A compilation of Essays on Tamil literature.Poet Subramania Bharathi's works are reviewed with a historical perspective.Contemporary authors are also reviewed.
பாரதியை ஒரு கவிஞனாக மட்டுமே அறிந்து,அவரது சில வரிகளை மேற்கோளாக மட்டுமே பயன்படுத்திவரும் ஒரு தலைமுறை, அவரது எல்லாப் பரிமாணங்களையும் அறிந்து கொள்ளும்போது வளைந்து போன வரலாறு நிமிர்வு கொள்ளலாம். அதை நோக்கி அடுத்த தலைமுறையை இட்டுச் செல்வதற்கான அணில் முயற்சி இது
என் வயதொத்த நண்பர்களும், அலுவலக நண்பர்களும் அடிக்கடி என்னிடம் கேட்பது "ராஜி...எந்த புக்ல ஆரம்பிக்கலாம்?" என்பது. நான் என்னமோ பெரிய "அம்மா"ட்டக்கர் என்ற நினைப்பில் என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தால் பாதகத்தில் முடியும். சில வருடங்களுக்கு முன்னால் எனக்கும் இந்தக் கேள்விகள் இருந்தன. 'தொடர்ந்து என்னால் படிக்கவே முடியாது, தூக்கம் வரும்' என்று சொல்லும் நண்பர்களுக்குப் 'பொன்னியின் செல்வன்'-ஐப் பரிந்துரைத்திருக்கேன். 'என்னவாது செய்யணும் மச்சி" எனும் நண்பர்களுக்குப் பாரதியைக் கை காட்டியிருக்கிறேன். 'இளைஞர்களுக்கு என்ன தெரியும்' எனும் நண்பர்களுக்கு மாலன் சிறுகதைகளைப் பரிசளித்திருக்கிறேன். 'பாசிட்டிவ் தாட்ஸ்' என்பவர்களுக்கு உதயமூர்த்தி பற்றிச் சொல்லியிருக்கிறேன். 'இதுல என்ன கிடைக்குதுன்னு இதைக் கட்டி அழற? அப்டி என்ன தான் இருக்கு இதுல?' என்ற கேள்விகளை மட்டும் மௌனத்தால் கடந்திருக்கிறேன். இனி அந்த மௌனம் தேவையற்றது. அப்படிக் கேட்பவர்களுக்கு இனி 'கயல் பருகிய கடல்"-ஐ வாங்கித் தரலாம் என்றிருக்கிறேன்.
மாலன் எழுதிய இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சிறுகதைகள் எங்கிருந்து ஆரம்பித்தன, அதன் வேர்கள் எவை, அதன் கிளைகள் எப்படிப்பட்டவை என்பவை குறித்த தெளிவான புரிதலைத் தருகின்றன பல கட்டுரைகள். மணிக்கொடி எழுத்தாளர்கள் முதல் தற்கால எழுத்தாளர்கள் வரை, குரோதங்கள் இல்லாமல், 'இது இப்படித் தான் இருந்தது' என்னும் அவர் கட்டுரைகளின் நேர்மை என்னை வியக்க வைக்கிறது.
தமிழ் இலக்கியம் என்பது தமிழகத்தில் மட்டும் எழுதப்படுவதல்ல என்று அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வந்திருக்கிறார். Diaspora Literature-ல் மாலன் தலைகீழாகத் தண்ணி குடித்தவர் என்பது அவர் கட்டுரைகளான 'கயல் பருகிய கடல்', 'புதிய போக்குகள், புதிய பாதைகள்', 'அடையாளங்களுக்கு அப்பால்' போன்றவை பறை சாற்றுகின்றன.
