"சூதாடி "
ஆசிரியர் : பியோடோர் தஸ்தியோவ்ஸ்க்கி
நாவல்
250 பக்கங்கள்
ருசிய இலக்கியம்
வளரி பதிப்பகம்
ருஷ்ய இலக்கியத்தை எனக்கு அறிமுக படுத்தியமைக்கு எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்னன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை கூறிவிட்டு இந்த நாவல் விமர்சனத்திற்குள் செல்கிறேன் . ஒரு கதை ஒரு வாசகனுக்கு ஏன் இப்படி ஒரு ஈர்ப்பை தருகிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் , ஒரு வாசகன் அவன் வாழ்ந்த , அல்லது வாழ விரும்புகிற ஒரு வாழ்வை எங்கோ கதைகளில் ஒரு கதாபாத்திரம் வாழ்ந்து வருவதை நினைத்து அது தான் தான் என்று உருவகித்துக்கொள்கிறான் . இதனை முறைப்படி செய்யும் கதைகளே காலம் கடந்து நிற்கும் . அப்படி ஒரு கதையே இந்த சூதாடி நாவல் . அதனால் தான் இந்த நாவல் 19 நூற்றாண்டு தொடங்கி இன்று 21 ஆம் நூற்றாண்டு வரை வாசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த வித்தையில் பியோடோர் தஸ்தியோவ்ஸ்க்கி வித்தகர் . அவரை போல் மனித மனதையும் அதன் ஆழத்தையும் புரிந்த ஒரு எழுத்தாளரை காண்பது அரிது .தன் எழுத்துக்களில் ஒரு சிறு இடத்தில்கூட சமநிலையையும் . நியாயத்தையும் ,நீதியையும் , உண்மையையும் ,யதார்த்தத்தையும் அவர் மீறியதே இல்லை . ஏனெனில் நிஜ வாழ்க்கையிலும் அவர் அப்படியே . அவர் கதையில் வரும் பெரும்பான்மையான கதை மாந்தர்கள் அவர் நிஜ வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களே. சொல்லப்போனால் பல கதாபாத்திரங்கள் அவரையே பல இடங்களில் பிரதிபலிக்கும் .
ரஷ்யா ஜெனரல் ஒருவர் தன் குடும்பத்துடனும் , காதலியுடனும் , நண்பர்களுடனும் சேர்ந்து தொழில் ரீதியாக ஜெர்மனியில் வசித்து வருகிறார் . இவர்களுடன் ஒரு ஆசிரியனாக இருப்பவன் தான் கதையின் நாயகன் இவானோவிச் . இவருடைய நாட்குறிப்பு தான் இந்த நாவல் . அதனால் பல இடங்களில் பாத்திரங்களுக்கு பதில் அவர்களுடைய விழிகளும் , மனங்களும் மட்டுமே பேசிக்கொள்ளும் . ஜெனெரலுக்கு தன் அயல் நாடு நண்பர் தி கிரியை இடம் ஒரு பெரும் தொகை கடன்பட்டுள்ளார் ,அதனை ஈடுகட்ட ரஷ்யாவில் உள்ள தன் பூர்விக சொத்து தேவைப்படுகிறது .ஆனால் ,அது இவர் கையில் கிடைக்க படுக்கையில் இருக்கும் தன் அன்னை இறக்க வேண்டும் . அந்த இரங்கல் செய்திக்காக , கடிதத்தகிற்காக இங்கு இவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் . இதற்கிடையில் இவானோவிச் ஜெனெரலின் தங்கையை மிக ஆழமாக காதலிக்கிறான் . அவளுக்காக தன் உயிரையும் மாய்த்துக்கொள்ள துடிக்கிறான் . இந்நிலையில் ஒரு நாள் அந்த உடல்நலம் குன்றிய பாட்டி ஜெர்மனி வந்து இறங்குகிறாள் இவர்கள் இருப்பிடம் நோக்கி .அதைவிட பேரதிர்ச்சி ,தன் சொத்தில் இருந்தது ஒரு ரூபாயை கூட தன் மகனுக்கு கொடுக்க போவதில்லை என்று கூறுகிறாள் .இந்நிலையில் இவானோவிச் மட்டுமே அந்த பாட்டியிடம் நெருங்கி பழகுகிறான் . அந்த பாட்டியோ அந்த ஊரில் இருக்கும் சூதாட்ட விடுதிக்கு சென்று தான் கொண்டு வந்த அணைத்து செல்வத்தையும் விடாது சூதாடி அழித்துவிட்டு , மேலும் தன் நில பத்திரங்களையும் அடமானம் வைத்து சூதாடி தோற்றுவிடுகிறாள் .இவை அனைத்தும் இவானோவிச் கண்முன்னே நடந்து முடிகிறது .சூதாட்டதில் இவானோவிச்க்கு அனுபவம் இருந்தும் அவன் சொல்லியும் அவள் கேட்கவில்லை . இறுதியில் அவள் ருசியா திரும்பிச்சென்றுவிடுகிறாள் . இந்நிலையில் தன் காதலி பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னை விட்டு அந்த வெளிநாட்டவருடன் சென்று விடுவாளோ என்று ஐயப்பட்டு இவானோவிச் சூதாட்டத்தில் இறங்குகிறான் . ஒரு பைத்தியக்காரன் போல் சூதாடுகிறான் , இறுதியில் ஒரு பெரும் பணம் எடுத்துக்கொண்டு தன் காதலியிடம் செல்கிறான் ,ஆனால் ,அவளோ இப்படி பணம், சூது என்று மனம் தவறிப்போன இவனொவிச்சிடம் உண்மையான காதல் இருக்காது என்று கூறி விலகிச்செல்கிறாள் . இறுதியில் இவானோவிச் என்ன ஆனான் ? பணம் அவனை என்ன செய்தது ? இந்த உலகம் அவனுக்கு என்ன செய்தது ? என்பதே முடிவு .
சூதாடி - இந்த தலைப்பே நமக்கு இந்த நாவல் யாரை பற்றியது என்ற ஒரு கதையை நாம் வாசிக்கும் முன்னே நமக்கு சொல்லா���ல் சொல்லி விடுகிறது .ஆம் , இந்த கதையின் நாயகனான இவானோவிச் ஒரு சூதாடி தான் ,ஆனால் இக்கதை அவனை பற்றியது மட்டுமல்ல .ருஷ்ய மக்களை பிரதானமாக கொண்ட கதையாக இது இருந்தாலும் இக்கதை நிகழும் நிலம் என்னவோ ஜெர்மனியில் .இக்கதையில் ருஷ்ய நாட்டவர் மட்டுமல்லாமல் பிரான்ஸ்,இத்தாலி ,பிரிட்டிஷ் ,போன்ற பல நாட்டவர்கள் கதை நெடுக பயணிக்கின்றனர் தங்களுக்கே உரித்தான குணாதிசயங்களோடு .இதுவே இக்கதையின் பெரும் பலம் . வேறு நாட்டில் வேறு வேறு நாட்டவர் ஒன்றாக தொழில் ரீதியாக வசித்து வந்தாலும் ,அவர்களுடைய நடவடிக்கைகள் தங்கள் நாட்டின் போக்கிற்கு ஏற்ப பல இடங்களில் எட்டிப்பார்க்கின்றன .இதனை மிக அழுத்தமாகவும் , ஆழமாகவும் தன் கதையில் பதிவு செய்திருக்கிறார் தஸ்தியோவ்ஸ்க்கி.
- இர. மௌலிதரன்.