இலக்கிய, சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு, வரலாற்றின் வழியாகக் காதலை அறிமுகம் செய்து கொள்ள வாய்ப்புண்டா? இந்தக் கேள்விக்கான விடைதான் இந்த நூல்
நூலைப் பெற புதிய தலைமுறை பதிப்பகம், 24, ஜி.என். செட்டி தெரு, சென்னை 600017. விலை ரூ160
வரலாற்றில் இடம்பெற்ற காதல் சம்பவங்களின் தொகுப்பு.புதிய தலைமுறை இதழில் 2011/2012 களில் ஒவ்வொரு வாரமும் கட்டுரையாக வெளிவந்தது.
சிலருக்குக் காதல் ஒரு வீரம்.சோர்ந்து கிடந்த மனதிற்கு உரமூட்டி புயலனெப் புறப்பட வைக்கும். சிலருக்குக் காதல் ஒரு கோழைத்தனம். பற்பல வெற்றிகளைக் கடந்தவனையும் கால் இடறிப் பாதாளத்தில் தள்ளும். சிலருக்குக் காதல் ஒரு வேதம். ஒன்றுமறியா உயிரையும் ஓர் உன்னத நிலைக்கு உயர வைக்கும். சிலருக்குக் காதல் ஒரு வக்கிரம். அறிவின் கண்கள் அனைத்தையும் கணப்பொழுதில் பூட்டிவிடும். காதல்-மார்கழியின் பனிக்காலையில் தேநீர்க்கோப்பையின் இதம் சிலருக்கு. அக்னி நட்சத்திரத்தின் வெம்மை சிலருக்கு. காதல் ஒரு காக்டெயில். இன்பம், ஏக்கம், சோகம், கோபம், உன்னதம், இயலாமை எல்லாம் சரிபங்கு இருக்கும் அதற்குள். இன்று நேற்று இல்லை.காதலென்றால் எப்பொழுதும் இப்படித்தான் என்று அறிய முடிகிறது இந்நூல் வாயிலாக.
அழகின் வனப்பிலும், இளமையின் ஊக்கத்திலும் காதலில் விழுந்து, பின் காரணமேயில்லாமல் பிரிய நேர்ந்த காதலையும் வரலாற்றில் காண முடிகிறது. வயது மதம் தாண்டி முன் இருபதுகளும், பின் நாற்பதுகளுக்கும் முளைத்த ருட்டி-ஜின்னா காதல், அரசியல் ஈடுபாடுகளால் அழிந்து விட்டதோவென்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, 'நான் உன்னை இன்னும் கொஞ்சம் குறைவாக நேசித்தால் ஒரு வேளை உன்னுடனேயே இருந்திருப்பேனோ, என்னவோ?' என்ற வரிகளின் மூலம் இல்லையென நிரூபிக்கின்றது. 14 ஆண்டுகளாய் தாமரையிலை நீராய் ஒட்டாது இருந்த நேருவின் காதல், கமலாவின் தைரியத்திலும், விடுதலைப்போராட்ட சுய சிந்தனைகளிலும் உடலோடு உயிராய் கடைசி வரை கலந்து நின்றதைப் படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. உண்மையான அன்புக்காக ஏங்கிக்கொண்டிருந்த வான்காவின் மனம், அவன் அன்புத்தேவதை 'கீ' காதலை மறுத்த போது பட்டிருக்கும் ரணத்தை உணர முடிகிறது ஆசிரியரின் எழுத்து நடையில். ஆபிரஹாம், ஜின்னா, நேரு, ஹிட்லர், மேரி, மண்டேலா, பீத்தோவன், நெப்போலியன், இந்திரா காந்தி என்று நாம் அறிந்த பிம்பங்களுக்கும் அவர்கள் கொண்ட காதலின் பிம்பங்களுக்கும் நிறைய முரண். பெரும்பாலும் அனைத்துச் சம்பவங்களும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
உயிரையும் தேசத்தையும் அதிகாரத்தையும் பெரிதாகப் பொருட்படுத்தாத காதல்கள், பிரிவின் துயரம் தாங்காது உடலை மரித்து உணர்வுகளை உயிர்த்து விட்ட காதல்கள், பாலைவன வெம்மையில் இறந்துகொண்டிருப்பவனுக்கு தொண்டையில் இறங்கிய முதல் குவளை நீராய் உயிரை உற்சாகமூட்டிய காதல்கள், சூழ்நிலைக்கைதிகளாய் சிறை பிடிக்கப்பட்ட காதல்கள், மோசமான வறுமையிலும் இம்மியளவு மெலியாத காதல்கள், அதீத அன்பும் உரிமை உணர்வும் இணைக்குப் புரியாமல் சோகமிழைத்து விட்ட காதல்கள், கட்டுப்பாடுகளைக் கடந்து தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்ட காதல்கள், பாலென்று நினைத்துக் கள்ளாய் மாறிவிட்ட காதல்கள் எனக் காதலின் அத்தனை பரிணாமங்களையும் தொகுத்திருக்கும் ஆசிரியருக்கு 'சபாஷ்' சொல்ல வைக்கிறது.