விமர்சனங்களின் போது, க.நா.சு வின் ஆவி ஞானக்கூத்தனில் சில நேரம் புகுந்து கொள்வதுண்டு என்று ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அது போல, பாரதியின் ஆவி பல நேரங்களில் மாலனில் புகுந்து நம்மை (நல்வழி)ப் படுத்துகிறது. எங்கெங்கு நோக்கினும் பாரதி. அது இந்தக் காலத்திற்கு அவசியமும் கூட. பாடத்திட்டத்திலும் போட்டிகளிலும் மட்டும் பாரதியுடன் பழக்கப்பட்ட இளைய தலைமுறைக்கு அவர் 'அதுக்கும் மேல' என்று புரிய வைக்கும் மிகச் சிலரில் மாலன் முன்னவர். அலுவலகத்தில் என்னுடைய கணினியின் மீது பாரதி படமொன்று வைத்திருப்பேன். எனெர்ஜி க்ரியேட்டராக எனக்கு அவர் இருக்கும் காரணத்தால் அப்படி. அதைப் பார்க்கும் பெரும்பாலானோர்கள் என்னிடம் "பாரதியார்?" என்ற கேள்விக்குறியோடுடனே அணுகினார்கள். அவர்களுக்குப் பாரதி என்பவன் பழைய ஆள். அந்தப் பழைய ஆள் செய்த புதுமைகள் - நிலைத்து நிற்கும் புதுமைகள் - அவர்கள் அறியாதது. பாரதியைப் புரிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பினை இந்த நூல் வழங்குகிறது.
பாரதி இந்து மதத்தைப் பின்பற்றியவன். மத மாற்றங்களை விரும்பாதவன். ஆனால் பிற மதங்களின் மீது அவனுக்கு எந்த விதத்திலும் காழ்ப்புணர்ச்சி இருந்ததில்லை. இஸ்லாம் பற்றி, அல்லா பற்றி பாரதி என்ன நினைத்திருந்தான் என்பதை 'பாரதியும் இஸ்லாமும்' என்ற கட்டுரையின் வழி மாலன் பேசுகிறார்.
உ.வே.சா, கல்கி, புதுமைப் பித்தன், மௌனி, கி.ரா, அசோகமித்திரன், பிச்சமூர்த்தி, சு.ரா மற்றும் பலர்., இப்படி ஒன்றிரண்டு புத்தகங்களின் வழியாக மட்டுமே நான் அறிந்த அவர்களின் எழுத்துச் சூழல் எந்த மாதிரி இருந்தது என்று சொல்லியிருப்பது, நம் ரசனை சார்ந்து அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுகிறது.
நூலின் கடைசிக் கட்டுரை கலாசாரம் குறித்து ஜெயமோகனுடன் நடந்த 'சம்வாதம்'. இன்னது தான் கலாசாரம் என்று, கேள்விகளை அனுமதிக்காத வரையறைகளைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போன என் போன்றோருக்கு மாலன் எடுத்து வைக்கும் வாதங்கள் நிறைவைத் தருகின்றன. "கலாசாரம் என்பதைப் பாரம்பரியம் மாத்திரம் தீர்மானிப்பதில்லை. காலமும் சூழலும் செயல்களின் அர்த்தங்களைத் தீர்மானிக்கின்றன" என்ற கருத்தை அவர் விளக்குவதற்குச் சுட்டிக்காட்டும் உதாரணங்கள் சிறப்பு. மாலன் மீதுள்ள விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைத்து ஒரு முறை இந்தக் கட்டுரையை மனதிற்குள் யோசித்துப் பார்க்கலாம், பல கதவுகள் திறக்கும் வாய்ப்புள்ளது.
மாலன் எழுத்துக்களில் நான் எப்பவும் ரசிக்கும், சிலாகிக்கும் ஒரு அம்சம் அவருடைய கடைசி வரி. அவர் எழுத்துக்கள் எனக்கு அறிமுகமான நாளிலிருந்து அவர் கடைசி வரி என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் பார்ப்பதில் எனக்குக் கவனம் அதிகம். இந்த நூலும் என் ரசனைக்குத் தீனி போட்டிருக்கிறது. ஒன்றிரண்டாவது நான் இங்கு சொன்னால் தான் என் மனம் நிம்மதியடையும். "தொன்னையைக் கொண்டு பாயாசம் குடிக்கலாம். ஆனால் கடலைக் கடக்க முடியாது", "நம்பிக்கை தான் வாழ்க்கையையும் இலக்கியத்தையும் முரண்பாடுகளை மீறி நேசிக்கத் தூண்டுகின்றன. மனிதர்களையும் தான்". No substitute to you Maalan!