கண்மணி காட்டும் பின்நவீன உலகம் 'இளமை' என்னும் கருத்தாக்கத்தின் பொருளை விரிவுபடுத்துகிறது. இளமைக்கும் வயதுக்குமான இறுக்கமான பிணைப்பை தளர்த்திவிடுகிறது. கண்மணியின் பெண்கள் ஆச்சரியப்படும் மனநிலையைத் தக்கவைத்துக்கொள்ளத் தவிப்பவர்கள். அதை இழப்பதைப் பிடிவாதமாக அஞ்சுகிறவர்கள். அவர்களுக்கு இளமை புதிய சவால்களை எதிர்கொள்ள ஆயுதமாக வேண்டியிருக்கிறது. 'வீனஸ்' அவர்களுக்கு வெறும் அழகு நிலையமல்ல, அது ஒரு போர்ப்பயிற்சிப் பட்டறை! அதன் கண்டிப்பான விதிகளும், அமைவு நேர்த்தியும், தொழில்நுட்பமும் மிகத் தீவிரமான இருத்தலியல் அச்சத்தையும் துயரத்தையும் அடிக்குரலாகக் கொண்டவை. இந்தத் தீவிரம் 'வீனஸ்'ல் பிரமாதமாக, கையெழுத்திடும் அலட்சியத்துடன் மொழிப்பட்டிருக்கிறது. இளமை என்னும் ஆபத்தான கனவின் அழகியலாக்கத்தில் தன் நிபுணத்துவத்தை கண்மணி தன் இரண்டாவது நாவலிலும், ஒப்பிட முடியாத தனித்துவத்துடன் நிரூபித்திருக்கிறார். - பா. வெங்கடேசன்
அழகு நிலையம் நடத்தும் ரஞ்சனி அங்கு வேலைக்கு வரும் பெண், அழகுப்படுத்திக் கொள்ள வரும் பெண் என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு பெண்கள். பெண்கள் சார்ந்த புத்தகமோ என்று யோசிக்கும் பொழுது கடைசி இரண்டு அத்தியாயம் என் கோணத்தை மாற்றியது.
ரஞ்சனி தனது மகளுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள் ஆனால் மகளுக்கோ அம்மாவை விட்டு தூரம் செல்ல வேண்டும் என்பதே ஆசை. அவள் ஆசை என்பதற்காகவும் அவள் கனவை அவள் சுமந்தால் சுமை தெரியாது என்பதற்காகவும். மகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கிறாள்.
அதன் பின் அவள் வாழ்வில் அம்மாவாக இருக்கும் இடம் வெறுமையாகிறது. ரஞ்சனிக்கு அச்சுழலில் வீனஸ் "அவளின் அழகு நிலையத்தின் பெயர்" அவளுக்கு இன்னொரு அடையாளத்தை கொடுத்தது.
பெண்கள் தன் குழந்தையே என் அடையாளம் என்று வாழும் கட்டத்தில் கடைசி வரை நாம் குழந்தைகளுடனே தான் சென்று கொண்டு இருக்க வேண்டும் தம் அடையாளத்தை தக்க வைத்துக்கொள்ள. சில ஆளுமைகளையும் குழந்தைகள் (வளர்ந்த குழந்தைகள்) மேல் காட்டிக்கொண்டே தான் இருக்க வேண்டும்.
நல்ல வேளையாக ரஞ்சனிக்கு வீனஸ் ஒரு முட்டுக் கொடுக்கும் அடையாளமாக அமைந்தது. இதுபோல் வேறு வேறு சூழ்நிலையில் இருக்கும் பெண்கள் நிஷா, சந்தியா, திலோத்தமா என்று போய்க்கொண்டே இருக்கும் பொழுது அழகுப்படுத்தலும், உடலை மெருகூட்டுவது பெண்களுக்கானது என்று gender bias செய்யாதது போல். பிரித்வி என்ற கதாபாத்திரம் வந்ததே எனக்கு இப்ப புத்தகத்தில் மிகவும் பிடித்த இடம்.