்து மூலம் சீன முதியவர் ஒருவர் உடலில் புகுந்து, சீன மக்களுக்கு பல போதனைகளும் புரிந்தார் என்றும் லாவோட்சி என்ற சீன ஞானி அவரே என்றும் பின்பு கிமு. 400ம் ஆண்டு வாக்கில் சீனாவைக் கடந்து இமயமலை வழியாக இந்தியா வந்து தன் சீன அனுபவத்தை சப்த காண்டமாக எழுதினார் என்றும், அது தன் சீடர் புலிப்பாணிக்காக போகர் இயற்றிய நூல் என்றும் நூலாசிரியர் விவரிக்கிறார். மற்றும் போகரின் ஜால வித்தைகள், ரசவாத வித்தைகள், பலவித கற்பங்கள் தயாரிக்கும் முறைகள், அவற்றின் பயன்கள் என்று ஆசிரியர் விவரிக்கும்போது, படு பிரமிப்பாக இருக்கிறது. -மயிலை சிவா