இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தீய சக்தி என்று ஹிட்லரை மிகச் சரியாக மதிப்பிட்டுவிடமுடியும். ஆனால் அவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ஹிட்லரின் யூத வெறுப்பு தெரியும். ஆனால் காரணம்? எவ்வளவு லட்சம் பேர், எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்டனர் என்பது தெரியும். ஆனால் எதற்காக? மனிதக் கற்பனைக்கு எட்டாத அளவுக்குக் குரூரமான, கச்சிதமான ஒரு கொலைத்திட்டத்தை வடிவமைக்கவேண்டிய அவசியம் என்ன? நாஜிகளால் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும்போது சாதாரண ஜெர்மானியர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? ஹிட்லர் மட்டும்தான் அனைத்துக்கும் காரணமா? ஹிட்லரை அவருடைய அத்தனை சிக்கல்களோடும் புதிர்களோடும் புரிந்துகொள்ள வேண்டுமானால் நாஜி ஜெர்மனி குறித்த மிக விரிவான ஒரு வரலாற்றுப் பார்வை தேவைப்படுகிறது. அத்தகைய ஒரு பார்வையை வழங்குவதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
ஹிட்லர் என்ற மாபெரும் சர்வாதிகாரத்தை சிறிய புத்தகத்தில் மிக எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
ஹிட்லர் அழிந்து முக்கால் நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும் அவரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டும் குறையவில்லை இந்த உலகத்திற்க்கு. மெயின் காம்ப் போன்ற பெரிய புத்தகத்தை படிக்க முடியா விட்டாலும் எளிய அழகு தமிழில் ஜெர்மானியின் சர்வாதிகாரத்தையும் 20ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த மோசமான (கேவலமான) அரசியல் ஆட்டங்களையும் எடுத்துரைக்கிறார் நூல் ஆசிரியர்.
எழுத்து நடையையும் விளக்கிய விதத்தையும் தான் பாராட்ட முடியும். மேற்படி புத்தகத்தின் கதாநாயகன் அருவருக்கத்தக்க, ஒரு கொடுங்கோலன்.
20ம் நூற்றாண்டின் சர்வ அதிகாரங்களை கொண்ட, புவியில் பல நாடுகளின் எல்லை கோடுகளை மாற்றிய அமைத்த தலைவன்.
தான் காலால் இட்ட வேலையை, தலையால் செய்யும் பெருங்கூட்டம் ஒன்றை கட்டியெழுப்பியவன். ஆம், "Us vs Them” விளையாட்டை விளையாடி, இனவாதம் உணர்ச்சி பொங்க பேசி, குரூர கொலை பாதகங்கள் கொத்து கொத்தாய் நடத்திய மனித வேட்டையாளன். பக்கபலமாக, "கோயபெல்ஸ்". போதுமே! ஹிட்லர் நினைத்ததை, ஜெர்மானியர்களின் ஆழ்முளைக்கு கொண்ட செல்ல.
எந்த காலத்திலும் நிலப்பரப்பு மீதான வேட்கை, மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் குறைவதே இல்லை. பூமியெங்கும் போர்கள் நடைபெறக் காரணத்தை தோண்டி சென்றால், கிடைக்கப் பெறும் பதில்கள், நிலங்களும் வளங்களும்தான்.
இரண்டு உலகப் போரும் ஜெர்மனியை மையப்புள்ளியாய் சுற்றியே நடந்தேறியது. முன்னது நாடு பிடிக்கும் நோக்கத்திற்கானது என்றால், பின்னது, நாடு பிடிப்பதில் ஆரம்பித்து தம் இனத்தை முன்னிறுத்தி, பிற இனத்தை அழித்தொழிப்பதற்கானது.
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு ஒரு பக்கமும், செர்பியா, ரஷ்யா, பெல்ஜியம், பிரான்ஸ், பிரிட்டன் இன்னொரு பக்கமுமாக, ஆஸ்திரிய இளவரசர் படுகொலையை முன்னிட்டும், நாடு பிடிப்பதை பின்னிட்டும் 1914ல் முதல் உலகப்போர் தொடங்கியது(1918 வரை). [1917 திரைப்படம் கண்முன் நிழலாடுகிறது] இங்கேயே இராணுவ வீரனான ஹிட்லர், ஒரப்புள்ளியாக நின்று இப்போரினை கொண்டாடுகிறார்.