மாலன் அவர்களைப் போலவே அவரின் எழுத்துக்களும் எளிமை மற்றும் ரசனைக்குரியது. ஆரம்பப் பக்கங்களைப் படிக்கும் போது, இரவில் படிக்க ஏற்றதாகச் சற்றுப் பெரிய எழுத்துரு இருந்தால் நன்றாகயிருக்கும் என்ற சின்னச்சஞ்சலம் கூட மறந்து போகிறது அடுத்தடுத்த பக்கங்களில் ஆசிரியரின் எழுத்து நடையில்.
இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் வாசகரின் இதழில் லேசான புன்னகை நிச்சயம் அரும்பும். அதில் இனிமை இருக்கலாம். சோகம் இருக்கலாம். வியப்பு இருக்கலாம். காதலின் மீதுள்ள வெறுப்பு இருக்கலாம். 'இவ்வளவு தான் காதலா' என்ற ஏக்கம் இருக்கலாம். மரியாதை கலந்த ஆசிகள் இருக்கலாம். ஆனால் இவற்றில் ஒன்று கட்டாயம் இருக்கும்.
தூங்கப்பிடிக்காத இரவுகளுக்கு இனிய துணை இந்த 'உயிரே உயிரே'
வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த பல பெருந்தலைவர்கள் / பெரும் விஞ்ஞானிகளின் காதல் / திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாய் அமைந்திருந்ததா? அவர்களின் முன்னேற்றத்திற்கு துணைப்புரிந்ததா? என்பதை மிகவும் சுவாரஸ்யமான மொழிநடையில் கூறியுள்ளார் மாலன். லிங்கன், ஜின்னா, நேரு, துய்ப்ளே, எட்வர்ட், மேரி கியூரி, நெல்சன் மண்டேலா, காரல் மார்க்ஸ், ஹிட்லர், பீத்தோவன், நெப்போலியன், எவா, வான்கா, இந்திரா, காந்தி, ஐன்ஸ்டீன், ராஜிவ் ஆகியோரைப் பற்றி நாம் வரலாற்றில் அதிகம் படித்திராத அக வாழ்க்கையின் விவரணையை அழகுத் தமிழில் அற்புதமாக எழுதியுள்ளார். இவர்களுடைய கதையுடன் ஒரு சாதாரண பஞ்சாப் விவசாயிக்கும் பாகிஸ்தான் அகதி பெண்ணுக்குமான காதல் பற்றியும் எழுதியுள்ளார். ஒவ்வொரு அத்தியாயமும் அதற்குள் முடிவடைந்து விட்டதா என எண்ண வைக்கின்றன எழுத்து நடை.
படித்ததில் பிடித்த சில வரிகள்:
வாழ்க்கை புதிர் போன்றது. வரலாறு இரக்கமற்றது.
காதல் - இந்தமூன்றெழுத்துச் சொல், சாம்ராஜ்யங்களைக் கூட சரித்து விடும். ஆனால் மனிதர்களை நிமிர்ந்து நிற்கச் செய்யும்.
காதல் - இது ரோஜாவுடன் இருக்கும் முள்ளா அல்லது முட்களிடையே இருக்கும் ரோஜாவா?
மனைவி - குடும்பம் என்னும் ஆலமரத்தின் வேர். யாரும் அறியாமல் மண்ணுள் புதையுண்டு கிடக்கும் வேர். வேர்கள் இல்லாமல் விருட்சங்கள் இல்லை. ஆனால், நம் அம்மாக்களின் கதைகளை எப்போதேனும் எண்ணிப் பார்த்திருக்கிறோமா? பூக்களையும் கனிகளையும் போற்றுகிற தேசத்தில், வேர்களின் வரலாற்றை நினைப்பவர்கள் யார்?