மலைகள் ஒன்றையொன்று பின்னி உயரமாக, கரடுகளாக, திசைமாற்றும் பாதைகளாக சுழன்று இருப்பதைப்போல இந்த நாவலில் மனிதர்கள் வருகிறார்கள். மனித மனதின் துரோகங்களும், வெறுப்பும், போட்டியும் பொறாமையும், பழி உணர்ச்சியும் ஆபத்து மிகுந்த பள்ளங்கள் என்பதை நாவல் உணர்த்திச் செல்கிறது. அதில் அன்பும், காதலும் காட்டின் நடுவே ஓடும் நீரோடையாக வாழ்தலின் தரிசனத்தைக் காட்டுகிறது. நிலத்திற்கும், மலைக்கும் மாறி மாறிப் பயணிக்கும் ஒவ்வொரு அத்தியாயமும் மனித வாழ்வின் அலைச்சலையும் அதன் இடர்களையும் அசலாக வெளிப்படுத்துகிறது. கரையேற முடியாத துயர் ஆற்றின் மடியில் தத்தளிப்பவனுக்குக் கிடைக்கின்ற மரத்துண்டு இது. இந்த மலையேற்றத்தின்போது நாம் அடைகின்ற உணர்வை எளிதில் இறக்கி வைக்க முடியாது என்றாலும், அதன் உச்சியில் அமர்ந்திருக்கின்ற ஒன்றுக்காகதான் மனித வாழ்வு எல்லாக் காலத்திலும் வேண்டி நிற்கிறது.
சந்திரா தங்கராஜ் (பிறப்பு: ஜூன் 11, 1977) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள்.
நான் வாசித்த வரையில் கவிஞர்களின் புனைவெழுத்து தனித்துவமானவை. மலையேற்றம் அதற்கு மற்றுமொரு சான்று. தகப்பனைக் கண்டடைதல் தான் களம். 100 பக்கங்கள் மட்டும் கொண்ட நாவலில் வரும் உறவுகள் மற்றும் அவர்கள் நிகழ்த்தும் வன்முறைகள் அதன் தொடர்ச்சியான சாபம் என அனைத்தும் அடர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. வனமும் அதன் சித்திரமும் கவிஞர்களுக்குரிய விவரிப்புகளுடன் நெருக்கமாக இருந்தது. பட்டாம்பூச்சிகள் பற்றி வரும் இடம், கருஞ்சிறுத்தையை முதலில் பார்க்கும் பொழுது வரும் வர்ணனை, தனிமையையும் சாபத்தையும் வனத்தையும் இணைக்கும் இடங்கள் என சில தருணங்கள் இந்த சிறிய நாவலை மிகச்சிறந்த ஒன்றாக மாற்றுகின்றன.