முதல் உலகப்போரானது, ஐரோப்பிய கண்டதிற்கு உள்ளேயே நடந்து முடிந்திருந்தது. இரண்டாம் உலகப் போரோ(1939-45) [Dunkirk படம் நிழலாடுகிறது], ஹிட்லரின் நாடு பிடிக்கும் ஆசை ஐரோப்பா முழுவதையும் கபளீகரம் செய்தபின், ரஷ்யாவையும் பிடிக்க செல்லுமளவிற்கு போனது.
போதாதென்று, ஜெர்மனி,இத்தாலி,ஜப்பான் ஒருபுறமும், பிரிட்டன்,பிரான்ஸ்,அமெரிக்கா, ரஷ்யா மறுபுறமும் போர் புரிய, ஐரோப்பா மட்டுமல்லாமல் பிரிட்டன்/பிரான்ஸ்/இத்தாலிய காலனிகள் உள்ள ஆப்பரிக்க, தூரகிழக்கு ஆசிய நாடுகளையும் இப்போர் விட்டுவைக்கவில்லை.
இத்தனைக்கு பின்னும் ஹிட்லர் எனும் பெரும் சர்வாதிகாரியின் கை உள்ளது என்பதை நினைக்கையில் பெருமலைப்பே மிஞ்சுகிறது.
இல்லையென்றால், ஐரோப்பாவில் தொடங்கிய போருக்கு, அமெரிக்க-ஹவாய் பேர்ல் ஹார்பரும், ஜப்பான்-ஹிரோஷிமா/நாகசாகியும் நாசமாயிருக்க வேண்டியிருக்காது.
அவர் நேரே சர்வாதிகாரி ஆகிவிடவில்லை. அப்படி ஆகவேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கவில்லை. ஒரு மத்திய தர குடும்பத்தில் பிறந்த சராசரி மகனாக, மாணவனாக, வளர்ந்து ஓவியம் வரைதலில் ஆர்வமுள்ள இளைஞனாகவே இருந்திருக்கிறார்.
சிறு பொழுதில் தான் பார்த்து வளர்ந்த சம்பவங்களின் மூலம் ஜெர்மானிய வலதுசாரி தேசபக்தியும், யூத எதிர்ப்பையும் வளர்த்து கொண்டிருக்கிறார். மொத்த ஜெர்மனியும் அப்படித்தான் அந்நாளில் இருந்திருக்கிறது. கணன்று கொண்டிருந்த நெருப்பிற்கு, அணுகுண்டு கிடைத்ததை போல ஹிட்லர் வெளிவந்தார். நாஜிச வலதுசாரி கொள்கைகளை வார்த்து மக்களிடையே பரப்பினார்.
பேச்சு திறனும், அதன்மூலம் பெருவாரியான மக்களை கவர்ந்திழுப்பதும், அவருக்கு தேர்தல் வெற்றிகளை குவித்து கொண்டே இருந்தன. பின் அதுவே அடுத்தடுத்து வெற்றிகளை தேடிச் செல்ல, ஐரோப்பிய நில வரைபடங்கள் மாற்றம் கண்டன.
போர்கள் மூலம் பெரும் சேதம்கொண்ட ஜெர்மானிய தேசம், தான் தேர்ந்தெடுத்த தலைவனை தலைவனாகவே மரணிக்க அனுமதித்தது.
அவன் பல லட்சக்கணக்கான யூதர்களை கொன்றொழித்தவன் என்றாலும், அவனுக்கு பின்னால்,ஜெர்மன் மக்களும் இராணுவமும் துணை நின்றிருக்க காரணம் என்ன.., என்பதற்கு நுனிப்புல் பதிலே இப்புத்தகம்.
திரு. மருதன், இதுபோன்ற பல உலகதலைவர்களின் சரிதைகளை எழுதுவதில் தேர்ந்தவர். வர்ணணைகள் அபாரமாக இருக்கும். பல புத்தகங்களை ஆதாரங்களாக கொண்டு எளிமையானதாக எழுதுவதில் வல்லவர்.
ஹிட்லர் பற்றி அறிய, எளிய வகையினால் ஆன புத்தகம். வாசிக்க பரிந்துரைக்கிறோம்.!